`ஊசலில் அண்ணாமலை பதவி' முதல் `குழம்பிப்போய் நிற்கும் ரத்தத்தின் ரத்தங்கள்’ வரை - கழுகார் அப்டேட்ஸ்

`ம.தி.மு.க மாநில மாநாடு மதுரையில் நடக்கும்’ என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், அது உண்மையில் நடந்தது விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வலையங்குளம் கிராமத்தில்தான். மாநாட்டில், முதன்மைச் செயலாளர் துரை வைகோவை முன்னிலைப்படுத்துவது, விருதுநகர் வேட்பாளர் அவர்தான் என்பதை அடையாளம் காட்டுவதற்காகத்தான் என்று பரவலாகப் பேசப்பட்டது. அதற்கேற்பவே எல்லாம் நடந்தன. ஆனால், ‘நான் எம்.பி தேர்தலில் நிக்கலைங்க...’ என்று மேடையில் திடீரென சொல்லிவிட்டார் துரை வைகோ. “மாநாட்டில் துரைக்குக் கொடுக்கப்பட்ட அதீத முக்கியத்துவமும், 'இனி ம.தி.மு.க துரை வைகோ கட்டுப்பாட்டில்தான் இருக்கும்' என்பதுபோல் மகனைப் புகழ்ந்து வைகோ பேசியதும் சீனியர்கள் மத்தியில் அதிருப்தியைக் கிளப்பிவிட்டிருக்கிறது.

‘ஏற்கெனவே எனக்கு எழுந்த எதிர்ப்பலை இப்போதுதான் அடங்கியிருக்கிறது. இதை மேலும் வளரவிட்டால், விருதுநகரில் போட்டியிடவே முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும்’ என்ற நினைத்ததாலேயே, `போட்டியிடவில்லை’ என்று சொல்லி அதிருப்தியைத் தற்காலிகமாகத் தள்ளிப்போட்டிருக்கிறார் துரை” என்கிறார்கள் மறுமலர்ச்சி ரத்தங்கள்.

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும், மேற்கு மண்டலப் பெண் தலைவருக்கும் இடையிலான லடாய் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அண்ணாமலை மேற்கு மண்டலத்துக்கு எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும், ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிவிட்டு வெளியூருக்குப் பயணப்பட்டுவிடுவாராம் அந்தப் பெண் தலைவர். சமீபத்தில் பிரதமரின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்காக அண்ணாமலை மேற்கு மாவட்டத்துக்கு வர, பதிலுக்கு பெண் தலைவரும் தனியாக ஒரு நிகழ்ச்சியை நடத்தி கெத்து காட்டியிருக்கிறாராம்.

நடைபயணத்தில் அண்ணாமலை

இந்த நேரத்தில், அ.தி.மு.க எனும் தேன்கூட்டில் கல்லெறிந்து, மொத்தத் தேனீக்களிடமும் கொட்டு வாங்கிக்கொண்டிருக்கிறார் அண்ணாமலை. கூட்டணியே வேண்டாம் என்ற நிலைப்பாட்டுக்கு அ.தி.மு.க வந்திருப்பதால், அவர்களைச் சமாதானப்படுத்தவாவது அண்ணாமலையின் பதவியைப் பறிக்க வேண்டும் என்ற குரல் பா.ஜ.க-வில் எழுந்திருக்கிறது. இதைச் சாக்காக வைத்து மாநிலத் தலைவர் பதவிக்கு காய்நகர்த்த ஆரம்பித்துவிட்டாராம் அந்தப் பெண் தலைவர்.

அ.தி.மு.க-விலிருந்து மொத்தமாகப் புறம் தள்ளப்பட்ட பன்னீர்செல்வம், தனது தரப்பை வலுப்படுத்த நிர்வாகிகளை நியமனம் செய்துவந்தார். கோர்ட்டும், தேர்தல் ஆணையமும் கைவிட்டதால் தனிக்கட்சி தொடங்கும் முடிவுக்கு வந்திருக்கிறார் பன்னீர். அதன்படி, கறுப்பு வெள்ளை சிவப்புக்கு நடுவே ஜெயலலிதாவும், எம்.ஜி.ஆரும் செங்கோல் ஏந்திக்கொண்டிருப்பது போன்ற கட்சிக்கொடியும் தயாராகிவிட்டது. அப்படி, பன்னீர் கட்சி தொடங்கினால், நம்மிடமிருக்கும் சமூக வாக்குகளை அவரே காலிசெய்துவிடுவார் என்று பதறிய டி.டி.வி.தினகரன், இரு தரப்புக்கும் நெருக்கமான திருவாரூர் புள்ளியிடம் பேசி விஷயத்தைத் தள்ளிப்போடச் சொன்னாராம்.

பன்னீர் செல்வம்

இப்போது அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி முறிவதாக எடப்பாடி அறிவித்துவிட்டதால், பா.ஜ.க தன்னிடம்தான் வருமென்ற நம்பிக்கையில் புதுக்கட்சி தொடங்குவதைத் தள்ளிப்போட்டிருக்கிறாராம் பன்னீர்.

‘தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் அநாகரிகப் பேச்சை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. அவர் பேசுவதெல்லாம் தலைமைக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. எனவே, பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை’ என ஜெயக்குமாரை வைத்து எடப்பாடி செப். 18-ம் தேதி அறிவித்துவிட்டார். அடுத்த நாளே, ‘இந்தக் கூட்டணி முறிவு குறித்து அ.தி.மு.க இரண்டாம் கட்ட தலைவர்கள் இனி பேச வேண்டாம்’ என்று கறார் உத்தரவு போட்டுவிட்டாராம் எடப்பாடி. ‘டெல்லியிலிருந்து யார் பேச வேண்டுமோ அவர்களாகவே வருவார்கள்.

எடப்பாடி பழனிசாமி

அதுவரை நாம் பொறுமையாக இருப்போம். அவர்களுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லையென்றால், அப்போது நாம் பேசிக்கொள்ளலாம்’ என்று காத்திருக்கிறார் எடப்பாடி. அதேநேரத்தில், இந்தக் கூட்டணி முறிவை ஐடி ஆட்களைவைத்து மட்டும் களத்தில் பேசிக்கொண்டேயிருக்க வேண்டுமென்றும் ரகசிய உத்தரவு போட்டிருக்கிறாராம் எடப்பாடி. இப்படி உத்தரவுமேல் உத்தரவை எடப்பாடி பறக்கவிடுவதால், கூட்டணி இருக்கா... இல்லையா என்று குழம்பிப்போயிருக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்!

தமிழக அரசுத் துறைகளிலேயே மயக்கத்தில் இருக்கும் துறைமீதுதான் ஏகப்பட்ட புகார்கள். பணியாளர்கள் அதிருப்தி ஒருபக்கம், குடிமக்களின் அதிருப்தி மறுபக்கம் என இரண்டு பக்கமும் அடி வாங்கிக்கொண்டிருந்தது அந்தத் துறை. இந்த அதிருப்தியை எப்படியாவது குறைத்தே ஆக வேண்டுமென்ற துடிப்போடு, அனுசரணையாக இருக்கும் அதிகாரி ஒருவரை அந்தத் துறைக்கு பொறுப்புக்கு கொண்டுவந்தது வாரிசின் டீம். இதற்குக் கைமேல் பலன் கிடைக்கத் தொடங்கியிருக்கிறதாம். முதற்கட்டமாக டிரான்ஸ்ஃபர் கேட்டு நின்ற அதிகாரிகளுக்கு கமிஷன் வாங்காமல் வேலையை முடித்திருக்கிறார் அந்த விஸ்வாச அதிகாரி.

அதேபோல, அடுத்தகட்ட டிரான்ஸ்ஃபருக்கும் துறை தயாராகிவருகிறதாம். `அப்பாடா... துறைக்குள் இருக்கும் அதிருப்தியைக் குறைச்சாச்சு...’ என்ற நிம்மதியோடு, தற்போது நீண்ட நாள்களாக இழுபறியில் இருக்கும் டெண்டரையும் வெளியிடத் தயாராகிறதாம் மயக்கத்துறை.



from India News https://ift.tt/cmz6u5x

Post a Comment

0 Comments