கர்நாடகாவில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், மேக்கேதாட்டூவில் அணைக் கட்டியே தீருவது என்ற முடிவில் தீவிரமாக இருக்கின்றன. ‘மேக்கேதாட்டூவில் அணை கட்டுவதற்கு ரூ. 9,000 கோடி நிதி ஒதுக்குவோம்’ என்று கடந்த கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டது.
அதேபோல, தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சியமைத்தவுடன், கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சராக டி.கே.சிவக்குமார் பதவியேற்றார். உடனே அவர், மேக்கேதாட்டூவில் அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும், மேக்கேதாட்டூ அணை தொடர்பாக ட்விட்டரில் ஒரு பதிவை அவர் வெளியிட்டிருந்தார். அதில், ‘தமிழக சகோதரர்கள் மீது வெறுப்போ, கோபமோ இல்லை. அவர்கள் எங்களின் சகோதர, சகோதரிகளைப் போன்றோர். கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்களும், தமிழகத்தில் வாழும் கன்னடர்களும் காவிரி நீரை அருந்துகின்றனர். இந்த விவகாரத்தில் நாம் நீதிமன்றங்களுக்கு அலைந்தது போதும். மேக்கேதாட்டூ விவகாரத்தில் நாம் உடன்பட வேண்டும். மேக்கேதாட்டூ அணை நம் இரு மாநிலங்களுக்குமே நன்மை பயக்கும்.
விவசாயிகளுக்கு பாசன நீரும், சாமான்ய மக்களுக்கு குடி தண்ணீரும் காவிரியிலிருந்து கிடைக்கும். நான் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை விடுக்கிறேன். நாம் இருவரும் அன்பான இதயம் கொண்டவர்கள். நம் இரு மாநில மக்களும் சகோதரத்துவத்துடன் வாழட்டும். ஒருவொருக்கொருவர் உதவி செய்து முன்னேறுவோம்’ என்று கூறியிருந்தார் டி.கே.சிவக்குமார். அவரது கருத்துக்கு தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
ஆனாலும், மேக்கேதாட்டூவில் அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடகா அரசு தீவிரம் காட்டிவருகிறது. மேக்கேதாட்டூ அணை தொடர்பான திட்ட அறிக்கையில் ஏராளமான மரங்கள் வெட்டப்படும் என்றும், வனவிலங்குகள் பாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. அதை சரிசெய்வதற்காக, திட்டம் செயல்படுத்தப்படவிருக்கும் பகுதியில் வனத்துறை அதிகாரிகளை ஆய்வுப் பணியில் ஈடுபடுத்தி, நில அளவீடு பணிகளை கர்நாடகா அரசு நடத்தியிருக்கிறது.
இது பற்றி கருத்து தெரிவித்த தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ‘அதிகாரிகள் சர்வே செய்வதாலேயே மேக்கேதாட்டூ அணையைக் கட்ட முடியாது. அதற்கு வனத்துறை, சுற்றுச்சூழல் துறை எனப் பல துறைகளின் அனுமதியைப் பெற வேண்டும். பள்ளியில் புதிதாகச் சேர்ந்த மாணவர்களுக்கு புத்தகத்தைக் கொடுத்தால் தினமும் காலையில், மாலையில் படிப்பார்கள். அதுபோல, அவர்கள் புதிதாக ஆட்சிக்கு வந்திருப்பதால், வேகத்துடன் இருக்கிறார்கள். அதற்காக தமிழ்நாடு அரசு அமைதியாக இருந்துவிடாது. தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்துக்குச் செல்லும்’ என்றார்.
ஆனால், அணை கட்டும் பகுதியில் எத்தனை மரங்கள் இருக்கின்றன... அணைக் கட்ட வேண்டுமென்றால் அங்கு எத்தனை மரங்களை வெட்ட வேண்டியிருக்கும் என்பதை முடிவுசெய்வதற்காக, அந்தப் பகுதியில் இரண்டு கி.மீ தூரத்துக்கான ஆய்வை கர்நாடகா அரசு மேற்கொண்டிருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மேலும், தமிழ்நாடு - கர்நாடகா இடையே எல்லையைக் குறிப்பதற்காக கர்நாடகா வனத்துறையால் 20 மீட்டருக்கு ஒரு மரத்துண்டு நட்டுவைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன.
மேக்கேதாட்டூ அணை கட்டுவதற்கான ஒவ்வொரு நடவடிக்கைக்கும் தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. கர்நாடகா அரசு என்ன நடவடிக்கை எடுத்துவந்தாலும், அங்கு அணை கட்ட முடியாது என்று அமைச்சர் துரைமுருகன் தொடர்ந்து கூறிவருகிறார். ஆனால், அணை கட்டுவதற்கு நிதியை ஒதுக்குவது, ஆய்வுப்பணியில் ஈடுபடுவது, எல்லையை வரையறுப்பது என்று கர்நாடகா அரசு அடுத்தடுத்து முன்னேறிக்கொண்டே போகிறது.
கர்நாடகாவின் இந்த நடவடிக்கைகளை சட்டரீதியாகவும், அரசியல் அழுத்தம் மூலமாகவும் மட்டுமே தடுக்க முடியும். மத்தியில் அரசில் எதிரியான பா.ஜ.க-வும், கர்நாடகாவில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸும் ஆட்சியில் இருக்கும் சூழலில், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு என்ன மாதிரியான அணுகுமுறையைக் கையாள வேண்டும் என்பதில் தெளிவான முடிவை எடுக்க வேண்டியிருக்கிறது.
from India News https://ift.tt/JlgFMKd
0 Comments