அவதூறு வழக்கு: `ராகுல் காந்தி ஆணவமாக இருந்தார்' - மனுதாரரான பாஜக MLA உச்ச நீதிமன்றத்தில் பதில்

காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் காந்தி, 2019-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, மோசடியில் ஈடுபட்டவர்களான லலித் மோடி, நிரவ் மோடி ஆகியோரை குறிப்பிடும் விதமாக `எப்படி எல்லாத் திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் வருகிறது?' என்று பேசியிருந்தார். அதைத்தொடர்ந்து குஜராத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ பூர்ணேஷ் மோடி, `மோடி சமூகத்தை ராகுல் காந்தி அவமதித்துவிட்டார்' என சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

ராகுல் காந்தி

இந்த வழக்கில் கடந்த மார்ச்சில் தீர்ப்பளித்த சூரத் நீதிமன்றம் , ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. அதன் பிறகு உடனடியாக மக்களவை எம்.பி பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் ஜாமீன் வாங்கிய ராகுல் காந்தி, தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி குஜராத் உயர் நீதிமன்றத்துக்குச் சென்றார். ஆனால், குஜராத் உயர் நீதிமன்றம் ராகுல் காந்தியின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.

அதைத்தொடர்ந்து ராகுல் காந்தி இதே கோரிக்கையுடன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராகுலின் மனுவுக்கு பதிலளிக்குமாறு மனுதாரருக்கும், குஜராத் அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது. இந்த நிலையில் மனுதாரரும், பா.ஜ.க எம்.எல்.ஏ-வுமான பூர்ணேஷ் மோடி, தண்டனை விதிக்கப்பட்டபோது ராகுல் காந்தி ஆணவமாக இருந்ததாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்.

ராகுல் காந்தி - பூர்ணேஷ் மோடி

ராகுல் காந்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நோட்டீஸுக்கு பதிலளித்த பூர்ணேஷ் மோடி, ``நீதிமன்றம் தண்டனை விதித்த சமயத்தில் மனந்திருந்துதல், மனவருத்தம் ஆகியவற்றிலிருந்து வெகு தொலைவுக்குச் சென்றுவிட்ட ராகுல் காந்தி தன்னுடைய ஆணவத்தை வெளிப்படுத்தினர். மேலும் நீதிமன்றத்தில் எந்தக் கருணையும் கோரவில்லை என்றும், தான் விமர்சித்ததற்காக மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்றும் ராகுல் காந்தி கூறினார். அதுமட்டுமல்லாமல், அந்த சமயத்தில் `தான் சாவர்க்கர் அல்ல காந்தி, மன்னிப்பு கேட்க மாட்டேன்' என்றும் அவர் கூறினார்" எனக் குறிப்பிட்டிருந்தார்.



from India News https://ift.tt/RGlfesv

Post a Comment

0 Comments