வாகன போக்குவரத்து சத்தத்திலும், வேலை பரபரப்பிலும் அழுத்தத்துடன் இருக்கும் மாநகர மக்களை அதிலிருந்து விலக்கி ஒருநாள் மட்டும் உற்சாகமாக இருக்க ஏற்பாடு செய்யப்பட்டதுதான் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் வாகன போக்குவரத்து நிறுத்தப்படும். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். அதில் பொதுமக்களும் பங்களித்து ஆடிப்பாடி மகிழ வேண்டும் என்பதுதான் இந்நிகழ்ச்சியின் நோக்கம்.
5 ஆண்டுகளுக்கு முன் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி மதுரையில் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக நடந்த நிலையில், நேற்று நடந்த நிகழ்ச்சி முறையான திட்டமிடல் இல்லாமலும், அலட்சியமாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவரச் செய்யாமாலும் நடத்தப்பட்டதால் நிகழ்ச்சி பாதியில் ரத்து செய்யப்பட்டது.
மதுரை மாநகராட்சி சார்பில் ஹேப்பி ஸ்ட்ரீட் நடத்தவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் மக்கள் மத்தியில் பெரும் ஆர்வமாக ஏற்பட்டது. அதிலும், நடிகர் சூரி கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டதும் மக்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியது.
அண்ணா நகரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மதுரை மாநகராட்சிப் பகுதியிலுள்ள இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மட்டுமன்றி மாவட்டத்தின் அனைத்துப் பகுதியிலிருந்தும் ஏராளமானோர் குடும்பத்தினருடன் வந்திருந்தனர்.
காலை 7 மணிக்கு தொடங்கி 10.30 வரை நிகழ்ச்சி நடப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அண்ணாநகர் முதல் மேலமடை வரை ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் காலை 5 மணியிலிருந்து வர ஆரம்பித்ததால், அப்பகுதியில் கடுமையான நெருக்கடி ஏற்பட்டது. நடிகர் சூரி வந்துவிட்ட நிலையில் மேயர், அமைச்சர்கள் வருவதற்கு தாமதமாகிக் கொண்டிருந்தது. மக்களோ கூட்டத்தில் நசுங்கிக் கொண்டிருந்தனர்.
8.30 மணிக்கு மேல் அமைச்சர்கள் வந்திருந்த நிகழ்ச்சிக்கான லோகோவை வெளியிட்டு பேச, மக்கள் அதை கவனிக்க முடியாத வகையில் கூட்டத்தில் சிக்கி தவித்தனர். இதை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட சில கும்பல், பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட, பெண்கள் சத்தம் போட ஆரம்பித்தனர்.
நடிகர் சூரியை அருகில் சென்று போட்டோ எடுக்க கூட்டத்தினர் முண்டியடித்தாதால் நெருக்கடி ஏற்பட்டது. ஒரு சிலர் தடுப்புகளின் மீது விழுந்ததால் பலருக்கும் காயம் ஏற்பட்டது. வெய்யிலும் கடுமையாக தாக்க பல பெண்களுக்கு மூச்சு திணறல் மற்றும் மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு முகத்தில் தெளிக்க தண்ணீர் வசதி கூட ஏற்பாடு செய்யவிலை. தொடர்ந்து பல பெண்கள் மயக்க நிலைக்கு செல்ல ஆரம்பித்தனர். வெளியே வெளியே செல்ல முயற்சித்த பெண்களாலும், கூட்ட நெரிசலால் வெளியேற முடியவில்லை.
அது மட்டுமின்றி ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவார்கள் என்பது தெரிந்தும் குடிநீர் வசதி, சுகாதார வசதி, மருத்துவ அவசர உதவி மையம், ஆம்புலன்ஸ் என எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை. மக்கள் சுலபமாக வருவதற்கும், வெளியேறுவதற்கும் எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை. அதைவிட நிகழ்ச்சியில் என்னென்ன நடத்தப்பட உள்ளது என்பதையும் முடிவு செய்யவில்லை. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் சில இடங்களில் லத்தி சார்ஜூம் நடந்தது.
பெண்களும், குழந்தைகளும் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்துக் கொண்டிருப்பதைப் பற்றி கவலைப்படாமல் கலெக்டர், மேயர், மாநகராட்சி கமிஷனர், போலீஸ் அதிகாரிகள் அலட்சியம் காட்ட, நீண்ட நேரத்துக்குப்பின் அமைச்சர்கள் வந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். இதற்கு மேல் கட்டுபடுத்தமுடியாது என்று நினைத்த காவல்துறையினர் மாநகராட்சி கமிஷனரிடம் தெரிவிக்க அமைச்சர்கள் சென்ற அடுத்த நிமிடமே நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மாநகராட்சி நிர்வாகம், மாநகர காவல்துறையினரின் தவறான திட்டமிடலால்தான் இந்த மோசமான அனுபவம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from India News https://ift.tt/zeP1Igh
0 Comments