முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவரும் ஆந்திராவில், அடுத்தாண்டு மக்களவைத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் நடைபெறவிருக்கிறது. இதனால், முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் ஆகியோர் ஆட்சியைப் பிடிக்க ஜெகன்மோகன் ரெட்டியைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகர் ரஜினியை விமர்சித்த ஆந்திர அமைச்சர் ரோஜா, தற்போது ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசிய வசனத்தைப் பேசி, பவன் கல்யாணை விமர்சித்திருக்கிறார்.
சித்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் ஜெகன்மோகன் ரெட்டி முன்னிலையில் மேடையில் பேசிய ரோஜா, ``பவன் கல்யாண், ஊர் ஊராகச் சென்று ஜெகன் மோகன் ரெட்டியையும், ஆட்சியையும் விமர்சித்து வருகிறார். இப்போது இங்கு ஒன்றை சொல்கிறேன். சமீபத்தில் வெளியான படத்தின் விழாவில் ரஜினி ஒரு வசனம் பேசியிருப்பார்.
குரைக்காத நாயும் இல்ல... குறைசொல்லாத வாயும் இல்ல... இந்த ரெண்டும் இல்லாத ஊரும் இல்ல... அர்த்தமைந்தா ராஜா" என்று தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழியிலும் பேசி பவன் கல்யாணை விமர்சித்தார்.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம், மறைந்த முன்னணி நடிகரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான என்.டி.ஆரின் 100-வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஜினி, சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாகப் பேசியிருந்தார். இது ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினரிடையே ரஜினி மீது பெரும் எதிர்ப்பை கிளப்பியது.
அந்த சமயத்தில் புதுச்சேரி வந்திருந்த ரோஜா, ``ரஜினி சார் அரசியல் வேண்டாம்னு நினைக்கும்போது அவர் அரசியல் பேசக் கூடாது. இன்னைக்கு அவர் ஜீரோ ஆயிட்டார். இனிமேலாவது எந்த ஒரு ஆர்ட்டிஸ்ட் ஒரு ஸ்டேட்டுக்கு போகும்போது, அந்த ஸ்டேட் பத்தி தெரிஞ்சா பேசணும் தெரியலன்னா சைலன்ட்டா... தான் உண்டு தன் வேலை உண்டுன்னு வந்தா நல்லா இருக்கும்" என்று ரஜினியை விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
from India News https://ift.tt/XI25zJo
0 Comments