நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி போலீஸில் புகாரளித்த விவகாரம் ஒருபுறம் பெரும் சர்ச்சையாகிவரும் நிலையில், மறுபக்கம் சில நிபந்தனைகள முன்வைத்து தி.மு.க-வை ஆதரிக்க தயார் எனப் பேசி அரசியல் நெருப்பைப் பற்ற வைத்திருக்கிறார் சீமான். `ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட்டால், அவரை வீழ்த்த தி.மு.க-வே களமிறங்கினால், அவர்களுக்கு ஆதரவளிப்பேன்’ என அவர் பேசியதையும் விஜயலட்சுமி விவகாரத்தையும் முடிச்சு போட்டு விமர்சிக்க தொடங்கியிருக்கிறது தமிழ்நாடு பா.ஜ.க.
தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, ``ஒரு பெண் புகார் கொடுத்ததற்காக சீமான் பயந்துவிட்டார். தி.மு.க-வை பங்காளி என்று கூறுவது தி.மு.க-வின் ’பி’ டீம் சீமான் என நிரூபணம் ஆகிவிட்டது. சீமான் இப்படி பல்டி அடிப்பார் என கனவில்கூட நான் நினைக்கவில்லை." என விமர்சித்துள்ளார்.
நம்முடன் பேசிய தமிழ்நாடு பா.ஜ.க-வின் மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன், ``மோடி எதிர்த்து தி.மு.க வேட்பாளரை களமிறக்கினால் நான் ஆதரவளிப்பேன் என சீமான் பேசியுள்ளாரே... ராமநாதபுரத்தில் மோடி போட்டியிடுகிறார் என பா.ஜ.க இதுவரை அறிவித்துள்ளதா... தமிழ்நாடு பா.ஜ.க-வினர் யாராவது அப்படி பேசிவருகிறார்களா... உறுதியாகாத ஒரு செய்தியை வைத்துக் கொண்டு நான் எதிர்த்து நிற்பேன்,
தி.மு.க-வுக்கு ஆதரவளிப்பேன் எனப் பேசிக் கொண்டிருக்கிறார் சீமான். சொல்லப்போனால் தி.மு.க-வுக்கு சமாதான தூதுவிடுகிறார். விஜயலட்சுமி விவகாரத்தில் தி.மு.க அரசு நம்மை கைது செய்துவிடுமோ என்ற அச்சத்தில்தான் இவ்வாறெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார் அவர். சீமானின் பேச்சின் மூலம் அவருக்குள் இருக்கும் பயம் வெளிப்படுகிறது. அவர் சரண்டர் ஆவதற்கு மோடி போட்டியிடுகிறார் எனப் பேசி வருகிறார்” என்றார் காட்டமாக
நம்முடன் பேசிய அரசியல் பார்வையாளர்கள் சிலர் ``சீமான் தி.மு.க-வை ஆதரிக்கிறேன் எனச் சொன்னாலும் இதற்குள் பல அரசியல் வியூகங்கள் இருப்பதாகவே பார்க்க வேண்டும். காவிரி விவகாரத்தையும், இஸ்லாமிய விவகாரத்தையும் முன்னிறுத்தி தி.மு.க-வுக்கு நெருக்கடி தரவே இவ்வாறு பேசுகிறார்” என்கிறார்கள்.
கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில்தான் சீமான் இவ்வாறு பேசுகிறாரா என நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை செயலாளரும் மத்திய சென்னை மக்களவை தொகுதி உறுப்பினருமான பாத்திமா பர்கானா-விடம் கேட்டோம் ``தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கே அஞ்சாதவர் சீமான், இந்த அவதூறு வழக்குக்கா அஞ்சப்போகிறார்..? சிறை, வழக்கு, அவதூறுகளை கண்டு துவண்டு போகிற கட்சியல்ல நாம் தமிழர். இந்த இழிவான செயலை தூண்டிவிடுவதே தி.மு.க-வினர் என மேடைக்கு மேடை பேசிவரும் நாம் தமிழர் கட்சியை பார்த்து தி.மு.க மீது அச்சத்தில் இருக்கிறோம் எனச் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.
நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் அரசியலைவிட மக்கள் அரசியலே முக்கியம் என்பதால்தான் இஸ்லாமிய சிறை கைதிகளை விடுதலை செய்யும் பட்சத்திலும் காங்கிரஸ் கட்சியை கூட்டணியை விட்டு வெளியேற்றும் பட்சத்திலும் ஆதரவு என சீமான் பேசியிருக்கிறார். ராமநாதபுரத்தில் மோடியை தோற்கடிக்க தி.மு.க-வின் பகையையும் கட்சியின் நலனை கடந்து மோடிக்கு எதிராக நிற்கும் வேட்பாளரை ஆதரிப்போம் என நாங்கள் பேச ஆரம்பித்ததும் பா.ஜ.க-வினர் தான் அச்சத்தில் ஏதேதோ உளறிக் கொட்டுகிறார்கள்” என்றார் சூடாக!
from India News https://ift.tt/WoNd6YQ
0 Comments