டெல்லி மசோதா: ``மத்திய அரசு பின்வாசல் வழியாக வர முயற்சி செய்கிறது!" - அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி, டெல்லி யூனியன் பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கிறது. யூனியன் பிரதேசங்களில், துணைநிலை ஆளுநருக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், துணைநிலை ஆளுநருக்குமிடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு இருந்துவருகிறது. குறிப்பாக, அரசு அதிகாரிகளை நியமிப்பது, இடமாறுதல் தொடர்பான விவகாரங்களில் ஆளுநர் தொடர்ந்து தலையிடும் விவகாரம் உச்ச நீதிமன்றம் வரைச் சென்று, ஆம் ஆத்மி அரசு வெற்றிபெற்றது.

நாடாளுமன்றம்

ஆனால், மத்திய பா.ஜ.க அரசு டெல்லி அதிகாரிகள் நியமன சட்ட மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்து, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியது. மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட இந்த சட்ட மசோதா சுமார் 8 மணிநேர விவாதத்துக்குப் பின் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் மசோதாவுக்கு ஆதரவாக 131 நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிர்ப்பு தெரிவித்து 102 வாக்குகளும் பதிவாகின. நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் மற்றும் ஜெகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகள் முன்னர் தெரிவித்தது போலவே மசோதாவுக்கு ஆதரவு அளித்தன.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "ஆம் ஆத்மிக்கு எதிராக பா.ஜ.க நான்கு தேர்தல்களில் தோல்வியடைந்திருக்கிறது. தற்போது அவர்கள் பின்கதவு வழியாக டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க முயன்றிருக்கிறார்கள். இது இந்தியாவின் ஜனநாயகத்திற்கு 'கறுப்பு நாள்'.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

இது டெல்லி மக்களின் வாக்குரிமையை அவமதிக்கும் செயல். டெல்லி நியமன மசோதாவுக்கு எதிராக ஆம் ஆத்மிக்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றி." எனத் தெரிவித்தார். கடந்த மாதம் உச்ச நீதிமன்றம், டெல்லியில் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை ஆராய அரசியலமைப்பு அமர்வை அமைத்தது. அதன் முடிவுகள் குறித்து இன்னும் தீர்ப்பளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



from India News https://ift.tt/MLsFBdV

Post a Comment

0 Comments