காலை உணவுத் திட்டம்: பட்டியல் சமூக பெண் சமைத்த உணவு புறக்கணிப்பு - தொடக்க நாளிலே தீண்டாமை கொடுமை!

அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் காலை உணவை விரிவுபடுத்தும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த, அதே நேரத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஊழியர் சமைத்த காரணத்துக்காக, அந்த உணவை ஒரு தரப்பினர் தங்கள் குழந்தைகளுக்கு கொடுக்க மறுத்த சம்பவம் திருப்பூரில் அரங்கேறி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் வள்ளிபுரம் ஊராட்சிக்குட்பட்ட காளிங்கராயன்பாளையத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 40 குழந்தைகள் படித்து வருகின்றனர்.

காலை உணவுத் திட்டம்

எல்லா பள்ளிகளிலும் தொடங்கப்பட்டதுபோல், காலை சிற்றுண்டித் திட்டம் காளிங்கராயன்பாளையம் தொடக்கப் பள்ளியிலும் வெள்ளிக்கிழமை காலை தொடங்கப்பட்டது. குழந்தைகளுக்கான உணவை ஆதிராவிடர் காலனியை சேர்ந்த தீபா என்ற ஊழியர் சமைத்து, பரிமாறி உள்ளார். இதை அறிந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெற்றோர், தீபா உணவு சமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், தங்கள் குழந்தைகளுக்கு அந்த உணவைக் கொடுக்காமல் புறக்கணித்து அழைத்துச் சென்றனர். இதையறிந்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பிரச்னையில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனாலும், சமாதானம் ஆகாத பெற்றோர் காலை உணவை குழந்தைகளுக்கு வழங்கவில்லை.

சிற்றூண்டித் திட்டம்

இதுகுறித்து திருப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கூறுகையில், "பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண் சமைத்ததால், ஒரு தரப்பினர் அந்த உணவை தங்கள் குழந்தைகளுக்கு கொடுக்க மறுத்ததுடன், அந்த பெண் ஊழியரை மாற்ற வேண்டும் என்றனர். இனிவரும் நாள்களிலும் அந்தப் பெண்தான் குழந்தைகளுக்கான உணவை சமைப்பார் என்று பிரச்னையில் ஈடுபட்டவர்களிடம் திட்டவட்டமாக கூறிவிட்டேன். இதனால், குழந்தைகளை அழைத்துச் சென்றுவிட்டு பின்னர் மீண்டும் அவர்களை பள்ளிக்கு வந்துவிட்டனர்" என்றார்.

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒரே காரணத்துக்காக பெண் சமையல் ஊழியருக்கு ஒரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது தீண்டாமையின் உச்சமாகவே பார்க்கப்படுகிறது.



from India News https://ift.tt/A6g29I1

Post a Comment

0 Comments