மயிலாடுதுறை மாவட்டம், சுப்பிரமணியபுரம் கலைஞர் அரங்கத்தில் மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த மாநில தி.மு.க இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ``எந்த அரசியல் கட்சிக்கும் இல்லாத இளைஞரணி கூட்டம் நம்மிடம் உள்ளது. ஒவ்வொரு சக தொண்டரும் உதயநிதியாக மாற வேண்டும் என்பதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் குறிக்கோள். தமிழ்நாட்டுடன் புதுச்சேரியும் இணைந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. மாநாடு எப்படி நடத்தக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக மதுரை அ.தி.மு.க மாநாடு விளங்குகிறது.
அ.தி.மு.க ஒரு வரலாறற்ற அணியாகத் திகழ்கிறது. மதுரை அ.தி.மு.க மாநாட்டில் அவர்களின் கொள்கைகளும் வரலாறுகளும் பெரிதாகப் பேசப்படவில்லை, கொட்டப்பட்ட புளியோதரை பற்றித்தான் பெரிதாகப் பேசப்பட்டது. மாநாட்டில் கலந்துகொண்ட ஒருவரின் மனைவி காணவில்லை எனப் புகார் எழுந்திருக்கிறது. முதலில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் போய் கேளுங்கள், உடனே தீர்வு கிடைக்கும். மதுரை அ.தி.மு.க மாநாடு நடைபெற்ற அந்த தினம்தான் நீட் தேர்விற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் தி.மு.க-வின் உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற்றது.
நான் எடப்பாடி பழனிசாமியிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறேன். மத்தியில் மோடி அரசுக்கு எதிராக நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி, எங்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுங்கள். ஏனெனில் நீட் தேர்வைக் கொண்டுவர அ.தி.மு.க-தான் மூலக் காரணம். தி.மு.க நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி, ``மத்தியில் பாசிச பா.ஜ.க ஆட்சி கவிழ வேண்டுமென்றால், முதலில் அ.தி.மு.க அழிய வேண்டும். நாடாளுமன்றத்தில் மோடி, அதானி ஒரே விமானத்தில் சென்றதாகச் சுட்டிக்காட்டிய ராகுல் காந்தியை, எம்.பி பதவியிலிருந்து நீக்கினர்.
மணிப்பூர் சம்பவத்தில் ராகுல் காந்தியை மக்களைச் சந்திக்கக்கூட அனுமதிக்கவில்லை. சி.ஏ.ஜி அறிக்கை பா.ஜ.க செய்த ஊழலை உலகறியச் செய்திருக்கிறது. ஒன்பது வருடங்களுக்கு முன்பு 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த மோடி, மக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடப்படும் எனப் பொய்யான வாக்குறுதி அளித்துள்ளார். ஒரு கிலோமீட்டர் போடப்பட்ட சாலைக்கு 250 கோடி ரூபாய் கணக்குக் காட்டிய ஒரே அரசு பா.ஜ.க-தான். மோடி விமானி இல்லாமல் கூடப் போவார். ஆனால், அதானி இல்லாமல் போக மாட்டார்... அரசின் பல சொத்துகள் அதானி போன்ற ஊழல்வாதிகளிடம்தான் உள்ளன. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் `இந்தியா' கூட்டணி வெற்றி பெறுவது உங்கள் கையில்தான் உள்ளது. சேலத்தில் நடைபெறவிருக்கும் மாநாடு இந்தியா முழுவதும் மாறுதல்களை ஏற்படுத்தும்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from India News https://ift.tt/ohXjC9Q
0 Comments