கல்வி நிறுவனங்கள் இருக்கும் பகுதியில் பிணவறை; அச்சப்படும் மாணவர்கள்- இடமாற்றம் செய்ய எழும் கோரிக்கை!

திருநெல்வேலி – திருச்செந்தூர் பிரதான சாலையில் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம், அதற்கடுத்ததாக தடய அறிவியல்துறை அலுவலகம், சட்டக் கல்லூரி மாணவியர் விடுதி, அரசு சட்டக் கல்லூரி போன்றவை வரிசையாக அமைந்திருக்கின்றன. இந்த வரிசையில் புதிய வரவாக இணைந்திருக்கிறது திருநெல்வேலி அரசு மருத்துவமனையின் பிணக்கூறாய்வு மற்றும் பிணவறை.

பிணக்கூறாய்வு மற்றும் பிணவறை

இதற்கு நேரெதிரே தினசரி இரண்டு  ஷிஃப்ட்களுடன் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயிலும் சதக்கத்துல்லா கல்லூரி அமைந்திருக்கிறது. அதேபோல சற்று தள்ளி 100 மீட்டர் தூரத்தில், இஸ்மாயில் ஐ.டி.ஐ என்ற தொழிற்பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இவ்வாறு பல்வேறு கல்வி நிறுவனங்கள் அமைந்திருக்கும் பகுதியில் புதிதாக உடற்கூறாய்வு மையம் மற்றும் பிணவறை அமைக்கப்பட்டிருப்பதற்கு, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் கண்டனத்தைப் பதிவுசெய்து வருவதுடன், உடனடியாக அங்கிருந்து உடற்கூறாய்வு மையம் மற்றும் பிணவறையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என திருநெல்வேலி அரசு மருத்துவமனை நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

பிரதான சாலை

தென் தமிழகத்தில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அடுத்ததாக மிகப்பெரிய அரசு மருத்துவமனை என்றால் அது திருநெல்வேலி அரசு மருத்துவமனைதான். இந்த அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவை சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து அமைந்திருக்கின்றன. திருநெல்வேலி பாளையங்கோட்டையில், மேட்டுத்திடல் என்னுமிடத்தில் அமைந்திருந்த இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிணவறை மற்றும் உடற்கூறாய்வு மையம் இதுவரை, மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஓர் ஓரமான இடத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்புமின்றிதான் செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில், புதிதாகக் கட்டடம் கட்ட நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு, திருநெல்வேலி-திருச்செந்தூர் பிரதான சாலையில், மேற்குறிப்பிட்ட கல்வி நிறுவனங்கள் அமைந்திருக்கும் பகுதியில் தற்போது கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டிருக்கிறது. இந்த உடற்கூறாய்வு மற்றும் பிணவறைக் கட்டடத்தின் வாசலில்தான் இந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் மேற்குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் தினமும் பயன்படுத்தும் பேருந்து நிறுத்தமும் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கல்லூரி

திருநெல்வேலி மட்டுமன்றி, அதன் அருகிலுள்ள பெரிய ஊர்களில் நிகழும் துர்மரணங்கள், கொலைகள், விபத்துகள் போன்றவற்றில் உயிரிழப்பவர்களின் சடலங்கள் இங்கு கொண்டுவரப்பட்டு, உடற்கூறாய்வு செய்யப்பட்டு, பிணவறையில் வைக்கப்பட்டு, அதன் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். இதனால் எப்போதும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கூக்குரலிட்டு அழுது புலம்பும் காட்சிகள் தினசரி அரங்கேறும். தினசரி இந்தப் பகுதி மாணவர்கள் கல்லூரிக்குப் போகும்போதும், வரும்போதும் உயிரழந்தவர்களின் உறவினர்களின் அழுகுரல்களைக் கேட்டுக்கொண்டு, மன அழுத்தத்துடன் கல்லூரிக்குச் சென்று கல்வி பயின்று வருகின்றனர். இதனால் இந்த மாணவர்களின் மனநிலையில் மிகப்பெரும் பாதிப்பு ஏற்படும் என பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பகுதி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் மனஉளைச்சலைப் போக்க, இந்த உடற்கூறாய்வு மற்றும் பிணவறை கட்டடத்தை இந்த இடத்திலிருந்து அகற்ற வேண்டுமென திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாசலபதி (எ) குட்டி, இது தொடர்பாக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் புகார் தெரிவித்து, வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

இது குறித்து அவரிடம் பேசினோம். ``கடந்த இரு மாதங்களுக்கு முன்பு, ஒரு வழக்கறிஞர் வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து, அவரின் சடலம் வைக்கப்பட்டிருந்த இந்த உடற்கூறாய்வு மையத்துக்கு முன்பு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது இந்தக் காட்சிகளைக் கண்டு அச்சமடைந்த சட்டக் கல்லூரி மற்றும் சதக்கத்துல்லா கல்லூரி மாணவர்கள் சாலையின் நான்கு புறமும் சிதறி ஓடியதைக் கண்டேன். அப்போதுதான், ஒரு தவறான இடத்தில் இந்த உடற்கூறாய்வு மையம் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை நான் உணர்ந்து கொண்டேன். இதனால் இந்தப் பகுதியில் கல்வி பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மட்டுமன்றி, இந்தப் பகுதி பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

வெங்கடாசலபதி

மேலும், பெரும்பாலும் அடிக்கடி பல்வேறு காரணங்களால் கொலைச் சம்பவங்கள் நிகழும் இந்தப் பகுதியில், இறந்துபோனவர்களின் சடலத்தை வாங்க மறுத்து, உறவினர்கள் அடிக்கடி சாலைமறியல் போராட்டங்கள் நடத்துவதும் உண்டு. இதனால் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு, சட்டம் ஒழுங்கும் பாதிக்கப்படும். அதன் காரணமாக இங்குக் கல்வி பயிலும் மாணவ, மாணவியர் மட்டுமன்றி, இந்தப் பகுதி பொதுமக்களும் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதால்தான், நான் இது குறித்து நீதிமன்றத்தில் முறையிட்டு, வழக்கு தொடர்ந்திருக்கிறேன். மக்கள் நலனை முன்னிறுத்தியும், மாணவர்களின் அச்சம் மற்றும் கலக்கத்தைப் போக்கி அவர்கள் நல்ல முறையில் கல்வி பயிலவும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும் வேண்டி நான் தொடர்ந்திருக்கும் இந்த வழக்கில், விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன். விரைவில், இங்கிருக்கும் உடற்கூறாய்வு மையம் மற்றும் பிணவறை மூடப்படும் அல்லது வேறு இடத்துக்கு மாற்றப்படும் என எதிர்பார்க்கிறேன்" என்றார்.

Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs



from India News https://ift.tt/ehOwgIA

Post a Comment

0 Comments