'டொனால்ட் ட்ரம்ப் குற்றமற்றவர்' - தீர்ப்பு வழங்கிய இந்திய வம்சாவளி நீதிபதி... யார் இந்த உபாத்யாயா?!

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இவர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பதவியில் இருந்தார். தொடர்ந்து 2020-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. அப்போது ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும், டொனால்ட் ட்ரம்ப்புக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவியது. முடிவில் பைடன் வெற்றி பெற்றார். ஆனால் ட்ரம்ப், "தேர்தலில் முறைகேடு நடந்திருக்கிறது. வெற்றியை என்னிடமிருந்து திருடிக்கொண்டார், பைடன்" என பல்வேறு இடங்களில் குற்றஞ்சாட்டி வந்தார்.

டொனால்ட் ட்ரம்ப்

இதற்கிடையில் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி தேர்தல் முடிவுகளுக்கான சான்றளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்த நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. அப்போது ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் பலர் அங்கு வந்தனர். அவர்கள் அனுமதி இல்லாமல் உள்ளே புகுந்ததுடன், நிகழ்ச்சி நடத்தவிடாமல் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 5 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து அமெரிக்காவை ஏமாற்றுவதற்கான சதித் திட்டத்தில் ஈடுபடுதல், அரசுப் பணிக்கு இடையூறு செய்தல், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுப்பதற்காக சதி செய்தல், அமெரிக்கர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதற்காகச் சதி செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி வாஷிங்டன் டி.சி நீதிமன்றம் ட்ரம்ப்புக்கு சம்மன் அனுப்பியிருந்தது.

அமெரிக்க உச்ச நீதிமன்றம்

இதற்கு ட்ரம்ப், "2024-ம் ஆண்டு நடக்கும் தேர்தல் பிரசாரத்திற்கு நான் செல்வதை தடுக்கும் விதமாக தீய எண்ணத்துடன் முயற்சி நடைபெறுகிறது" என அறிக்கை வெளியிட்டிருந்தார். பின்னர் கடந்த 4-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரானார், ட்ரம்ப். முன்னதாக அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்பட்டுவிடாமல் தடுக்கும் வகையில் போலீஸார் சம்பந்தப்பட்ட பகுதியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். மேலும் வழக்கு விசாரணையில் தொடர்புடைய நீதிபதிகளுக்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

விசாரணை தொடங்கியதும் சிறப்பு ஆலோசகர் ஜாக் ஸ்மித், 45 பக்க குற்றப்பத்திரிகை கொண்டுவந்தார். பிறகு மாஜிஸ்ட்ரேட் நீதிபதி மோக்சிலா உபாத்யாயா, ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் அதிகபட்ச சிறைத் தண்டனையை வாசித்தார். பிறகு, "நான் குற்றவாளி இல்லை" என்று ட்ரம்ப் கூறினார். பிறகு நீதிபதி மோக்சிலா உபாத்யாயா பிறப்பித்த உத்தரவில், "முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான நான்கு கிரிமினல் குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றமற்றவர்.

அமெரிக்கா

வழக்கின் சாட்சிகளுடன் சட்ட வாயிலாக தொடர்பு கொள்ளக் கூடாது. வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இருப்பினும் ட்ரம்ப் நேரில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை" என்று தீர்ப்பு வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், "இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும், ஓர் அரசியல் எதிரியை துன்புறுத்துவதாகும். இது அமெரிக்காவில் ஒருபோதும் நடக்கக் கூடாது.

இது அமெரிக்காவுக்கு மிகவும் சோகமான நாள்" என்று கொதித்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மோக்சிலா உபாத்யாயா, இந்தியாவைச் சேர்ந்தவர். குஜராத்தில் பிறந்து, மிசோரியின் கன்சாஸ் சிட்டிக்கு அருகில் வளர்ந்தார். பின்னர் மிசோரி ஸ்கூல் ஆஃப் ஜர்னலிசம் பல்கலைக்கழத்தில் தனது இதழியல் பட்டத்தைப் பெற்றார். வாஷிங்டன் சட்டக் கல்லூரியில் உள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை நிறைவு செய்தார்.

அமெரிக்கா

மேலும் அவர் ஒரு சிக்கலான வணிக வழக்குகளை எடுத்து நடத்தும் வழக்கறிஞராகவும், வாஷிங்டனில் இருக்கும் யுனைடெட் ஸ்டேட்ஸ் டிஸ்ட்ரிக்ட் கோர்ட் மற்றும் கொலம்பியா சர்க்யூட் மாவட்டத்திற்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கான சட்ட எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்திருக்கிறார். தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு செப்.7-ம் தேதி யுனைடெட் ஸ்டேட்ஸ் மாஜிஸ்ட்ரேட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது ட்ரம்பின் வழக்கை விசாரித்திருக்கிறார்.



from India News https://ift.tt/jQ3YaTf

Post a Comment

0 Comments