அமலாக்கத்துறை புதிய பொறுப்பு இயக்குநராக 'ராகுல் நவீன்'…மீண்டும் என்ட்ரி கொடுப்பாரா ’எஸ்.கே.மிஸ்ரா’?

அமலாக்கத்துறையின் இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ரா பதவிக் காலம் கடந்த செப்டம்பர் 15-ம் தேதியுடன் முடிந்திருக்கும் நிலையில், தற்போது புதிய பொறுப்பு இயக்குநராக ராகுல் நவீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த ராகுல் நவீன்?

1993-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏற்கனவே, 2019-ம் ஆண்டு முதல் அமலாக்கத்துறை சிறப்பு அதிகாரியாக செயல்பட்டவர். அந்தத் துறையின் சீனியர் அதிகாரியாகவும் இருந்திருக்கிறார். இந்திய வருவாய் துறையின் கூடுதல் அதிகாரியாகப் பணியாற்றியவர். முழு நேர இயக்குநர் நியமிக்கும் வரை, பொறுப்பு இயக்குநராக ராகுல் நவீன் செயல்படுவார். இவரும் முன்னாள் இயக்குநர் எஸ்.கே.மிஸ்ரா ஆகியோர் நெருக்கமான நட்பில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்.கே மிஸ்ரா பதவியிலிருந்து பதியப்பட்ட வழக்குகளைத் தொடர அவருக்கு நெருக்கமான மற்றும் அதுபற்றி விவரங்கள் தெரிந்தவர்களாக இருப்பதும் அவசியம் என்னும் அடிப்படையில் அதே துறையில் இருந்தவர் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்கிறார்கள்.

ராகுல் நவீன்- நியமன கடிதம்

ஏஸ்.கே.மிஸ்ரா பணி பின்னணி...

கடந்த 2018-ம் ஆண்டு அமலாக்கத்துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டார் ஏஸ்.கே.மிஸ்ரா. அவருடைய பதவிக்காலம் 2020-ம் ஆண்டு, முடிவடைந்தது. அதன்பின் அவரின் பணிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. மீண்டும் மூன்றாவது முறையாக இந்த ஆண்டு நவம்பர் வரை பணிக்காலத்தை நீட்டிக்க மத்திய அரசு முனைந்தபோது, அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதில் தீர்ப்பளித்த  நீதிபதிகள் ‘அமலாக்கத்துறையின் இயக்குநரான எஸ்.கே மிஸ்ராவின் பதவி நீட்டிப்பு சட்டவிரோதமானது’. எனவே, செப்டம்பர் 15-ம் தேதி வரை மட்டுமே பதவியில் இருக்க அனுமதிப்பதாக தீர்ப்பளித்தது.

சஞ்சய் குமார் மிஸ்ரா

அவரின் பணிக்காலம் முடிந்திருக்கும் நிலையில் புதிய இயக்குநராக ராகுல் நவீன் நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் எஸ்.கே.மிஸ்ராவுக்குப் புதிய பதவி வழங்கப்படும் என்னும் பேச்சு அடிபடுகிறது.

எஸ்.கே. மிஸ்ரா:

அமலாக்கத்துறையின் வலைதளத்தில் குறிப்பிட்ட தரவுகள்படி, “2018-2019 ஆண்டுகள் அமலாக்கத்துறை ’195’ வழக்குகள் மட்டுமே பதிந்திருந்தது. ஆனால், மிஸ்ரா நியமிக்கப்பட்ட 2021-2022 ஆகிய ஆண்டுகளில் ’1,180’ வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 2004-2014 மற்றும் 2014-2022 ஆகிய காலகட்டத்தை ஒப்பிடுகையில் பணமோசடி வழக்குகள் கடைசி 8 ஆண்டுகளில் பல ஆயிரம் வழக்குகள் அதிகமாக பதியப்பட்டுள்ளது”. இதற்கு முக்கியப் பங்காற்றியவர் எஸ்.கே. மிஸ்ரா என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி பல முக்கிய விசாரணைகளை மேற்கொண்டவர் தான் எஸ்.கே.மிஸ்ரா. மத்திய அரசுக்கு சாதகமாகப் பணியாற்றிய மிஸ்ராவை மீண்டும் அரசு பொறுப்புக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சித்து வருவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.

குறிப்பாக, அனைத்து விசாரணை அமைப்புகளையும் ஒருங்கிணைத்து ‘தலைமை விசாரணை அதிகாரி’ (Chief Investigation Officer) என்னும் புதிய பதவியை உருவாக்கி, அதில் மிஸ்ராவை மீண்டும் அமர காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராதா கிருஷ்ணன்

மீண்டும் எஸ்.கே.மிஸ்ராவுக்குப் பதவி?

இது குறித்து  பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது, “நாட்டின் பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தலைக் கண்காணிக்க என்.எஸ்.ஏ (NSA) என தலைமை அமைப்பு இருப்பதுபோல், நிதி சார்ந்த அமைப்புகளான ஐ.டி, அமலாக்கத்துறை ஆகியவற்றைக் கண்காணிக்க ’தலைமை அதிகாரியை’ நியமிக்கவிருப்பதாக தகவல் வந்தது. அதற்கும் மிஸ்ராவை தலைவராக அமர்த்துவார்கள் என சொல்லப்பட்டது. ஆனால், அதற்காக எந்த மசோதாக்கள் கொண்டுவரவில்லை. ஓய்வு பெற்றவர்களை அரசுப் பணியில் நியமிக்கவே கூடாது. மத்திய அரசு எந்த விதிகளுக்கும் கட்டுப்படுவதில்லை. இதைத் தொடர்ந்து செய்வதால், கீழ்மடை வரை பணி  உயர்வு பாதிக்கப்படுகிறது. ஆனால், அதைப் பற்றியெல்லாம் அரசாங்கம் கவலைப்படுவதில்லை. அதற்கான சட்டத்தை மட்டும் இயற்றி பார்லிமெண்டில் நிறைவேற்றுகின்றனர். அதனால், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தால் கூட வழக்கு நிற்பதில்லை.

 இதைப் பல துறைகளில் மத்திய அரசு செய்து வருகிறது. அவர்களுக்கு தகுந்தார்போல் செயல்படும் அதிகாரிகளாக இருந்தால் மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. எனவே, எஸ்.கே.மிஸ்ராவுக்கு மீண்டும் பொறுப்பு வழங்கினாலும் ஆச்சரியப்பட ஒன்னுமில்லை” என்றார்.



from India News https://ift.tt/quZEe3w

Post a Comment

0 Comments