மணிப்பூரில் இனத் துடைப்பு நடவடிக்கையா?! - குற்றச்சாட்டும் பின்னணியும்

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மெய்த்தி  சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு குக்கி பழங்குடியின மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக நடைபெற்ற பேரணி, பெரும் வன்முறையாக மாறியது. இதனையடுத்து சுமார் நான்கு மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே இரு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் குழுவினர் மணிப்பூருக்கு சென்று, அங்கு வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்துப் பேசினர்.

மணிப்பூர்

இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த கலவரத்தின் காரணமாக இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வெளி இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். மாநிலம் முழுவதும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் மனித நேயத்தையே கேள்விக்குள்ளாக்கி வருகிறது. குஜராத் இனக்கலவரத்தை போன்று, அப்பாவி மக்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் திட்டமிட்டு நடத்தப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இம்பாலில் இருந்து துடைத்தெறியப்பட்ட பழங்குடி மக்கள்:

மணிப்பூரின் மொத்த மக்கள் தொகையில் மெய்த்தி சமூக மக்கள், 53 சதவிகிதத்தினர் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் இம்பால் பள்ளத்தாக்கில்தான் வாழ்ந்து வருகின்றனர். அதேசமயம், குக்கி, நாகா இன மக்கள், மாநிலத்தின் மக்கள் தொகையில் 40 சதவிகிதம் உள்ளனர். இவர்கள், அடிப்படை வசதி கூட இல்லாத மலைப்பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். மே மாதம் வெடித்த கலவரத்தை தொடர்ந்து, இம்பால் பள்ளத்தாக்கில் வாழ்ந்து வந்த ஒரு சில குக்கி சமூக மக்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். வன்முறை சம்பவங்களால் வீடுகளைவிட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள், அரசின் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

மணிப்பூர்

இம்பாலின் நியூ லாம்புலேன் பகுதியில், சுமார் 300 குக்கி பழங்குடியின குடும்பங்கள் வசித்து வந்தன. அந்த குடும்பங்கள், மற்றொரு தரப்பினரின் தாக்குதலுக்கு இலக்காகலாம் என்பதால், அவா்களை வேறு இடத்துக்கு மாற்றும் நடவடிக்கையை மாநில அரசு மேற்கொண்டது. இறுதியாக நகரின் மையத்தில், கடைசியாக எஞ்சியிருந்த 5 பழங்குடியின குடும்பங்களைச் சோ்ந்த 24 போ் கடந்த சனிக்கிழமை (செப் 2) அதிகாலை, அவர்களின் வீடுகளில் இருந்து பாதுகாப்பு படை வீரர்கள், வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியுள்ளனர். அவர்களை குக்கி பழங்குடியினர் அதிகம் வாழும் காங்போக்பி மாவட்டத்தின் மோட்பங் பகுதிக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

மணிப்பூர் கலவரம்

இம்பாலில் பல ஆண்டுகளாக வசித்த தங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக, பழங்குடியின குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக ‘தி வயர்’ ஊடகத்திடம், “ஐம்பதுக்கும் மேற்பட்ட மாநில மற்றும் மத்திய படையை சேர்ந்தவர்கள் எங்களிடம், ‘மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுகளை மட்டுமே பின்பற்றுவதாக’ தெரிவித்தனர். அவர்களிடம் எதற்காக இந்த நடவடிக்கை என்று கேட்பதற்கு கூட அச்சமாகவே இருந்தது. எங்களது உடைமைகள் அனைத்தையும் பேக் செய்வதற்கு ஒரு மணி நேரத்துக்கும் குறைவாகவே கால அவகாசம் கொடுத்தனர். எந்த கேள்வியும் கேட்காமல் வாகனங்களில் உட்கார சொன்னார்கள்.

இப்போது நாங்கள் இம்பாலுக்கு வெளியே மோட்பங்கில் உள்ள நிவாரண முகாமில் இருக்கிறோம். நாங்கள் இந்திய குடிமக்கள். ஆனால், எங்கள் சொந்த வீட்டில் வாழ இந்திய அரசால் எங்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியவில்லையா? இது இந்திய அரசின் தோல்வி. எங்களில் பெரும்பாலோர் அவசர அவசரமாக வெளியேறியதால், யாராலும் பணம் எடுக்க முடியவில்லை. அதனால், இனி வரும் நாள்களில் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று தெரியவில்லை. எங்களது பாஸ்போர்ட் மற்றும் ஆதார் எங்கள் இடத்தில் இருக்கிறது. எங்கள் வீடுகள் எரிந்துவிடுமோ என்கிற அச்சம் எங்களிடத்தில் நிலவுகிறது. இதனால் எங்களின் வரும் காலம் என்ன என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது” என்று தங்களது இயலாமை மற்றும் ஆதகங்களை தெரிவித்துள்ளனர்.

மணிப்பூர் கலவரம்

நிலைமை இவ்வாறு இருக்க, இதன் மூலம் இம்பால் பள்ளத்தாக்கில் இன அழிப்பு முற்றிலுமாக நிறைவடைந்திருக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “இம்பாலில் வாழ்ந்து வந்த கடைசி 5 குக்கி குடும்பங்களை அதிகாரிகள், அவர்களது வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இதன் மூலம், மெய்த்தி  சமூக மக்கள் ஆதிக்கம் செலுத்தும் இம்பால் பள்ளத்தாக்கில் இனஅழிப்பு நிறைவடைந்துள்ளது தெரிய வருகிறது.

ப.சிதம்பரம்

இன அழிப்பை மாநில அரசு தலைமை தாங்கி நடத்தியுள்ளது. அரசமைப்புச் சட்டத்தின்படி மாநில அரசு நடப்பதாக மத்திய அரசு கூறுகிறது. இதை விட வெட்கக்கேடானது வேறு எதுவும் இருக்க முடியாது. சட்டத்திற்கு புறம்பாக இந்தளவுக்கு மோசமாக இறங்கியிருப்பது இதுவரை நடைபெறாத ஒன்று” என பதிவிட்டுள்ளார்.

கலவரத்தை கட்டுப்படுத்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி:

இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தின் மூத்த காவல்துறை கண்காணிப்பாளராக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கர்னல் நெக்டர் சஞ்சன்பாம் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மணிப்பூர் உள்துறை இணைச் செயலர் விடுத்துள்ள அறிக்கையில், ``மிகவும் சவாலான சூழ்நிலையில் துல்லியமான திட்டமிடல், முன்மாதிரியான துணிச்சல், தைரியமான நடவடிக்கையை மேற்கொண்ட ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கர்னல் நெக்டர் சஞ்சன்பாம் மூத்த காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த ஐந்து ஆண்டுகள் அவர் இந்த பதவியில் இருப்பார்” என கூறப்பட்டுள்ளது. கர்னல் நெக்டர் சஞ்சன்பாம், 2015-ஆம் ஆண்டு மியான்மரில் நடந்த ராணுவ படையின் துல்லிய தாக்குதல் எனப்படும் சர்ஜிகல் ஸ்டிரைக்கை வழிநடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்னல் நெக்டர் சஞ்சன்பாம்

மணிப்பூரில் மனித உரிமை மீறல்:

இதனிடையே மணிப்பூர் நிலவரம் தொடர்பாக ஐ.நா. வின் மனித உரிமை அமைப்பின் சிறப்பு குழு வெளியிட்ட அறிக்கையில், “மணிப்பூரில் தீவிரமான மனித உரிமை மீறல்கள் நடக்கிறது. வீடுகள் அழிப்பு, மக்கள் வெளியேற்றம் பாலியல் துன்புறுத்தல், தொந்தரவு மற்றும் மோசமான சூழ்நிலையில் வசிக்கின்றனர்” என தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள இந்தியா, “மணிப்பூரில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவுகிறது. இது தொடர்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. ஐ.நா. வின் கருத்துகளை முற்றிலும் நிராகரிக்கிறோம். இந்த கருத்து தவறானது. அனுமானத்தின் அடிப்படையில் அமைந்தவை. தேவையற்றவை. மணிப்பூரில் நிலவும் சூழ்நிலை மற்றும் இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை ஐ.நா. புரிந்து கொள்ளவில்லை” என்று பதிலளித்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



from India News https://ift.tt/2DK89nM

Post a Comment

0 Comments