Flying Kiss: ``பிரிஜ் பூஷன் மீது கோபம் வரவில்லையா ஸ்மிருதி இரானி?" - ஸ்வாதி மாலிவால் காட்டம்

நாடாளுமன்ற மக்களவையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது நேற்று இரண்டாவது நாளாக விவாதம் நடைபெற்றது. இதிலும் பிரதமர் மோடி கலந்துகொள்ளவில்லை. இருப்பினும் விவாதத்தின்போது உரையாற்றிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, ``மணிப்பூரில் பாரத மாதாவை நீங்கள் கொன்றுவிட்டீர்கள். நீங்கள் தேச பக்தர்கள் அல்ல, தேச துரோகிகள்" என்று பா.ஜ.க-வை கடுமையாகச் சாடினார்.

ராகுல் காந்தி - ஸ்மிருதி இரானி

இதனால், பா.ஜ.க எம்.பி-க்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபடவே, அவையில் சலசலப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ராகுல் காந்தி தன்னுடைய உரையை முடித்துவிட்டு அவையிலிருந்து கிளம்பிவிட்டார். அவரைத்தொடர்ந்து எழுந்து பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, அவையில் பெண் எம்.பி-க்களை நோக்கி ராகுல் காந்தி `flying kiss' கொடுப்பது போன்று சைகை செய்ததாக குற்றம் சாட்டினார். அதுமட்டுமல்லாமல், தேசிய ஜனநாயக கூட்டணியின் பெண் எம்.பி-க்கள், ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்குமாறு மக்களவை சபாநாயகருக்கு கடிதம் அளித்தனர்.

ஆனால், பா.ஜ.க எம்.பி ஹேமா மாலினியோ, ``ராகுல் காந்தி அவ்வாறு செய்ததாக நான் பார்க்கவில்லை" என்று கூறினார். இருப்பினும் ராகுல் காந்தி அவ்வாறு செய்தாரா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால், ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டில் ஸ்மிருதி இரானிக்கு கேள்வியெழுப்பியிருக்கிறார்.

ஸ்வாதி மலிவால்

இதுகுறித்து ஸ்வாதி மாலிவால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``flying kiss விவகாரம் தீயாய் பரவிக்கொண்டிருக்கிறது. பிரிஜ் பூஷன் என்பவர் அங்கு இரண்டு வரிசைக்குப் பின்னல் தான் அமர்ந்திருந்தார். அவர், ஒலிம்பிக் மல்யுத்த வீராங்கனைகளைத் தனது அறைக்கு அழைத்து இடுப்பில், மார்பில் கை வைத்து பாலியல் துன்புறுத்தல்களைச் செய்திருக்கிறார். ஆனால், அவர் செய்ததில் ஏன் உங்களுக்கு கோபம் வரவில்லை?" என ஸ்மிருதி இரானியை கேள்வியெழுப்பினார்.

பிரிஜ் பூஷண் சரண் சிங் - மல்யுத்த வீராங்கனை

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பா.ஜ.க எம்.பி-யான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு முன்வைத்ததும், அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.



from India News https://ift.tt/YW3u7Ja

Post a Comment

0 Comments