2023 Elections: தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே வேட்பாளர் பட்டியல் வெளியீடு; பாஜக பிளான் என்ன?

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு இந்த ஆண்டின் இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதற்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆனால், இப்போதே வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது பா.ஜ.க

அமித் ஷா

பா.ஜ.க-வின் மத்திய தேர்தல் கமிட்டிக் கூட்டம் ஆகஸ்ட் 16-ம் தேதி கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெற்றது. அதில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அந்தக் கூட்டத்தில்தான், ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல்களை இறுதிசெய்திருக்கிறார்கள்.

அதையடுத்து, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கான பா.ஜ.க வேட்பாளர்களின் பட்டியல்களை தற்போது பா.ஜ.க வெளியிட்டிருக்கிறது. மொத்தம் 230 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேசத்துக்கு, 39 பேர்கொண்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க வெளியிட்டிருக்கிறது. மொத்தம் 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கருக்கு 5 பெண்கள் உட்பட 21 பேர்கொண்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க வெளியிட்டிருக்கிறது.

சிவராஜ் சிங் சௌஹான்

தேர்தலே அறிவிக்கப்படாத நிலையில், பா.ஜ.க ஏன் இவ்வளவு வேகம் காட்டுகிறது என்று பிற அரசியல் கட்சிகள் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றன. இந்த இரு மாநிலங்களிலும் பா.ஜ.க பலவீனமாக இருப்பதால், முன்கூட்டியே தேர்தலுக்கு நன்கு தயாராக வேண்டும் என்பதற்காக வேட்பாளர் பட்டியலை இப்போதே வெளியிட வேண்டும் என்று பா.ஜ.க தலைமை முடிவுசெய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மத்தியப் பிரதேசத்தில் 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிதான் வெற்றிபெற்றது. கமல்நாத்துக்கு முதல்வர் பதவியை வழங்கியது காங்கிரஸ் கட்சி. அதனால் அதிருப்தியில் இருந்தார் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா. அதைப் பயன்படுத்தி அவரை பா.ஜ.க தன் பக்கம் இழுத்துக்கொண்டது. ஜோதிராதித்யா தலைமையில் பல காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் சென்றுவிட்டனர். அப்படியாக, அங்கு ஆட்சியதிகாரத்தை பா.ஜ.க கைப்பற்றியது.

ஜோதிராதித்ய சிந்தியா

ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு மத்திய அமைச்சர் பதவியைக் கொடுத்து செட்டில் செய்துவிட்டார்கள். ஏற்கெனவே, பா.ஜ.க ஆட்சியில் அங்கு முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சௌஹான் மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமரவைக்கப்பட்டார். அதன் பிறகு பிரச்னை இல்லாமல் ஆட்சியை நடத்திய பா.ஜ.க., வரும் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று வியூகங்களை வகுத்துவருகிறது. ஆனால், மீண்டும் அங்கு காங்கிரஸ் வெற்றிபெறும் என்ற கருத்து நிலவுகிறது.

கடந்த மூன்று தேர்தலில் பா.ஜ.க-விடம் பறிகொடுத்த 66 தொகுதிகளில், செல்வாக்கான வேட்பாளர்களை நிறுத்துவதற்கான வேலைகளில் காங்கிரஸ் கட்சி மும்முரம் காட்டிவருகிறது. இதுவரை, 106 வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அடையாளம் கண்டிருக்கிறது. ஆனால், அவர்களின் பெயர்களை காங்கிரஸ் வெளியிடவில்லை.

கமல்நாத்

தேர்தல் நேரத்தில் சீட்டுக்காகக் கட்சியினர் சண்டை போட்டுக்கொள்வதை முன்கூட்டியே தடுப்பதற்காகவும், தேர்தல் பிரசாரத்தை முன்கூட்டிய தொடங்குவதற்காகவும் இந்த முடிவை காங்கிரஸ் எடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். தேர்தல் பணிகளை காங்கிரஸ் பரபரப்பாகத் தொடங்கிவிட்ட சூழலில்தான், காங்கிரஸை முந்திக்கொண்டு பா.ஜ.க வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.

சத்தீஸ்கரில் 2018-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க-வை காங்கிரஸ் தோற்கடித்தது. பூபேஷ் பாகல் முதல்வரானார். இந்த ஆட்சிமீது பெரிய அதிருப்தி இல்லை என்றும், மீண்டும் அங்கு காங்கிரஸ் வெற்றிபெறும் என்ற கருத்துக்கணிப்புகள் சமீபத்தில் வெளியாகின. எனவே, ஒருபோதும் அங்கு ஆட்சியை இழந்துவிடக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி பல்வேறு வியூகங்களை வகுத்துவருகிறது.

பூபேஷ் பாகல்

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையால் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது என்று நம்பும் காங்கிரஸ் கட்சி, `சத்தீஸ்கரில் நமக்கே வெற்றி' என்று கருதுகிறது. இந்த நிலையில், அந்த மாநிலத்தின் களச்சூழலைக் கணக்கில் கொண்டு, வேட்பாளர் பட்டியலை முன்கூட்டியே பா.ஜ.க வெளியிட்டிருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs



from India News https://ift.tt/6LrcAB0

Post a Comment

0 Comments