தேர்தல்களில் தொடர் தோல்வி, தலைமையில் குழப்பம், மூத்த நிர்வாகிகள் விலகல் என காங்கிரஸ் கட்சி ஆட்டம் கண்டிருந்தது. அந்த நேரத்தில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்தார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி. அதன்படி கடந்த ஆண்டு, செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் யாத்திரை தொடங்கியது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, உத்தரப்பிரதேசம் ஆகிய 12 மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்கள் வழியாக 4,080 கி.மீ நடைப்பயணம் மேற்கொண்டார் ராகுல். இதில் அவர் 12 பொதுக்கூட்டங்கள், 100-க்கும் மேற்பட்ட சிறிய கூட்டங்கள், 13 செய்தியாளர் சந்திப்புகள், 275-க்கும் மேற்பட்ட நடைப்பயிற்சி உரையாடல்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்களுடன் அமர்ந்து உரையாற்றினார்.
மேலும், இதில் முக்கியத் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலர் பங்கேற்றனர். இறுதியாக கடந்த ஜனவரி 30-ம் தேதி ஸ்ரீநகரில் ஜோடோ யாத்திரை நிறைவடைந்தது. அப்போது பேசிய ராகுல், "நான் லட்சக்கணக்கான மக்களைச் சந்தித்தேன். அவர்களுடன் பேசினேன். உங்களுக்கு அதைப் புரியவைக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. இந்தியாவை ஒன்றிணைப்பதே யாத்திரையின் நோக்கம்.
இது நாடு முழுவதும் பரவிவரும் வெறுப்பு மற்றும் வன்முறைக்கு எதிரானது. எங்களுக்கு மிகப்பெரிய பதில் கிடைத்திருக்கிறது. சொல்லப்போனால், இப்படி ஓர் அன்பான பதில் கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை" என்றார். இது துவண்டிருந்த காங்கிரஸ் தொண்டர்களுக்குப் புத்துணர்வைக் கொடுத்தது. குறிப்பாக இமாச்சலப் பிரதேசம், கர்நாடகத் தேர்தல்களில் அந்தக் கட்சி மிகப்பெரிய வெற்றியை ருசித்தது. மறுபுறம் ராகுலின் இந்த எழுச்சி பாஜக-வுக்கு கிலியை கொடுத்தது.
இதைத் தொடர்ந்தே ராகுல் நாடாளுமன்றத்திலும் பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சனம் செய்தார். குறிப்பாக ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து ராகுல் கேள்வி எழுப்பியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் ராகுல் காந்திக்கு, அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பதாக சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அவரது எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது.
இதனால் காங்கிரஸ் கட்சியினர் மீண்டும் அதிர்ச்சியைச் சந்தித்தார்கள். மேலும், இது பழிவாங்கும் நடவடிக்கை எனவும் குற்றம்சாட்டினார்கள். பிறகு ராகுல் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைத்தது. இதனால் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் மீண்டும் உற்சாகமடைந்தார்கள்.
இதையடுத்து மீண்டும் நாடாளுமன்றத்துக்குள் சென்றிருக்கும் ராகுல், மணிப்பூர் விவகாரத்தைக் கையில் எடுத்து அதிரடித்துவருகிறார். இந்தப் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குஜராத் முதல் மேகாலயா வரை தனது அடுத்த நடைப்பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார், ராகுல் காந்தி. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சித் தலைவர் நானா படோல், "ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையின் 2-வது பாகத்தை மேற்கொள்ளவிருக்கிறார்.
குஜராத்தில் தொடங்கி மேகாலயா வரை இந்த யாத்திரையை அவர் நடத்தவிருக்கிறார். ராகுல் இந்த யாத்திரையை மேற்கொள்ளும்போது மாநிலத்திலுள்ள காங்கிரஸ் தலைவர்கள் தத்தம் பகுதிகளில் யாத்திரைகளை ஒருங்கிணைத்து நடத்தவிருக்கின்றனர்" என்றார். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், ராகுலின் இந்தப் பயணம் நிச்சயம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
இது குறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், "ஏற்கெனவே மேற்கொண்ட பாரத் ஜோடோ யாத்திரை, பதவிப் பறிப்பு போன்றவை ராகுலுக்கு செல்வாக்கை அதிகரித்துக் கொடுத்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் அவர் பேசும்போது, `பாரத் ஜோடோ யாத்திரையில் அன்பை எப்படிச் செலுத்த வேண்டும். வெறுப்பை எப்படி ஒதுக்குவது என்பதைக் கற்றுக்கொண்டேன்’ என அவர் சரியாகக் கூறுகிறார்.
மேலும் கர்நாடக, இமாச்சலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பதையும் நாம் பார்க்கிறோம். முன்னதாக அவர் யாத்திரை மேற்கொள்ளும்போது குஜராத்துக்குச் செல்லவில்லை என விமர்சனம் எழுந்தது. அவர் 2024 தேர்தலுக்கு முன்பு அங்கு சென்றால், செல்வாக்கு மேலும் உயரும் என யோசித்திருக்கலாம். இந்த நிலையில் குஜராத் முதல் மேகாலயா வரை அடுத்த நடைப்பயணம் செல்லவிருக்கிறார்.
இந்த நேரத்தில் ராகுல் குஜராத்துக்குச் சென்றால், அவரின் செல்வாக்கு நிச்சயம் மேலும் அதிகரிக்கும். வடகிழக்கில் இருக்கும் சிறு கட்சிகளைக் கபளீகரம் செய்து பாஜக வளர்ந்திருக்கிறது. மணிப்பூரில் அவர்கள் செய்த அரசியலால் அங்கு மொத்தமாகத் தோல்வியைச் சந்திப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
இதனால் மிசோரம், மேகாலயா போன்ற இடங்களில் இருக்கும் மக்களும் விழித்துக்கொள்வார்கள். குஜராத்தில் ஆம் ஆத்மி தற்போது இந்தியா கூட்டணியில் இருக்கிறது. அங்கு அவர்கள் கடந்த தேர்தலில் 12% வாக்குகளைப் பெற்றார்கள். எனவே, ராகுலின் இந்தப் பயணம் இந்தியா கூட்டணிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் நல்ல பலனைக் கொடுக்கும்" என்றார்.
from India News https://ift.tt/6zWyODP
0 Comments