`விரும்பிய நேரத்தில் வாழ்க்கைத் துணையை மாற்றிக்கொள்ளும் லிவிங் டுகெதர் உறவு முறையானது, சமுதாயத்தின் ஆரோக்கியத்தைக் கெடுக்கிறது. இந்திய திருமண வரைமுறைகளை கேள்விக்குள்ளாக்குகிறது’ என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் சஹரன்பூரில், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 19 வயது பெண்ணுடன் லிவிங் டுகெதர் முறை உறவில் அத்னன் என்பவர், ஒரு வருடத்திற்கு மேல் வசித்து வந்துள்ளார். இதனால் கர்ப்பமான அப்பெண்ணை, தான் அளித்த வாக்குறுதிப்படி அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இதையடுத்து, பாதிக்கப்பட்ட அப்பெண் அளித்த புகாரின் பேரில், கடந்த ஏப்ரல் மாதம் அத்னன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதான அத்னன், ஜாமீன் கேட்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
அவரது மனு மீதான விசாரணையின்போது கருத்து தெரிவித்த அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சித்தார்த், ``வெளித்தோற்றத்தில் லிவிங் டுகெதர் உறவு மிகவும் கவர்ச்சிகரமானதாகத் தெரிகிறது, இளைஞர்களைக் கவர்ந்திழுக்கிறது.
ஆனால், காலப்போக்கில் அந்த உறவுக்கு சமூக அங்கீகாரம் இல்லை என்பதை படிப்படியாக உணரும்போதுதான் அதன் விளைவுகளையும் யோசிக்கிறார்கள்.
ஒருவருக்கு திருமணக் கட்டமைப்பு தரும் பாதுகாப்பு, சமூக அங்கீகாரம், முன்னேற்றம் மற்றும் ஸ்திரத்தன்மை போன்றவை, லிவிங் டுகெதர் உறவு முறையில் ஒருபோதும் கிடைப்பதில்லை. இத்தகைய உறவுமுறையானது திருமண வடிவமைப்பையும், குடும்ப முறையையும் அழிப்பதாக இருக்கிறது.
இந்தியாவில் திருமண நடைமுறை என்பது காலங்காலமாக நீண்ட நெடிய கலாச்சார, பண்பாடு, பழக்க வழக்க மரபுகளோடு இணைந்து கட்டமைக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. அதே நேரம், விரும்பிய நேரத்தில் வாழ்க்கை துணையை மாற்றிக்கொள்ளும் லிவிங் டுகெதர் உறவு முறையானது, சமுதாயத்தின் ஆரோக்கியத்தைக் கெடுக்கிறது. இந்தியத் திருமண வரைமுறைகளை கேள்விக்குள்ளாக்கிறது. ஒவ்வொரு முறையும் தனக்கான பார்ட்னரை மாற்றிக்கொள்வது மிருக இயல்பை ஒத்தது’’ என்று தெரிவித்து, அந்த நபருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
from India News https://ift.tt/moRsP2q
0 Comments