ஓபிஎஸ் வழக்கு: `லஞ்ச ஒழிப்புத்துறை ஆட்சியாளர்களுக்கு ஏற்ப பச்சோந்தியாகச் செயல்படுகிறது!' - நீதிபதி

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை, 2012-ல் சிவகங்கை நீதிமன்றம் திரும்பப்பெற அனுமதித்த உத்தரவுக்கு எதிராக, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருக்கும் சென்னை உயர் நீதிமன்றம், தற்போது இதில் லஞ்ச ஒழிப்புத்துறை, பன்னீர்செல்வம் உள்ளிட்டோரைப் பதிலளிக்க உத்தரவிட்டிருக்கிறது.

முன்னதாக, 2001 முதல் 2006 வரையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராகப் பதவிவகித்த ஓ.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 77 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துகள் குவித்ததாக, 2006-ல் தி.மு.க ஆட்சிக்காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவுசெய்தது.

ஓ.பன்னீர்செல்வம்

இதில் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அவரின் மனைவி விஜயலட்சுமி, மகன் ரவீந்திரநாத் குமார், தம்பி ஓ.ராஜா, அவரின் மனைவி சசிகலாவதி, மற்றொரு தம்பி ஓ.பாலமுருகன், அவரின் மனைவி லதா மகேஸ்வரி ஆகியோர்மீது பதிவுசெய்யப்பட்ட இந்த வழக்கை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை 2012-ல் மதுரை நீதிமன்றத்திலிருந்து சிவகங்கை நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது. அதையடுத்து, மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னர், பன்னீர்செல்வம் மீது வழக்கு தொடர்வதற்காக அளித்த அனுமதியை திரும்பப்பெற்று, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

அதைத் தொடர்ந்து, குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் கிடைக்கவில்லை எனக் கூறி, வழக்கைத் திரும்பப் பெற அனுமதிக்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சிவகங்கை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை ஏற்ற சிவகங்கை நீதிமன்றம், 2012-ல் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை இந்த வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டது. இந்த நிலையில், சிவகங்கை நீதிமன்றத்தின் உத்தரவை மறு ஆய்வு செய்வது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

அதன்படி இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ``எதிர்க்கட்சியினருக்கு எதிராக வழக்குகளைப் பதிவுசெய்யும் லஞ்ச ஒழிப்புத்துறை, எதிர்க்கட்சி ஆளுங்கட்சியாகும்போது மேல்விசாரணை நடத்த அனுமதி கேட்டு, அதன் பிறகு இறுதி அறிக்கை தாக்கல் செய்து, குற்றம்சாட்டப்பட்டவர்களை வழக்கிலிருந்து விடுவிக்க வகை செய்கிறது.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் 374 சதவிகிதம் அதிகமாக வருவாய் ஈட்டியிருப்பதாக, 272 சாட்சிகள், 235 ஆவணங்களைச் சேகரித்து 3 ஆண்டுகள் நடத்திய விசாரணையின் இறுதியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வம் சார்ந்த கட்சி மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரே மேல்விசாரணை கோரி மனுத் தாக்கல் செய்து அது ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது.

ஓ.பன்னீர்செல்வம்

அதிகார வரம்பே இல்லாத சிவகங்கை நீதிமன்றத்துக்கு இந்த வழக்கை மாற்றியதன் மூலம் உயர் நீதிமன்றமும் தவறிழைத்திருக்கிறது. மேல்விசாரணைக்குப் பிறகு இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு பதிலாக, அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு, அரசு தலைமை வழக்கறிஞர், அரசு தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டிருக்கிறது. சபாநாயகர் இந்த வழக்கில் ஒரு நீதிபதிபோல செயல்பட்டு, ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக வழக்கு தொடர அளித்த அனுமதியை திரும்பப் பெறுவதாக அறிவித்திருக்கிறார். இது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது. இதில், குற்ற விசாரணை நடைமுறைகள் கேலிக்கூத்தாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு, சட்டங்கள் எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்குப் பொருந்தாது என்று அறிவித்துவிடலாம்.

எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளின் விசாரணை நடைமுறையில் பிரச்னை இருக்கிறது. லஞ்ச ஒழிப்புத்துறை சுதந்திரமான முறையில் செயல்படாமல், ஆட்சியாளர்களுக்கு ஏற்ப நிறம் மாறும் பச்சோந்தியாகச் செயல்படுகிறது. இது போன்ற தவறுகள் நடைபெற அனுமதித்தால், அது புற்றுநோய்போல இந்தச் சமுதாயத்தைச் சிதைத்துவிடும். மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை உருவாக்கப்பட்டதற்கான நோக்கமும் அழிந்துவிடும். எனவே, 2012-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை தற்போது மறு ஆய்வு செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை" என்று உத்தரவிட்டார்.

குறிப்பாக, இந்த வழக்கு தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

தங்கம் தென்னரசு - ஆனந்த் வெங்கடேஷ் - கே.கே.எஸ்.எஸ்.ஆர்

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஏற்கனவே, தி.மு.க-வைச் சேர்ந்த அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரை சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து கீழமை நீதிமன்றங்கள் விடுதலை செய்தது மற்றும் விடுவித்த தீர்ப்புகளைத் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



from India News https://ift.tt/HCFPMn9

Post a Comment

0 Comments