``மோடிக்கு தெரிந்த எடப்பாடி பழனிசாமியின் அருமை அண்ணாமலைக்கு ஏன் தெரியவில்லை?" - செல்லூர் ராஜூ பொளேர்

மதுரையில் ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெறவுள்ள மாநாட்டுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.

அந்தவகையில் மதுரை ஜான்சி ராணி பூங்கா அருகே ரிக்‌ஷா ஊர்வலத்தை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தானும் ரிக்‌ஷா ஓட்டி தொண்டர்களை குஷிபடுத்தினார்.

ரிக்‌ஷா ஊர்வலத்தை தொடங்கி வைத்தபோது

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், "ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெறும் அதிமுக மாநாடு இதற்கு முன்பு நடத்திய மாநாட்டை விடவும், இதற்கு பின்பும் யாரும் நடத்த முடியாத அளவிற்கும் அமையும்.

செல்லூர் ராஜூ

ஒரு எம்.ஜி.ஆரின் படத்தை மிஞ்ச வேண்டும் என்றால் மற்றொரு எம்.ஜி.ஆர் படம் தான் வெற்றியை முறியடிக்கும். அதுபோல் அதிமுக மாநாட்டை மற்றொரு அதிமுக மாநாடுதான் முறியடிக்கும்.

எத்தனை துரோகிகள் கட்சியை விட்டுப்போனாலும் கவலை இல்லை. இரட்டை இலை எங்கு உள்ளதோ, தொண்டர்களும் அங்குதான் இருப்பார்கள். ஓ.பி.எஸ் குறித்து விமர்சித்து பேசிய வார்த்தைகள் நான் சொன்னது அல்ல, இதற்கு முன்னால் பலரும் கட்சியை விட்டு வெளியேறியபோது ஜெயலலிதா குறிப்பிட்டது. அதிமுக எனும் கோயிலுக்குள் இருக்கும் வரை அவர்கள் கல்லாக இருந்தாலும் மதிப்போம். கோயிலிலிருந்து வெளியே வந்துவிட்டால் அவர்களை மிதித்து விட்டு சென்று விடுவோம்.

கொடநாடு வழக்கை தீவிரமாக விசாரித்தார் எடப்பாடி பழனிசாமி. அந்த வழக்கில் ஈடுபட்டது திமுகவினர்தான் என்பது அப்போதே தெரிய வந்தது. துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த போதே கொடநாடு வழக்கு விசாரணை குறித்து அவருக்கு நன்றாக தெரிந்திருந்தும், இப்போது போராட்டம் நடத்துகிறார் என்றால் அவரின் நோக்கம் என்ன?

அண்ணாமலை பாஜகவின் மாநில தலைவர், ஜஸ்ட் லைக் தட் அவ்வளவுதான். எங்களுக்கு மோடி ஜி, அமித் ஷா ஜி, நட்டா ஜி தான் முக்கியம். கூட்டணி கட்சியினர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை அழைத்து பக்கத்தில் அமர வைத்தார் மோடி. மோடிக்கு தெரிந்த எடப்பாடி பழனிசாமியின் அருமை அண்ணாமலைக்கு ஏன் தெரியவில்லை?

செல்லூர் ராஜூ

காவல்துறையினர் ஸ்பாட் ஃபைன் என்ற பெயரில் மக்களை துன்பத்துக்கு உள்ளாக்கி வருகின்றனர். திமுக ஆட்சியில் விலை வாசி உள்ளிட்ட எல்லாமே வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. மதுரையில் வெயில் கூட வரலாற்றில் இல்லாத அளவுக்கு 108 டிகிரி அடித்துள்ளது" என்றார்.



from India News https://ift.tt/CocY630

Post a Comment

0 Comments