'துணைவேந்தர் தேடுதல் குழு விவகாரம்' - முற்றும் ஆளுநர் ரவி, அமைச்சர் பொன்முடி மோதல்!

தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் பணியிடம் காலியாக இருக்கும் பட்சத்தில், அவரை தேர்வு செய்வதற்கு தேடுதல் குழு அமைக்கப்படும். அதில், பல்கலைக்கழக செனட் உறுப்பினர்கள், தமிழக அரசின் பிரதிநிதி ஒருவர், ஆளுநர் தரப்பில் ஒருவர் இடம்பெறுவர். இக்குழு துணைவேந்தர் பணிக்காக வரப்பெறும் விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியான மூவரின் பெயர்களை ஆளுநருக்கு பரிந்துரைக்கும்.

ஆளுநர் ஆர்.என்.ரவி

அதில் ஒருவரை ஆளுநர் நியமிப்பது வழக்கம். இதற்கிடையில் சென்னை பல்கலை, கல்வியியல் பல்கலை, கோவை பாரதியார் பல்கலை ஆகியவற்றில் காலியாக இருக்கும் துணைவேந்தர் பணியிடங்களை நிரப்புவதில் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தார், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. அதில், "பல்கலைக்கழக மானிய குழு பிரதிநிதி ஒருவரும் துணைவேந்தரை நியமனம் செய்வதற்கான தேடுதல் குழுவில் இருக்க வேண்டும்" என கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, "தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள்" எனத் தெரிவித்திருந்தார். மேலும் தமிழக உயர்கல்வித் துறை சார்பில் ஆளுநருக்கு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட விளக்கக் கடிதத்தில், "துணைவேந்தர் நியமனத்தில், யுஜிசியின் விதிகளை பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயம்.

சென்னை பல்கலை புதிய துணைவேந்தர் தாண்டவன்!

தேடுதல் குழுவில் யுஜிசியின் பிரதிநிதி ஒருவர் சேர்க்கப்பட வேண்டும் என்பது கட்டாயமில்லை" என தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் ஆளுநர் தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. அவர் சம்மந்தப்பட்ட மூன்று பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி உறுப்பினர்கள் கொண்ட 4 பேர் அடங்கிய தனித்தனிக் குழுக்களை துணை வேந்தர்களை தேர்வு செய்வதற்காக அமைத்து உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, "சென்னைப் பல்கலைக்கு தமிழக ஆளுநரின் பிரதிநியாக, கர்நாடக மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் பட்டு சத்யநாராயணா; தமிழக அரசின் பிரதிநிதியாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், மாநில திட்டக் குழுவின் உறுப்பினருமான கே.தீனபந்து; பல்கலைக்கழக செனட் பிரதிநிதியாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பி.ஜெகதீசன், யுஜிசி பிரதிநிதியாக, தெற்கு பிஹார் மத்தியப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஹெச்சிஎஸ் ரத்தோரும் நியமிக்கப்பட்டனர்.

பாரதியார் பல்கலை

கல்வியியல் பல்கலைக்கான குழுவில் தமிழக ஆளுநரின் பிரதிநியாக, யுஜிசி உறுப்பினர் பேராசிரியர் சுஷ்மா யாதாவா; தமிழக அரசின் பிரதிநிதியாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.அலாவுதீன்; பல்கலைக்கழக செனட் பிரதிநிதியாக தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டி.பத்மநாபன்; யுஜிசி பிரதிநிதியாக, தெற்கு பிஹார் மத்தியப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஹெச்சிஎஸ் ரத்தோரும் நியமிக்கப்பட்டனர்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்துக்கான குழுவில், தமிழக அரசின் பிரதிநிதியாக, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி டபிள்யூசி.டாவிதார், பல்கலைக்கழக சிண்டிகேட் பிரதிநிதியாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பி.துரைசாமி, பல்கலைக்கழக செனட் பிரதிநியாக பாரதியார் பல்கலை மற்றும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஜி.திருவாசகம், யுஜிசி பிரதிநிதியாக பெங்களூரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பி.திம்மேகவுடாவும் நியமிக்கப்பட்டனர். இவர்கள் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்காக துணைவேந்தர் பணியிடங்களுக்கு மூவரது பெயரை பரிந்துரைக்க வேண்டும்" என உத்தரவிட்டிருந்தார்.

யுஜிசி

இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் உயர்கல்வி துறையின் கீழ் 13 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. இப்பல்கலைக்கழகங்களுக்கென தனித்தனியே சட்டம் மற்றும் விதிகள் உள்ளன. இவற்றின்படி துணைவேந்தரின் பதவிக்காலம் முடிந்தவுடன் அதனை நிரப்ப தேடுதல் குழு அமைக்கப்பட்டு அதன்மூலம் துணைவேந்தர் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்படுவார். உயர்கல்வித் துறையின்கீழ் இயங்கும் பல்கலைக்கழக சட்டவிதிகளில், ஆளுநர், துணை வேந்தரை தேர்வு செய்யும் தேர்வுக்குழுவினை அமைக்க வழிமுறை இல்லை.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவிக்காலம் 17.10.2022 அன்றும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவிக்காலம் 30.11.2022 அன்றும் முடிவடைந்ததால், தேடுதல் குழு உறுப்பினர்கள் அந்தந்த பல்கலைக்கழகங்களின் விதிகளின்படி நியமனம் செய்யப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலோடு தமிழ்நாடு அரசிதழில் முறையே 20.09.2022 மற்றும் 19.10.2022 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது.

அமைச்சர் பொன்முடி - ஆளுநர் ஆர்.என்.ரவி

இதுவரையில் எந்த ஒரு ஆளுநரும் தன்னிச்சையாக தேடுதல் குழுவினை அமைத்ததில்லை. அதற்கு விதிகளில் வழிவகையும் இல்லை. தேர்வுக்குழு குறித்த விவரங்களை அரசு தான் அரசிதழில் வெளியிடும். ஆனால் தற்போது ஆளுநர் நடைமுறையில் உள்ள பல்கலைக்கழக சட்ட விதிகளுக்கு எதிராக தேடுதல் குழுவை தன்னிச்சையாக முடிவு செய்து அறிவிக்கை வெளியிட்டுள்ளார். ஆளுநரால் அமைக்கப்பட்டுள்ள இந்த தேடுதல் குழு முழுக்க, முழுக்க பல்கலைக்கழக சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு மாறானது.

அரசின் அலுவல் விதிகளின்படி அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட வேண்டும், ஆனால் ஆளுநர் தன்னிச்சையாக அறிவிக்கை வெளியிட்டது, மரபு மற்றும் விதிகளுக்கு முரணானது. தெலங்கானா மற்றும் குஜராத் மாநில பல்கலைக்கழகங்களில் உள்ளது போல் பல்கலைக்கழக துணைவேந்தரை தெரிவு செய்யும் அதிகாரம் அரசுக்கு அளிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதா சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இது நாள்வரையில் மசோதாவுக்கு ஆளுநரிடமிருந்து ஒப்புதல் பெறப்படவில்லை.

தமிழக அரசு

ஆளுநர் தன்னிச்சையாக பாரதியார், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை தெரிவு செய்வதற்கான தேடுதல் குழுவை அமைத்து வெளியிடப்பட்ட அறிக்கையினை அரசு சட்டப்படி எதிர்கொள்ளும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஆளுநர் நியமித்த உறுப்பினர்கள், தங்களது பணியை தொடங்காமல் இருந்தனர். மேலும் சமீபத்தில் ஆளுநர் மாளிகைக்கு சென்ற அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியானது.

இதற்கிடையில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் விவரங்கள் அடங்கிய அரசிதழை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதில், "குழுவின் ஒருங்கிணைப்பாளராக வேந்தர் சார்பில் கர்நாடக மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பட்டு சத்யநாராயணா, சிண்டிகேட் சார்பில் மாநில திட்ட கமிஷன் உறுப்பினர் தீனாபண்டு, செனட் சார்பில் பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜெகதீசன் ஆகியோர் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாரதியார் பல்கலை

அவர்கள் சென்னை பல்கலைக்கான புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான மூன்று பேர் கொண்ட பட்டியலை தேர்வு செய்வார்கள். அதை பல்கலையின் வேந்தர் என்கிற முறையில் ஆளுநருக்கு அனுப்பி வைப்பார்கள்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அரசிதழில், யுஜிசி பிரதிநிதியாக ஆளுநர் அறிவித்த தெற்கு பிஹார் மத்தியப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஹெச்சிஎஸ் ரத்தோர் தேடுதல் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால் புதிய பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

முன்னதாக கடந்த ஜூலையில் தமிழக பல்கலைக்கழகங்களில் இருக்கும் ஆட்சி மன்றக் குழு, கல்வி மன்றக் குழுவின் உறுப்பினர்களுடன் ஆளுநர் ஆர்.என். ரவி ஆலோசனை நடத்தினார். பிறகு வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், "தமிழக பல்கலைக்கழகங்கள் மிக மோசமான நிலையில் இருக்கிறது. பல பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் இல்லாதது அவற்றின் பணிகளைப் பாதிக்கிறது" என கூறப்பட்டிருந்தது. இதற்கு பதில் அளித்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, "தமிழகத்தில் சில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கு, சட்டப்படியான குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

யுஜிசி

எனினும், அந்தக் குழுவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இதுவரை ஒப்புதல் தரவில்லை. துணைவேந்தர்கள் தேடுதல் குழுவில் சட்டப்படி பல்கலைக்கழக உறுப்பினர், தமிழக அரசு உறுப்பினர், ஆளுநர் தரப்பில் ஒருவர் என 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், யுஜிசி சார்பில் ஒரு உறுப்பினரைச் சேர்க்க வேண்டுமென ஆளுநர் கூறுகிறார். அதற்கு பல்கலைக்கழக சட்டத்தில் இடமில்லை. தேர்வுக் குழுவில் தனது ஆதிக்கத்தைச் செலுத்த வேண்டும் என்பதற்காக ஆளுநர் இதை வலியுறுத்துகிறார்" என தெரிவித்திருந்தார். இவ்வாறு தொடர்ச்சியாக ஆளுநர்/ பொன்முடி இடையே நடந்து வரும் மோதலால் துணைவேந்தர் நியமனங்கள் மேலும் தாமதப்படுத்தும். அப்போது மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என குற்றம்ச்சாட்டுகிறார்கள் கல்வியாளர்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க துணை தலைவர் நாராயணன் திருப்பதி, "தேவையில்லாத சர்ச்சைகளை மாநில அரசு உருவாக்கக் கூடாது. மாணவர்களின் கல்வியில், இதுபோல் அரசியலை புகுத்துவது கண்டிக்கத்தக்கது. யுஜிசி-யின் நிதி ஆதாரங்களுடன் இயங்கக்கூடிய பல்கலைகளில் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினர் ஒருவர் இருக்க வேண்டும் என்பது கடைப்பிடிக்கப்பட வேண்டும். அதைத்தான் யுஜிசி கூறியிருக்கிறது. ஆளுநரும் அதைத்தான் செய்திருக்கிறார். கடந்த வாரம் இதேபோன்ற துணைவேந்தர் நியமன விவகாரம் மேற்குவங்காள உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

நாராயணன் திருப்பதி

அப்போது ஆளுநர், மாநில அரசு, யுஜிசி ஆகியோரை அவர்களுடைய தேர்வு குழுவுக்கான பட்டியலை கொடுக்க வேண்டும். நாங்களே தேர்வு குழுவை தயார் செய்து கொடுக்கிறோம்" என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த பிரச்னை நீதிமன்றம் வரை சென்று மேலும் காலதாமதம் ஆகும் பட்சத்தில் பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் சீர்கெடுவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. மாநில அரசு தனது பிடிவாதத்தை கைவிட வேண்டும். வேந்தர் தான் பல்கலையில் அதிகாரம் செலுத்துபவர் என்பதை உணர்ந்து கொண்டு, புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்" என்றார்.

தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் விளக்கம் கேட்டோம், "ஆளுநர் தான் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு பல்கலைக்கு எப்படி துணை வேந்தர் நியமிக்க வேண்டும் என்ற சட்ட விதிமுறைகள் இருக்கிறது. அதன்படி தான் நாம் செய்ய முடியும். யுஜிசியே ஒரு சட்டத்தை கொண்டுவந்தாலும் பல்கலையின் செனட் சிண்டிகேட், கவுன்சில் விவாதித்த பிறகு தான் அதை நிறைவேற்ற முடியும். எனவே தான் ஆளுநரிடம் நீங்கள் செய்திருப்பது தவறு என்று முறைப்படி தெரிவித்தோம்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

அவர் பிடிவாதம் காட்டினார். எனவே நாங்கள் சட்டப்படி செய்திருக்கிறோம். அவருக்கு அவமானப்படுகிறோம் என்று தெரியவில்லை. தலைப்பாகை கட்டி விட்டால் கிராமங்களில் ஆடுவது போல் அவர் ஆடிக்கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் ஆளுநர் பதவி மீது மரியாதையாக இருந்தார்கள். தற்போது இது ஒன்றும் இல்லாத பதவி என கொண்டு சென்று அசிங்கப்படுத்திவிட்டார். பாவம் வருத்தப்பட வேண்டியது தான்" என்றார்.



from India News https://ift.tt/Y9vTR41

Post a Comment

0 Comments