காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பெரும் புரட்சிக்கு வித்திட்ட இந்தித் திணிப்பு, தற்போது கடந்த ஒன்பது ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில், கல்வி, போட்டித் தேர்வுகள், அரசு நிர்வாகம், அரசியலமைப்புச் சட்டம் போன்றவற்றில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பா.ஜ.க அரசு கொண்டுவந்த தேசிய கல்விக் கொள்கையில் தொடர்ந்து நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரில் அரசியலமைப்புச் சட்டங்களுக்கு இந்தியில் பெயர்வைத்தது வரை அதிகார வர்க்கத்தால் இந்தி திணிக்கப்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட, ``இந்தியை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுவது என்பது மெதுவதாக நகர்ந்தாலும், எதிர்காலத்தில் இந்தியை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்" என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியது தி.மு.க, கம்யூனிஸ்ட் போன்ற எதிர்கட்சிகளிடமின்றி கடும் எதிர்ப்பை வரவழைத்தது. இந்த நிலையில், அனைவரும் தாய்மொழியோடு இந்தியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அமித் ஷா கூறியிருக்கிறார்.
இந்திய ஆசிரியர் கல்விக் கழகத்தில் (IITE) நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அமித் ஷா கலந்துகொண்டார். அப்போது மாணவர்களிடையே உரையாற்றிய அமித் ஷா, ``நம்முடைய கலாசாரம், வரலாறு, இலக்கியம், இலக்கணம் ஆகியவை இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் இருப்பதால், அவற்றைப் பாதுகாப்பதும் மேம்படுத்துவதும் உங்களின் பொறுப்பு. நமது மொழியை வலிமையாக்க வேண்டும். தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் முக்கிய அம்சமே, குழந்தைகளுக்கு அவர்களின் தாய்மொழியில் கற்பிப்பதே. அதேசமயம், ஆங்கிலத்துக்கு எதிரானவன் அல்ல நான். குழந்தைகள் ஆங்கிலத்தோடு பிரெஞ்சு, ஜெர்மன் ஆகியவற்றையும் கற்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.
ஆனால், குஜராத்திலிருந்து வரும் குழந்தையென்றால் குஜராத்தி, இந்தி ஆகிய இரண்டையும் கற்றுக்கொள்ள வேண்டும். அஸ்ஸாம் மாநிலத்தவர் என்றால் அஸ்ஸாமி, இந்தி கற்றுக்கொள்ள வேண்டும். தமிழன் என்றால் தமிழ், இந்தி ஆகிய இரண்டையும் கற்க வேண்டும். இது நடந்தால், இந்தியா முன்னேறுவதை யாராலும் தடுக்க முடியாது. உலகம் முழுவதிலும் ஒரே இடத்தில் அறிவுச் செல்வங்கள் குவிந்துள்ளன என்றால், அது நமது உபநிடதங்கள், வேதங்கள், சமஸ்கிருதம் ஆகியவற்றில் தான். இவற்றை நீங்கள் படித்தால், உங்கள் வாழ்வின் எந்தவொரு பிரச்னையும் பிரச்னையாக இருக்காது. அறிவு எங்கிருந்து வந்தது என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் சமூகம், மக்கள், உலகம், பிரபஞ்சத்தின் நன்மைக்காக அவை இருக்கிறதா என்பதை நாம் பார்க்க வேண்டும்" என்று கூறினார்.
from India News https://ift.tt/HrMWXZK
0 Comments