மகாராஷ்டிரா: 13 எம்எல்ஏ-க்கள் மட்டுமே ஆதரவு... சரத் பவாரிடமிருந்து கட்சி, சின்னம் பறிபோகிறது?

சரத் பவார் தன்னுடைய அண்ணன் மகன் அஜித் பவார் உட்பட 40 எம்.எல்.ஏ-க்களின் பதவியைப் பறிக்க வேண்டும் என்று கோரி தேர்தல் கமிஷனில் மனு கொடுத்திருப்பதன் மூலம் சரத் பவாரிடம் 13 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இருப்பது தெரியவந்திருக்கிறது.

மகாராஷ்டிராவில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி, மாநில துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் ஜூலை தொடக்கத்தில் இரண்டாக உடைந்தது. அஜித் பவாரும், அவரது ஆதரவாளர்கள் எட்டு பேரும் திடீரென ஜூலை 2-ம் தேதி மாலையில் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். அஜித் பவார் தங்களது அணிக்குப் பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருப்பதால் தங்களுக்கு கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று கோரி தேர்தல் கமிஷனில் மனுவும் கொடுத்திருக்கிறார். இதனால் அஜித் பவார், சரத் பவார் தரப்புக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

அஜித்பவார்

அஜித் பவார் ஆரம்பத்திலிருந்து தங்களது அணிக்கு 40 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருக்கிறது என்று கூறி வந்தார். ஆனால், சரத் பவார் தங்களது அணியில் எத்தனை எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர் என்ற விவரத்தைத் தெளிவாகக் கூற மறுத்துவந்தார். தற்போது சரத் பவார் தேர்தல் கமிஷனுக்கு ஒரு மனு கொடுத்திருக்கிறார். அதில், அஜித் பவார் உட்பட ஒன்பது அமைச்சர்கள் மற்றும் 31 எம்.எல்.ஏ-க்களின் பதவியைப் பறிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் எந்தவித பிளவும் ஏற்படவில்லை. 40 பேரும் கட்சி விரோத செயலில் ஈடுபட்டிருப்பதால் அவர்களின் பதவியை 10-வது சட்டப் பிரிவின்கீழ் பறிக்க வேண்டும் என்று சரத் பவார் அணி தேர்தல் கமிஷனுக்குக் கொடுத்திருக்கும் மனுவில் குறிப்பிட்டிருக்கிறது. அஜித் பவார் கடந்த ஜூன் 30-ம் தேதி தேர்தல் கமிஷனுக்கு அனுப்பியிருந்த கடிதத்தில் கட்சிக் கூட்டத்தில் சரத் பவாருக்கு பதில், தலைவராக அஜித் பவார் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாகவும், எனவே அவரைத் தலைவராக அறிவித்து, கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு சரத் பவார் அணி இப்போது 500 பக்கம்கொண்ட பதிலை அனுப்பியிருக்கிறது.

அஜித் பவார் சரத் பவார்

அதில்தான் 40 எம்.எல்.ஏ-க்களின் பதவியைப் பறிக்க வேண்டும் என்று சரத் பவார் குறிப்பிட்டிருக்கிறார். சின்னம் தொடர்பாக ஏற்கெனவே பிரச்னை இருந்தது என்பதை அஜித் பவார் நிரூபிக்கவில்லை என்றும், தேர்தல் ஆணையமும் எந்தவித பிரச்னையும் இருப்பதாக முடிவுசெய்யவில்லை. எனவே, அஜித் பவார் அணி தாக்கல் செய்த ஆவணங்களை நிராகரிக்க வேண்டும் என்றும் சரத் பவார் தங்களது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.

புனேயில் மாநில தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஜெயந்த் பாட்டீல் அளித்த பேட்டியில், ``கட்சியின் பெயர் மற்றும் சின்னம் அஜித் பவார் அணிக்குச் செல்லக்கூடும். எங்களிடமிருந்து ஓர் அணி தனியாகப் பிரிந்து செல்கிறது என்றால், அவர்களுக்கு கட்சியின் சின்னம் மற்றும் பெயர் கிடைக்கும் என்று உத்தரவாதம் கிடைத்திருப்பதாகவே கருதப்படுகிறது.

சரத்பவார்

இந்த விவகாரத்தில் ஏற்கெனவே தேர்தல் கமிஷன் முடிவு செய்திருந்தால் எங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டை அணுகுவதைத் தவிர வேறு வழியில்லை. சிவசேனாவுக்கு நடந்ததுதான் எங்களுக்கு நடக்கிறது. எனவே, மக்கள் பா.ஜ.க-வை விட மாட்டார்கள். அவர்கள் மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று தெரிவித்தார். ஏற்கெனவே முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேல் எங்களது அணிக்கு வரும் 30-ம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னம் மற்றும் பெயர் கிடைத்துவிடும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்'' என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



from India News https://ift.tt/TRmqp9X

Post a Comment

0 Comments