இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு கடந்த மார்ச் மாதம் 7-ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தேர்தலை நடத்தக்கூடிய சூழலில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு இல்லை. காரணம், மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிராக நடைபெற்ற போராட்டம்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல்ரீதியான அத்துமீறல்களில் ஈடுபட்டார் என்று மல்யுத்த வீரங்கனைகள் பலர் குற்றம்சாட்டினர். அதனடிப்படையில், சட்டப்படி அவர்மீது நடவடிக்கை எடுத்திருந்தால், பிரச்னை அத்தோடு முடிந்திருக்கும். ஆனால், பா.ஜ.க-வில் செல்வாக்குமிக்க நபராக வலம்வரும் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பா.ஜ.க-வின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் அவர், உத்தரப்பிரதேச மாநிலம் கைசர்கஞ்ச் தொகுதியிலிருந்து எம்.பி-யாகத் தேர்வுசெய்யப்பட்டவர். இவர், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர். 2014-ம் ஆண்டும், 2019-ம் ஆண்டும் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர், 2011-ம் ஆண்டு முதல் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராகப் பதவி வகித்துவந்தார்.
சர்வதேச அளவிலான மல்யுத்தப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற வீராங்கனைகள் பிரிஜ் பூஷண் சிங்குக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகள் எழுப்பினர். ஆனால், அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, காமன்வெல்த் போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற சரிதா மோர், ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீராங்கனை பஜ்ரங் புனியா உட்பட 30 மல்யுத்த வீராங்கணைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பதவியிலிருந்து அவரை நீக்க வேண்டும் ஆகியவை போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனைகளின் முக்கியக் கோரிக்கைகளாக இருந்தன. அந்தப் போராட்டம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. தேசிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தியது. அதன் பிறகும்கூட, பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்மீது போக்சோ உள்ளிட்ட வழக்குகள் பதிவுசெய்யப்பட்டபோதிலும், அவரை போலீஸார் கைது செய்யவில்லை.
எனவே, பா.ஜ.க-வைச் சேர்ந்தவர் என்பதால், மத்திய அரசு அவரைக் காப்பாற்றுகிறது என்ற குற்றச்சாட்டை பலர் எழுப்பினர். மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்துக்கு இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் விளையாட்டு வீரர்கள் பலர் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி எந்தக் கருத்தையும் சொல்லவில்லை என்ற வருத்தத்தை விளையாட்டு வீரர்கள் தெரிவித்தனர்.
இந்தப் பிரச்னை பற்றயெரிந்துகொண்டிருந்த சூழலில், இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நிலையில், 45 நாள்களில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று மே மாதம் 30-ம் தேதி இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு சர்வதேச மல்யுத்த சம்மேளனம் கடிதம் எழுதியது. அப்படி தேர்தல் நடத்தப்படாவிட்டால், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் அந்தக் கடிதத்தில் எச்சரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 4-ம் தேதி, ஜூலை 11-ம் தேதி என தேர்தல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு, பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு, ஆகஸ்ட் 12-ம் தேதி தேர்தல் நடைபெறும் சொல்லப்பட்டது.
இதற்கிடையில், தேர்தலில் வாக்களிக்க அனுமதி மறுத்ததை எதிர்த்து ஹரியானா அமெச்சூர் மல்யுத்த சங்கத்தினர் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில், ஆகஸ்ட் 28-ம் தேதி வரை இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தலை நடத்த பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
இந்தச் சூழலில், திட்டமிட்டபடி தேர்தலை நடத்தாததால் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரத்தை சர்வதேச மல்யுத்த சம்மேளனம் தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறது. இதனால், சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள், இந்தியக் கொடியின் கீழ் பங்கேற்க முடியாத துயர நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலைமைக்கு காரணம் மத்திய அரசுதான் என்று பாதிக்கப்பட்ட மல்யுத்த வீரர்கள் தரப்பு குற்றம்சாட்டுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from India News https://ift.tt/8WwipZS
0 Comments