கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்று நாள்கள் ஆறு தொகுதிகளில் `என் மண், என் மக்கள்' நடைப்பயணம் மேற்கொண்டார் அண்ணாமலை. நேற்று இரவு கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட கொட்டாரம் சந்திப்பில் பயணத்தை நிறைவுசெய்த அண்ணாமலை, ``மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து என்ன திட்டம் கொண்டுவரலாம் எனப் பார்க்காமல், முழு நேரமாக மத்திய அரசை குறைசொல்வது, பொய் சொல்வதை வேலையாக வைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். 9 ஆண்டுகளில் மத்திய அரசு என்ன செய்தது என ஸ்டாலின் கேட்கிறார். அவர் பணக்காரர். மகனுக்கும், மருமகனுக்கும் ஆட்சி நடத்துபவர். ஆனால், ஏழைகளுக்காக, மீனவர்களுக்காக, விவசாயிகளுக்காக திட்டங்கள் வகுத்துச் செயல்படுகிறது மத்திய அரசு. தமிழக மீன்வளத்துறை அமைச்சர் கடலில் கால்வைக்க வருத்தப்பட்டு சேர் போட்டு படகிலிருந்து இறங்குகிறார். அவரது கால் கடல் நீரில் படாமல் இருக்க, மீனவர் ஒருவர் இடுப்பில் தூக்கி படகிலிருந்து கரைக்கு அழைத்துச் செல்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய பணக்காரராக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இருக்கிறார். அவர் 4,999 கோடி ரூபாய் வைத்திருக்கிறார். ராமேஸ்வரத்தில் முதல்வர் எதற்காக மீனவர் மாநாடு நடத்துகிறார். கச்சத்தீவை மீட்பதே இலக்கு என்கிறார். அது இலக்கு அல்ல, இழுக்கு எனச் சொல்லுங்கள். கச்சத்தீவை எழுதிக் கொடுத்ததே அவரின் தந்தை கருணாநிதிதான். 40 ஆண்டுகளாக கோமாவில் இருந்திருக்கிறார். கச்சத்தீவை மீட்க வேண்டும் என பொன்னார் தலைமையிலான குழு மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் மனு கொடுத்த பிறகு, இப்போது ஸ்டாலின் விழித்திருக்கிறார். கச்சத்தீவை தாரைவார்த்ததற்காக ராமநாதபுரம் மண்ணில் உருண்டு படுத்து மீனவர்கள் காலில் விழுந்து முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும். இலங்கைப் படையின் துப்பாக்கிச்சூட்டில் 85 மீனவர்கள் உயிர்போனதற்கு தி.மு.க-தான் காரணம். தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்து 28 மாதங்கள் ஆன பின்னும், மீனவர்களுக்காக எதுவும் செய்யவில்லை.
அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுவதைப்போன்றே காவல்துறையினரும் பேசுவது ஆச்சர்யமாக இருக்கிறது. குமரி மாவட்டத்தில் நடைப்பயணத்தில் கிறிஸ்தவ மக்கள் 25 பைபிள்களை எனக்கு வழங்கினார்கள், இஸ்லாமியர்கள் 8 குரான்களை எனக்குப் பரிசாகக் கொடுத்திருக்கிறார்கள். நான் கடந்தமுறை வரும்போது இரண்டு ஜெபமாலைகள் கொடுத்தார்கள். நான் அதை பூஜை அறையில் வைத்துப் பூஜை செய்கிறேன். ஆனால் போலீஸார் சர்ச், மசூதி பக்கத்தில் கொடிகட்டக் கூடாது என்கிறார்கள். பிரதமருக்கு 13 நாடுகள் உச்சபட்ச விருதுகள் கொடுத்திருக்கின்றன. அதில் 7 நாடுகள் இஸ்லாமிய நாடுகள். பிரதமர் கட்சியின் தொண்டர்கள் நாங்கள். இது போன்ற நிலையில் சர்ச், மசூதி பக்கத்தில் கொடி கட்டாதீர்கள் என காவலர்கள் பேசக் கூடாது. பத்மநாபபுரம் தொகுதியில் நடைப்பயணத்தின்போது சர்ச்சுக்குள் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தவர்கள் எங்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். மதத்தை உடைத்துவிட்டு, அவர்கள் மனதில் பா.ஜ.க பதிந்துவிட்டது. மனிதர்களை இணைப்பதற்காக கிடைத்ததுதான் காவலர் பணி. காற்று அடிக்கும்போது கோபுரத்தில் எச்சில் இலை ஒட்டி இருக்கும். அதுபோல எச்சி இலைகளுக்கு சல்யூட் அடிக்கும் வேலை எங்களுக்குக் கிடையாது. மதத்தை வைத்து கருணாநிதி செய்த பிரிவினையை காவலர்களான நீங்களும் செய்யாதீர்கள்.
பெயர் வைக்கும்போது எதுவாக ஆக வேண்டுமோ அதற்காக பெயர் வைக்க வேண்டும். சிவபெருமானின் பக்தனாக இருக்கவேண்டும் என என் பெற்றோர் எனக்கு அண்ணாமலை என பெயர் வைத்தார்கள். எதிர்க்கட்சிக் கூட்டணியினர் `இந்தியா' என பெயர் வைத்துவிட்டால், அவர்கள் இந்தியா ஆக முடியுமா. இந்தியா என்ற உணர்வு உங்களுக்கு வராது. இன்னும் 40 ஆண்டுகள் அதற்காகப் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். 2018-ல் பிரதமர்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தார்கள். 2019-ல் அதிக இடங்களில் வென்று பிரதமர் ஆனார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தார்கள். 2028-ல் அடுத்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும்போது சந்திக்கலாம் என பிரதமர் சொன்னார். எனவே 2024-ல் மோடி மீண்டும் பிரதமராவது உறுதி" என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "பிரதமர் கன்னியாகுமரியில் போட்டியிடுகிறாரா, ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறாரா, வாரணாசியில் போட்டியிடுகிறாரா என்பது தெரியாது. தமிழகத்தில் போட்டியிடலாம், போட்டியிடாமல் இருக்கலாம். எங்கோ ஒரு தொகுதியில் நின்று மக்களின் அன்பைப் பெறப்போகிறார். பிரதமரைப் பார்த்து தி.மு.க-வுக்கு பயமாக இருக்கிறது. அதனால், பிரதமர் ராமநாதபுரத்துக்கு வந்துவிடுவார் என்ற பயத்தில் தி.மு.க பூத் ஏஜென்ட்டுகள் மாநாட்டை ராமநாதபுரத்தில் நடத்துகிறார் ஸ்டாலின். ஸ்டாலின் பேசும்போது அவரின் கண்களிலும், முகத்திலும் பிரதமரைப் பற்றிய பயம் தெரிகிறது. மீனவர்கள் மோடி பக்கம் வந்துவிட்டது தெரிந்துவிட்டதால், கண்துடைப்புக்காக மீனவர் மாநாடு நடத்துகிறார் ஸ்டாலின். இரண்டாவது ஊழல் பட்டியலைப் பொறுத்தவரை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் கொடுத்திருக்கிறோம். ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
from India News https://ift.tt/BpAKS1c
0 Comments