கருணாநிதி பிறந்த ஊரில் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!

நாகை மாவட்டத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளையில், அவர் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் காலை உணவு விரிவாக்க திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். இதற்காக திருக்குவளை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

முதல்வர் ஸ்டாலின்

பெரும்பாலான பள்ளி மாணவர்கள் காலை 7 மணிக்கெல்லாம் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர். பின்னர், சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின் பள்ளிக்கு வந்தார். அதைத்தொடர்ந்து, இரண்டு மாணவர்கள் அவருக்கு பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றனர். மாணவர்களிடம், `நான் யார்?' என ஸ்டாலின் கேட்க, அவர்கள், `எங்கள் முதல்வர்' என்றனர். பின்னர் காலை உணவுக்கான விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்த ஸ்டாலின் மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.

ரவா காய்கறி கிச்சடி, சர்க்கரை பொங்கல் மற்றும் சாம்பார் பரிமாறப்பட்டது. அப்போது, முதல்வர் அருகே அமர்ந்து சாப்பிட்ட 1-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஹரீஷ் வாட்ச் கட்டியிருக்க அவரிம் ஸ்டாலின் மணி கேட்டார். அதற்கு அந்த மாணவன், `வாட்ச் ஓடவில்லை தப்பு தப்பா மணி காட்டுது' என்றான். மேலும், மாணவர்கள் பொறுமையாக சாப்பிட்டு கொண்டிருக்க சீக்கிரமே சாப்பிட்டு முடித்த ஸ்டாலின் சிறிது நேரம் மாணவர்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை அமர்ந்திருந்தார்.

முதல்வர் வருகையையொட்டி புதிய கலையரங்கம், புதிய கழிப்பறை கட்டப்பட்டு பல வசதிகள் மேம்படுத்தப்பட்டிருத்தது. ஆனால், கழிப்பறை பணிகள் முழுமையாக முடிவடையாமலேயே திறக்கப்பட்டிருந்ததை பார்க்க முடிந்தது.

முதல்வர் ஸ்டாலின்

பள்ளிக்கு அருகிலேயே, தற்போது முத்துவேலர் நூலகமாக இருக்கும் கருணாநிதி பிறந்த வீடு இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் பள்ளிக்கு வரும் போதுஅங்கும் வருவதற்கு வாய்ப்புள்ளது என சொல்லப்பட்டதால் அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.

காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் முத்துவேலர் நூலகத்துக்கும் சென்று பார்வையிட்டார் ஸ்டாலின்.



from India News https://ift.tt/bY8UqVh

Post a Comment

0 Comments