சேலம் மாவட்டம், எடப்பாடி சிலுவம்பாளையத்தில் அ.தி.மு.க கழகப் பொதுச் செயலாளர் பழனிசாமி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர், ``அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பினால் நீதி, தர்மம், உண்மை வென்றுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. அதிமுக பலமாக உள்ளது. அதிமுக நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும். தேசியளவில் தேசிய ஜனநாயக கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி இருக்கும், இந்த கூட்டணி மகத்தான வெற்றிபெறும். அதிமுக தீர்ப்பு நீதிக்கும், தர்மத்திற்கும், உண்மைக்கும் கிடைத்த தீர்ப்பு. எங்களிடம் நியாயம் இருந்தது. அதனால் தீர்ப்பு கிடைத்துள்ளது.
கொடநாடு வழக்கில் என்னை சம்பந்தப்படுத்தி பேசுவது தவறான விஷயம். ஊடகங்கள் கேட்பதும் தவறானது. சாலையில் செல்பவர்களை வைத்துக்கொண்டு ஊடகம் கேட்பது தவறு.
ஒரு ஆட்சி இருக்கும்போது, பல்வேறு சம்பவங்கள் நடைபெறும். அந்த சம்பவத்தை சட்டரீதியாக அரசு அணுகி நடவடிக்கை எடுத்துள்ளது. வேண்டுமென்றே இன்றைய ஆட்சியாளர்கள் திரித்து அவர்களுக்கு சாதகமாக சூழ்ச்சி செய்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. அதிமுக சட்டத்தின் ஆட்சி நடத்தியது. அதை உணர்ந்து கொள்ள வேண்டும். தனபால் எப்படிப்பட்டவர், அவர் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர். இன்றைய ஆட்சியாளர்களே விசாரணைக்கு அழைத்து சென்று மூன்று மாதங்கள் சிறையில் அடைத்தனர். நிலஅபகரிப்பில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வந்தவர் அவர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் என்று கனகராஜை இனியாரும் சொல்லக்கூடாது. அவர் சசிகலாவின் ஓட்டுநராக இருந்தவர். மீறி ஜெயலலிதாவின் ஓட்டுநர் என கூறினால் நீதிமன்றத்தின் வாயிலாக வழக்கு தொடர்வோம். கனகராஜ் ஒருபோதும் ஜெயலலிதாவுக்கு ஓட்டுநராக இருந்தது கிடையாது. ஒரு குற்றவாளியை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கார் ஓட்டுநராக இருந்தார் என்று கூறுவது தவறு. கொடநாடு வழக்கு நீதிமன்றத்தில் சட்டரீதியாக நடைபெற்று வருகிறது. அதைப்பற்றி பேசுவதே தவறு, நீதிமன்றத்தில் வழக்கு இருப்பவர்கள் மீது பேசுவது வழக்கிற்கு குந்தகம் விளைவித்து விடும்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒன்பது மாதங்கள் இருக்கிறது, தேர்தலுக்கான அடிப்படை பணிகளை மேற்கொண்டு வருகிறோம். பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறோம். மதுரையில் எழுச்சி மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற்றது. தென்மாவட்டத்தில் நடத்த முடியாது என்று கூறினார்கள். ஆனால் 15 லட்சம்பேர் கலந்துகொண்டனர். தமிழக வரலாற்றில் எந்த ஒரு கட்சிக்கும் தொண்டர்கள், கழக நிர்வாகிகள், மக்கள் கலந்து கொண்டதாக சரித்திரம் இல்லை. அந்த அளவிற்கு வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டை நடத்தி காட்டியுள்ளோம். இனியாரும் அதிமுக இரண்டாக, மூன்றாக சென்றுவிட்டது என்று கூறவேண்டாம், ஒன்றாக இருக்கிறது என்று மாநாட்டின் மூலம் நிரூபித்து காட்டியுள்ளோம்” என்றார்.
from India News https://ift.tt/XoDe2Cs
0 Comments