`மகனின் `பதவி வேண்டாம்’ உரை; நெகிழ்ந்த தந்தை’ - மதுரை மாநாடு மூலம் வைகோ சொல்லும் சேதி என்ன?!

"தமிழ்ச் சமுதாயத்துக்காக  பெரியார், அண்ணா வழியில் 60 ஆண்டுகளாக உழைத்து வருகிறார். மத்திய அமைச்சர் பதவியை ஏற்க வாஜ்பாய், அத்வானி கட்டாயப்படுத்தியும் மறுத்தவர். அவர் மீதான அன்பினால்தான் இவ்வளவு பேர் வந்துள்ளீர்கள். இதை பார்த்து இன்று நிம்மதியாக உறங்க செல்வார்" என்று துரை வைகோ, தந்தை வைகோ குறித்து சிலிர்க்க,

துரை வைகோ

"நான் நினைத்ததை அப்படியே நீ பேசிட்டே என்பார் கலைஞர், அதுபோல நான் நினைத்ததை என் மகன் துரை வைகோ பேசியுள்ளான், பதவி தேவை இல்லை என்று அவன் பேசியதை பார்த்து பெருமையாக உள்ளது..." என்று  வைகோ நெகிழ, தந்தை-மகன் பாசத்தை தொண்டர்கள் பார்ப்பதற்காக நடத்தப்பட்டதுபோல மதுரை மதிமுக மாநாடு நடந்து முடிந்துள்ளது என முனுமுனுக்கிறார்கள் நிர்வாகிகள் சிலர்.

அண்ணாவின் 115-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் மாநாட்டை அறிவித்த வைகோ, எதிர்கால அரசியல், வருகின்ற தேர்தலில் எடுக்க உள்ள கட்சியின் நிலைப்பாடு, இன்னும் பல அறிவிப்புகளை இந்த மாநாட்டில் அறிவிக்க உள்ளதாக தெரிவித்திருந்ததால், ம.தி.மு.க-வினர் மட்டுமல்ல, கூட்டணிக் கட்சியினரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், அது குறித்து பெரிய அளவில் பேசாமல் துரை வைகோவை போகஸ் பண்ணும் விதமாகவே மாநாடு நடந்தது என்கிறார்கள் மதிமுக நிர்வாகிகள் சிலர். .

துரை வைகோ

இது குறித்து நம்மிடம் பேசிய ம.தி.மு.க நிர்வாகிகள்,  "முதன்மைச் செயலாளரான துரைவைகோ கட்சியில் செயல்பட ஆரம்பித்து 3 ஆண்டு ஆகிவிட்டது. ஆனால், கட்சியின் மூத்த நிர்வாகிகளும், பல மாவட்டச் செயலாளர்களும் இன்னும் அவரை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. அதுமட்டுமின்றி தானும் முன்புபோல் ஆக்டிவாக இல்லை என்று உணர்ந்த வைகோ, 30 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு உருவாக்கிய கட்சியை அப்படியே மகனிடம் ஒப்படைத்துவிடவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டார். அப்படியே துரை வைகோவை வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதி எம்.பியாக்கிவிட வேண்டும் என்றும் நினைத்துள்ளவர், அதற்கான அறிமுக விழாவாகவும், கட்சியை இனி முழுமையாக வழி நடத்த போகிறவர் துரை வைகோதான் என்பதை கட்சியிலுள்ள மற்ற நிர்வாகிகளும், தி.மு.க உள்ளிட்ட கட்சியினரும் அறிய வேண்டும் என்பதற்காகவே இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளதாகவே தெரிகிறது.

தொழில் நிறுவனம் நடத்தி வந்த துரை வைகோ, 3 ஆண்டுகளுக்கு முன்புதான் கட்சிக்குள் என்ட்ரி ஆனார். ஆனால், அவர் வருகை மூத்த நிர்வாகிகள் சிலருக்கு பிடிக்கவில்லை. புலவர் செவந்தியப்பன் உள்ளிட்ட 5 மாவட்ட செயலாளர்கள் கட்சியை விட்டு வெளியேறினார்கள். ம.தி.மு.க-வை தி.மு.க-வோடு இணைக்க துரை வைகோ பேரம் பேசி வருகிறார் என்ற குற்றச்சாட்டையும் வைத்தார்கள். கணேசமூர்த்தி, மல்லை சத்யா போன்றவர்கள் கட்சிக்குள் இருந்துகொண்டே தங்கள் அதிருப்தியை தெரிவித்து வந்தார்கள்.

மாநாட்டில் வைகோ-துரை வைகோ

வயதாகிவிட்டதால் உடல் முன்புபோல் ஒத்துழைக்காதததால், தான் கஷ்டப்பட்டு உருவாக்கிய இயக்கத்தின் நிர்வாகத்தையும் வழி நடத்தும் பொறுப்பையும் வேறு யாருக்கோ வழங்க வைகோவுக்கு மனமில்லை. அதன் விளைவாகவே கட்சிக்குள் சலசலப்பு இருந்தாலும் அதைப்பற்றி கண்டுகொள்ளாமல் முதன்மைச்செயலாளர் பதவியில் துரை வைகோவை ஏற்கனவே அமர வைத்தார். கட்சி விளம்பரங்களில், நிகழ்ச்சிகளில் துரை வைகோவை முன்னிலைபடுத்த தொடங்கினர். அதற்கு தலைமையில் இருந்து எதிர்ப்பு ஏதும் இருக்கவில்லை.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்று அல்லது இரண்டு தொகுதிகள் தி.மு.க ஒதுக்கினாலும் மோதல் போக்கை ஏற்படுத்தாமல் பாதுகாப்பான விருதுநகர் தொகுதியில் துரை வைகோவை நிறுத்துவதென்று முடிவும் செய்துவிட்டார் போல. அதற்கெல்லாம் முன்னோட்டமாகத்தான் இந்த மாநாடு.

வேறு மாவட்டங்களில் மாநாட்டை நடத்த நிர்வாகிகள் ஒத்துழைப்பு இல்லையென்பதால் தன் தீவிர விசுவாசியான மதுரை தெற்குத்தொகுதி எம்.எல்.ஏ பூமிநாதன் மூலம் மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்தார். கடந்த ஒருமாதமாக கடுமையாக பணியாற்றி அ.தி.மு.க மாநாடு நடத்திய அதே இடத்தில் சிறப்பாக மாநாட்டை நடத்தி முடித்துள்ளனர். இதற்காக வெளியிட்டப்பட்ட விளம்பரங்கள், சுவரொட்டிகளில் அனைத்திலும் வைகோவுக்கு இணையாக துரை வைகோ இருந்தார்.

மதிமுக மாநாடு

மாநாட்டு உரையில் திராவிட இயக்க அரசியலால் தமிழகத்தில் ஏற்பட்ட மாற்றத்தையும், பா.ஜ.கவின் அரசியலையும், சனாதனம் குறித்தும் பேசிய துரை வைகோ, ‘வருகின்ற நாடாளுமன்றத்தேர்தலில் விருதுநர், திருச்சியில் போட்டியிடபோவதாக பேசி வருகிறார்கள், நான் போட்டியிடப் போவதில்லை, எனக்கு இந்த இயக்கம் கொடுத்த பதவி கூடத்தேவையில்லை, மதிமுக தொண்டன் என்ற அடையாளம் போதும்’ என்று உணர்ச்சிவசப்பட்டு பேச, வந்திருந்த தொண்டர்கள் ‘நீங்கள் போட்டியிட வேண்டும்’ என்று கோஷமிட்டனர்.

 வைகோ பேசும்போது தன் அரசியல் பயணத்தை நெகிழ்ச்சியாக பேசிவந்தவர், மூன்று வருடங்களுக்கு முன் தனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனபோது, தனக்கு தெரியாமலேயே கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தமிழகம் முழுக்க சுற்றி வந்து கட்சியினரை உற்சாகப்படுத்திய மகனின் செயல்பாட்டையும், அவரது மாநாட்டு பேச்சையும் சிலாகித்து பேசி மாநாட்டை நிறைவு செய்தார்.

 கட்சி நிர்வாகிகள் அனைவரும் துரை வைகோவுடன் படம் எடுக்க போட்டி போட்டனர். பரிசுகளை அளித்தனர். அங்கிருந்து கிளம்பும்போது வாகனத்தின் உள்ளே வைகோ அமர்ந்துகொள்ள மேலே நின்றுகொண்டு அனைவருக்கும் கையசைத்தபடி துரை வைகோ சென்றதன் மூலம் மாநாட்டின் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டார் வைகோ." என்கிறார்கள்.



from India News https://ift.tt/oRATvcQ

Post a Comment

0 Comments