சென்னையில் சனாதனம் ஒழிப்பு மாநாடு செப்டம்பர் 2-ம் தேதி நடந்தது. அதில் கலந்துக்கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "கொசு, டெங்கு, கொரோனா, மலேரியா போன்றவற்றை எதிர்க்க கூடாது. அவற்றை ஒழிக்க வேண்டும். சனாதனமும் இப்படித்தான். சனாதனத்தை எதிர்க்காமல் ஒழிக்க வேண்டும். எங்கள் முதல் பணியே சமூக நீதிக்கு எதிராக இருக்கும் சனாதானத்தை ஒழிப்பதுதான்" எனக் குறிப்பிட்டார்.
இதற்கு இந்தியா முழுவதும் பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகளால் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்த நிலையில், அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ. 10 கோடி கொடுப்பதாக அறிவித்திருந்தார். மேலும், உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை வாளால் கிழித்து, தீயிட்டு கொளுத்தும் வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "சாமியாருக்கு ரூ.10 கோடி எப்படி வந்தது. அவர் உண்மையிலேயே சாமியார் தானா என எனக்கு சந்தேகமாக இருக்கிறது. என் தலையை சீவுவதற்கு ரூ10 கோடி தருவதாக தெரிவித்திருக்கிறார்... அப்படியெல்லாம் தரத் தேவையில்லை. 10 ரூபாய் சீப்பு கொடுத்தால் நானே எனது தலையை சீவிக்கொள்வேன்" எனக் கிண்டலாக பதிலளித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, "சாமியாரின் பேச்சு ஒரு வேடிக்கை. கலைஞர் ராமர் பாலம் குறித்து பேசும் போது ராமர் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தார் எனக் கேள்வி எழுப்பியபோதும், இந்து என்றால் அகராதியில் திருடன் எனப் பொருள் இருக்கிறது என்பதைக் குறிப்பிட்டபோதும், கலைஞர் நாக்கை அறுப்பவர்களுக்கு பரிசு எனக் குறிப்பிட்டார்கள். கருத்தை கருத்தால்தான் எதிர்கொள்ள வேண்டும்.
தலையை வெட்டிக்கொண்டு வா எனக் கூறுபவர் எப்படி சாமியாராக இருக்க முடியும்... இப்படி கேட்பவர் சாமியார் அல்ல ரெளடி, பொறுக்கி. சனாதானம் என்றால் என்ன என விளக்கிப் பேசுபவர்கள் யாரும் இல்லை. பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் எனக் கூறுவது எனது வேதம். பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை என்பதை மறுப்பவர்கள் எந்த நூற்றாண்டில் இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை" எனத் தெரிவித்தார்.
from India News https://ift.tt/uXNS5DA
0 Comments