காவிரி பிரச்னை: `'டெல்டாகாரன்' என்ன செய்யப்போகிறார் என்று பார்க்கத்தானே போறோம்!’ - எடப்பாடி காட்டம்

சேலம் மாவட்டம், ஓமலூர் அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “அதிமுக-வின் மதுரை மாநாட்டை பார்த்து உதயநிதி ஸ்டாலின் விரக்தியின் விளிம்பிற்கே சென்று விட்டார். அவர் வந்து மாநாட்டில் கலந்து கொண்டிருந்தால், மாநாடு எப்படி இருந்தது என்பது தெரிந்திருக்கும். இந்த மாநாட்டில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக திமுக ஆட்சியின் அவல நிலை குறித்து புள்ளிவிவரத்துடன் கழகத் தொண்டர்களிடம் எடுத்துக் கூறினேன். உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வந்து ஆறு மாதம் கூட ஆகவில்லை. அவருக்கு என்ன அரசியல் தெரியும்?

எடப்பாடி பழனிசாமி

1974 ஆம் ஆண்டு இந்த கட்சியில் இணைந்து, கிட்டத்தட்ட 49 ஆண்டு காலம் இந்த கட்சியில் பணியாற்றியுள்ளேன். 52 ஆண்டு காலம் இந்த கட்சியில் பணியாற்றிய நிர்வாகிகள் எல்லாம் முன்னின்று இந்த மாநாட்டை நடத்தி உள்ளோம்” என கூறினார்.

தொடர்ந்து பேசியவர், ``இன்று குடிநீர் பிரச்னை தலைவிரித்து ஆடுகிறது. காவிரி நதிநீர் பிரச்னைக்கு தீர்வு காண முடியவில்லை. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 52 அடிக்கு வந்துவிட்டது. இன்று 1045 கன அடி நீர் தான் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. முதலமைச்சர் ஜூன் 12-ம் தேதி சரியான நேரத்தில் தண்ணீர் திறந்து விட்டதாக கூறுகிறார். சரியான நேரத்தில் திறந்து விட்டால் மட்டும் போதாது, முழுமையான கால அளவு வரை தண்ணீர் திறந்து விட வேண்டும். அப்போதுதான் நடவு செய்த பயிர்கள் முழு விளைச்சல் அடைய முடியும்.

இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தண்ணீர் திறந்து விட்டு நான் ’டெல்டா காரன்’ என்று கூறுகிறார். டெல்டாகாரன் என்ன செய்யப்போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கத்தான் போறோம். தற்போது நதிநீர் விவசாயிகளுக்கு முழுமையாக கிடைக்காத காரணத்தால், டெல்டா பாசன விவசாயிகள் நடவு செய்த பயிர்கள் கருகிக் கொண்டிருக்கின்றன. அப்படி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலமாக எந்த உதவியும் கிடைக்காத நிலை தான் திமுக ஆட்சியில் பார்க்க முடிகிறது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் குடிநீர் பிரச்னை வந்து விடுமோ என்ற அச்சத்தில் இருக்கின்றனர்.” என்றார்.

முதல்வர் ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

``நாடாளுமன்றத் தேர்தலை பொருத்தவரை, தற்போது அதிமுக முதற்கட்டமாக பூத் கமிட்டி, பாசறை, மகளிர் குழு அமைப்பது போன்ற முதற்கட்ட பணிகளை துவங்கி இருக்கிறோம். `அஸ்திவாரம் போட்டால் தான் கட்டடம் நன்றாக அமையும்’. அது போல் முதற்கட்ட பணிகள் முடிந்த பின்பு தேர்தல் பிரசாரத்திற்கான வேலையை தொடங்குவோம்” என கூறினார்.

தொடர்ந்து, ``ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ் என்று கூறப்படும் நபர் ஒரு நாளும் அம்மாவுக்கு வாகனம் ஓட்டவில்லை. எத்தனையோ முறை வெளியில் சென்றுள்ளார் அம்மா. தலைமைச் செயலகம், பொதுநிகழ்ச்சி, கட்சிநிகழ்ச்சிக்கு சென்று இருக்கிறார். ஒரு நாளாவது அம்மாவுக்கு வாகனம் ஓட்டி இருக்கிறாரா? செய்தித்தாள்களிலோ அல்லது ஊடகத்திலோ வெளிவந்திருக்கிறதா?

வேண்டுமென்றே திட்டமிட்டு ஓபிஎஸ் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் விரக்தியின் விளிம்பிற்கு சென்றுவிட்டார். நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் எங்கள் தரப்பிற்கு நல்ல தீர்ப்பு கொடுத்து விட்டது. அந்த விரக்தியில் அவர் பேசிக் கொண்டிருக்கிறார். திமுகவிற்கு ஜால்ரா போடுகிறார்.

தமிழகத்தில் விலைவாசி உயர்ந்துள்ளது. மளிகை பொருள்கள் 40% உயர்ந்துள்ளது. இது அனைவருக்கும் தெரியும். திமுக ஆட்சியில் செவிடன் காதில் சங்கு ஊதுவது போல்’ எத்தனை முறை சுட்டிக்காட்டினாலும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த இந்த அரசு தவறி உள்ளது. மக்கள் விரோத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையிலும் இடம் பெற்றுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்வதற்கு எங்களிடம் ரகசியம் உள்ளது எனக் கூறினார் ஒருவர். இதுதான் இவர்களின் ரகசியம். இவர்கள் எங்களுக்கு பெருமை கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது. நீட் தேர்வை 2010 டிசம்பர் 21-ல் மத்திய மெடிக்கல் கவுன்சில் அறிவித்தது. அப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. திமுக அமைச்சரவையில் அங்கம் வகித்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த நாமக்கல் காந்தி செல்வன் அவர்கள் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆக இருந்தார். மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் இருந்தார்.

அந்த காலகட்டத்தில் தான் இந்த நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை கொண்டு வந்தது திமுக. ஆனால் அவர்கள் அதை தடுக்க அதிமுக சட்டப் போராட்டம் நடத்தியது. வேண்டுமென்று திட்டமிட்டு பொய்யான செய்தி சொல்லி மக்களை ஏமாற்றி, மாணவர்களை, இளைஞர்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவுடன், இன்று அந்தர்பல்டி அடித்து மாற்றி பேசுகிறார்கள். இதுதான் விடியா திமுக அரசு, இதுதான் திராவிட மாடல் அரசு.” என்றார்.

உதயநிதி

சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு நடத்துவது குறித்த கேள்விக்கு, `சேலத்தில் திமுக இளைஞர் மாநாடு பொறாமையில் நடத்தப்படுவதாக நான் நினைக்கிறேன். அதிமுக மதுரை மாநாட்டிற்கு காவல்துறை உரிய பாதுகாப்பு தரவில்லை. நீதிமன்றம் தீர்ப்பளித்தும் காவல்துறை எந்த ஏற்பாடும் செய்யவில்லை. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மூலம் டிஜிபியிடம் மனு கொடுத்தோம். மாநாட்டுக்கு உரிய பாதுகாப்பு தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால் எதையும் செய்யவில்லை. சேலம் திமுக இளைஞரணி மாநாட்டிற்கு காவல்துறை எவ்வளவு பாதுகாப்பு தருகிறார்கள் என்று பார்க்கலாம்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



from India News https://ift.tt/f0Fcoe4

Post a Comment

0 Comments