மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை உடைத்ததில் பா.ஜ.க-வுக்கு முக்கிய பங்கு இருப்பதாக மக்கள் மத்தியிலும் எதிர்க்கட்சிகள் மத்தியிலும் கருத்து நிலவுகிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளில் பா.ஜ.க-வுக்கு எதிராகவே முடிவுகள் வந்ததாக சொல்லப்படுகிறது. மொத்தமுள்ள 48 தொகுதியில் பா.ஜ.க கூட்டணிக்கு 24 முதல் 28 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்று அக்கருத்துக்கணிப்புகள் கூறுகிறதாம். கடந்த மக்களவை தேர்தலில் 42 தொகுதியில் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றது. இம்முறை வெற்றி வாய்ப்பு பாதிக்கும் என்று கருத்து கணிப்பு வெளியாகி இருப்பதால் மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க. மூத்த மாநில தலைவர்கள் மற்றும் மாநில அமைச்சர்களை களம் இறக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலில் மூன்று மத்திய அமைச்சர்களை பா.ஜ.க.வேட்பாளர்களாக அறிவித்து இருக்கிறது.
மத்தியில் ஆட்சியமைக்க மகாராஷ்டிரா எம்.பி-க்களின் பங்கு மிகவும் முக்கியம் என்பதால் அம்மாநிலத்திற்கு பா.ஜ.க.முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்துள்ளது. இது குறித்து மாநில பா.ஜ.க. மூத்த தலைவர்கள் சிலர் ``மகாராஷ்டிராவில் தற்போது துணை முதல்வராக இருக்கும் தேவேந்திர பட்னாவிஸ் போன்ற தலைவர்களை, மும்பையில் போட்டியிட வைக்க கட்சி தலைமை தீவிரமாக பரிசீலித்து வருகிறது. தேவேந்திர பட்னாவிஸை மும்பையின் வடகிழக்கு தொகுதியிலும், வடமத்திய மும்பை தொகுதியில் மும்பை பா.ஜ.க.தலைவர் அசிஷ் ஷெலாரையும் நிறுத்த பரிசீலித்து வருகிறது. வடமத்திய மும்பை தொகுதியில் நடிகை ரவீணாவை நிறுத்தவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. கட்சியின் தேசிய செயலாளர் வினோத் தாவ்டேயை வடக்கு மும்பை தொகுதியிலும் நிறுத்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
தென்மும்பை தொகுதி மராத்தியர்கள் மற்றும் குஜராத்தியர்கள் அதிகமுள்ள தொகுதியாகும். எனவே அங்கு தற்போது சபாநாயகராக இருக்கும் ராகுல் நர்வேகரை வேட்பாளராக நிறுத்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது. பா.ஜ.க.வில் அதிருப்தி தலைவராக இருக்கும் பங்கஜா முண்டேயை, பீட் மக்களவை தொகுதியில் நிறுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தற்போது இத்தொகுதியில் பங்கஜா முண்டேயின் சகோதரி பிரித்தம் முண்டே எம்.பி.யாக இருக்கிறார்.
மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீலை புனே தொகுதியில் நிறுத்துவது குறித்தும், அமைச்சர் கிரிஷ் மகாஜனை ரேவர் தொகுதியில் களம் இறக்கவும், அமைச்சர் சுதிர் முங்கந்திவாரை சந்திராபூர் தொகுதியில் நிறுத்தவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கிரிஷ் மகாஜன் தான் போட்டியிட விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டாராம். மேலும் தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் ரக்ஷா கட்சேயை நிறுத்தும்படி பரிந்துரைத்துள்ளார். சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ரேவர் தொகுதியில் ரக்ஷா கட்சேயின் தந்தை ஏக்நாத் கட்சேயை நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இப்போது பா.ஜ.க.வால் பரிசீலிக்கப்பட்டு வரும் தலைவர்கள் யாரும் மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்ற கருத்தும் நிலவுகிறது. அவர்கள் மீண்டும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு அமைச்சர்களாகவே தொடர விரும்புகின்றனர். அவர்கள் கட்சி தலைமைக்கு தங்களது முடிவை தெரிவித்துவிட்டனர்ராம். ஆனால் கட்சி தலைமை கேட்பதாக இல்லை. மாநில அரசியலில் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் ஆக்டிவாக இருக்கும் மூத்த தலைவர்கள் மக்களவை தேர்தலில் போட்டியிடவேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாம். மத்தியில் மீண்டும் ஆட்சி என்பதில் மட்டுமே டெல்லியின் கவனம் இருக்கிறதாம்.
தேவேந்திர பட்னாவிஸும் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முதல்வராகலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தார். எனவே அவரும் மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் அவரையும் டெல்லிக்கு இழுக்க பா.ஜ.க தலைமை முடிவு செய்துள்ளது என்கிறார்கள். இதே போன்று சந்திரகாந்த் பாட்டீல், சுதிர் முங்கந்திவார், கிரிஷ் மகாஜன் ஆகியோரிடம் மக்களவை தேர்தலுக்கு தயாராகும்படி கட்சி தலைமை கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பங்கஜா முண்டேயும் தனது சகோதரிக்கு பதில் தான் போட்டியிட விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டாராம். டெல்லி தலைமை தேர்தல் நடவடிக்கையில் தீவிரம் காட்ட தொடங்கி இருக்கிறது. மீண்டும் மத்தியில் ஆட்சியில் அமர்ந்துவிட்டால், மாநில தேர்தலில் வெற்றி பெறுவது எளிதாகிவிடும் என கணக்கு போடுகிறதால் டெல்லி. அதனால் தான், தற்போது மாநில தலைமையில் முக்கிய பங்காற்றுபவர்கள் மக்களவைக்கு இழுக்கிறது. பாஜகவின் இந்த மூவ் கைக்கொடுக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்!
from India News https://ift.tt/hc8d6PY
0 Comments