அதிமுக: `கட்சிப் பெயர், கொடியைப் பயன்படுத்த தடை' கோரி இபிஎஸ் வழக்கு - ஓபிஎஸ் பதிலளிக்க உத்தரவு!

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமையைக் கொண்டுவந்த தீர்மானத்துக்குத் தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்த நிலையில், அ.தி.மு.க பொதுச்செயலாளராகத் தான் தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையத்துக்கு எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ``அ.தி.மு.க கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி, அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவது எனச் செயல்பட்டு வருகிறார்" என சென்னை உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமி

மேலும், ``பொதுச்செயலாளர் என என்னை தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் அங்கீகரித்திருக்கும் நிலையில், ஒருங்கிணைப்பாளர் என ஓ.பி.எஸ் தன்னைக் கூறிக்கொண்டு வருகிறார். இது தொண்டர்களிடையே குழப்பத்தை விளைவிப்பதாக இருக்கிறது.

எனவே, அ.தி.மு.க-வின் கட்சிப் பெயரையோ, இரட்டை இலை சின்னத்தையோ, கட்சியின் கொடியையோ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னீர்செல்வமும், அவரின் ஆதரவாளர்களும் `பயன்படுத்தக் கூடாது' என உத்தரவிட வேண்டும். அதேபோல இந்த பிரதான உரிமையியல் வழக்கு முடியும் வரை, அ.தி.மு.க கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை ஓ.பி.எஸ் தரப்பினர் பயன்படுத்த இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்திருந்தார்.

ஓபிஎஸ்

இந்த மனு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு இன்று விசாரணைக்கு  வந்தது. எடப்பாடி தரப்பில், ``இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வரை நான்கு முறை வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த வழக்குகளில் கட்சியிலிருந்து பன்னீர்செல்வம் உட்பட நான்கு பேரை நீக்கியது உறுதிசெய்யப்பட்டிருக்கும் நிலையில், கட்சியின் சின்னம், கொடி, லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி, கட்சியின் `ஒருங்கிணைப்பாளர்' எனக் கூறி வருகிறார் ஓ.பி.எஸ்" என வாதிடப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றம்

மனுவுக்கு பதிலளிக்க குறுகிய அவகாசம் வழங்க வேண்டும் என ஓ.பி.எஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்க பன்னீர்செல்வம் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 6-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.



from India News https://ift.tt/pbDOxg7

Post a Comment

0 Comments