அடுத்தாண்டு லோக் சபா தேர்தலில் பாஜக வீழ்த்த எதிர்க்கட்சிகளின் இந்தியா (I.N.D.I.A) கூட்டணி ஆயத்தமாகிவரும் வேளையில், `பிரியங்கா காந்தி நாடாளுமன்றத்துக்குச் செல்வது மிகவும் நல்லது, கட்சிக்கும் இது பெரிய அளவில் உதவும்' என அவரின் கணவர் ராபர்ட் வதேரா கூறியது காங்கிரஸ் வட்டத்தில் பேசுபொருளானது. அதேபோல். `மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட்டால் பிரியங்கா காந்தி நிச்சயம் வெல்வார்' என சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்தும் கூறியிருந்தார்.
இவ்வாறான சூழலில், ராகுலுக்கும் பிரியங்கா காந்திக்கும் கட்சியில் அதிகார மோதல் இருப்பதாக பா.ஜ.க ஐ.டி செல் தலைவர் அமித் மாள்வியா நேற்று முன்தினம் கொளுத்திப்போட்டார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்ட வீடியோவில், ``சமத்துவம், பெண்களுக்கு அதிகாரம் என்று காங்கிரஸ் பேசுகிறது. ஆனால், கட்சியை தங்களின் சொத்தாகக் கருதும் காந்தி குடும்பத்திலேயே பெண்களுக்கு அதிகாரமோ, சம உரிமையோ இல்லை. தன் மகன் மீது கொண்ட கண்மூடித்தமான அன்பினால் ராகுல் காந்தியையே மீண்டும் மீண்டும் முன்னிறுத்தும் சோனியா காந்தி, பிரியங்கா காந்தியை தேர்தலில் போட்டியிடக் கூட அனுமதிக்கவில்லை.
ஏனென்றால், எங்கு பிரியங்கா காந்தி, தன் சகோதரனை விஞ்சிவிடலாம் என்றும், நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு மாற்றாக அமைந்துவிடலாம் என்றும் சோனியா காந்தி அச்சப்படுகிறார். இதனால் தான் அம்மா - மகன் இருவரும், பிரியங்கா காந்தியை தேர்தலில் போட்டியிட விடாமல் நிறுத்திவைத்திருக்கின்றனர். இதனை தற்போது உணர்ந்த ராபர்ட் வதேரா, பிரியங்கா காந்தி வேட்பாளராகக் களமிறக்கப்பட வேண்டும் எனக் கூறிவருகிறார்" என்று அமித் மாள்வியா பேசியிருந்தார்.
இந்த நிலையில், சகோதர சகோதரிகள் ஒருவரையொருவர் அன்பை வெளிப்படுத்திக் கொள்ளும் ரக்ஷா பந்தன் தினமான நேற்று, அமித் மாளவியா இத்தகைய கூற்றுக்கு பிரியங்கா காந்தி பதிலளித்திருக்கிறார்.
இதுகுறித்து பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ``பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற வேறு எந்தப் பிரச்னைகளையும் பாஜகவினர் கண்டு கொள்ளவில்லையா...
மன்னிக்கவும், உங்களின் கனவு ஒருபோதும் நனவாகாது. நானும் என் சகோதரரும் ஒருவருக்கொருவர் அன்பு, நம்பிக்கை, மரியாதை மட்டுமே கொண்டிருக்கிறோம். என்றென்றும் இப்படியே இருப்போம். பயப்படாதீர், கோடிக்கணக்கான சகோதரிகள் மற்றும் சகோதரர்களுடன் சேர்ந்து, உங்களின் பொய்கள், கொள்ளைகள், வெற்றுப் பிரசாரங்களின் ஆணவம் ஆகியவற்றை முறியடிப்போம்" என்று குறிப்பிட்டு ரக்ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இன்ஸ்டாகிராமிலும், ராகுல் காந்தியுடன் இருக்கும் சிறுவயது படங்களை பிரியங்கா காந்தி பகிர்ந்திருந்தார்.
from India News https://ift.tt/NJkivsA
0 Comments