`நாடாளுமன்றத்தில் எம்.பி-க்கள் கையெழுத்தில் மோசடியா?’ - சர்ச்சையில் ஆம் ஆத்மி எம்.பி

டெல்லி அதிகாரிகள் நியமன திருத்தச் சட்டம் 2023 நேற்று நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி 131 எம்.பி-க்களின் ஆதரவு வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. இந்த  மசோதா நிறைவேற்றுவதற்கு முன் விவாதத்தின் போது ஆம் ஆத்மி கட்சி எம்.பி ராகவ் சதா, "டெல்லி சட்ட மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக்குழுவுக்கு அனுப்பிய பிறகே முடிவெடுக்க வேண்டும்" எனக் கோரிக்கை முன்வைத்தார்.

எம்.பி ராகவ் சதா

நாடாளுமன்ற விதிகள் மற்றும் நடைமுறைகளின் விதி 125 ன் கீழ் , எந்தவொரு உறுப்பினரும் ஒரு மசோதாவை ஒரு தேர்வுக் குழுவிற்கு அனுப்பலாம். அது தொடர்பாகப் பிரேரணை நிறைவேற்றப்பட்டால், மசோதா அந்தக் குழுவிற்கு அனுப்பப்படும். அத்தகைய குழுவின் உறுப்பினர்களைச் சபை தீர்மானிக்கிறது. அதே போன்று தேர்வுக் குழுவுக்கு அனுப்ப உறுப்பினர்களின் ஒப்புதல் தேவைப்படும்.

இதனிடையே, ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சதா அளித்த டெல்லி சட்ட மசோதாவை தேர்வுக்குழுவுக்கு பரிந்துரைத்த கடிதத்தில் பாங்னான் கொன்யாக், நர்ஹரி அமின், பாஜகவின்  சுதன்ஷு  திரிவேதி, அதிமுகவின் தம்பிதுரை மற்றும்  பிஜேடியின்  சஸ்மித்  பத்ரா ஆகியோர் கையெழுத்திட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தங்களின் அனுமதி இல்லாமல் தங்களின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது என இவர்கள் தெரிவித்திருக்கின்றனர். எனவே, ஆம்  ஆத்மி  எம்.பி ராகவ்  சதாவுக்கு எதிராகச்  சிறப்புரிமை மீறல் தொடர்பாக ஐந்து பேரும் இப்போது தனிப்பட்ட முறையில் நாடாளுமன்ற செயலாளருக்கு  நோட்டீஸ்  கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பாஜக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

இந்த விவகாரம் குறித்துப் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா," அனுமதியின்றி மற்ற உறுப்பினர்களின் பெயர்களைச் சேர்த்தது, நாடாளுமன்றத்தில் நடந்த மோசடி. இது குறித்து விசாரிக்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்தார். இதுகுறித்து ராகவ் சாதாவிடம் கேட்டபோது, "சிறப்புரிமைக் குழு எனக்கு நோட்டீஸ் அனுப்பட்டும், நான் பதிலளிக்கிறேன்" என்றார்.

இது குறித்துப் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகி ஒருவர், "விதிகளின்படி ஒரு தேர்வுக்குழுவை  முன்மொழியும்போது கையெழுத்து தேவையில்லை. கையொப்பம் தேவையில்லை என்பதால், 'போலி கையெழுத்து' என்ற குற்றச்சாட்டுக்கு இடமில்லை. நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் மசோதா மீதான விவாதங்களில் பங்கேற்றதால், ஐந்து எம்.பி.க்களின் பெயர்கள் நல்லெண்ண அடிப்படையில் கொடுக்கப்பட்டிருக்கலாம்" என விளக்கமளித்தார்.



from India News https://ift.tt/D48NWto

Post a Comment

0 Comments