சென்னை மாநகர் போக்குவரத்துக்கழகத்துக்கு சொந்தமாக 31 பணிமனைகள் இருக்கின்றன. இதன் மூலம் தினசரி 3,200-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. முதலில் இந்த பேருந்துகளில் தனியார் நிறுவனங்களின் விளம்பரம் சுற்றுப்புற கண்ணாடிகளில் மட்டுமே இடம்பெற்றிருந்தது.
நாளைடைவில் கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்து பேருந்து முழுவதும் விளம்பரமாக இருக்கிறது. பல பேருந்துகளில் அவை எம்டிசி பஸ்கள் தான் என அடையாளம் காண முடியாத அளவுக்கு இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் இந்த விளம்பரங்கள் குறித்த சர்ச்சையும் வெடித்திருக்கிறது.
இதுகுறித்து கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் போக்குவரத்துத்துறை அமைசர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், "அரசுப் பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு என்று வரைமுறை இருக்கிறது. ஆனால், அவற்றையெல்லாம் மீறி பேருந்து முழுவதும் ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள்.
சின்ன இடத்தில் அரசுப் போக்குவரத்து கழகம் என வெளியில் தெரிகிறது. போக்குவரத்துக் கழகத்தில் வரைமுறைகளை மீறி விளம்பரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. பேருந்து முழுவதும் விளம்பரம் செய்வதால், அது சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்தை ஈர்த்து விபத்துகளைத்தான் ஏற்படுத்தும்.
காசு கொடுத்தால் எங்கு வேண்டுமென்றாலும் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வார்கள். பீர் கம்பெனி விளம்பர டி-ஷர்ட் போட்டு கிரிக்கெட் பார்க்க வருகிறார் அமைச்சர் உதயநிதி. அரசுப் பேருந்தில் பீர் விளம்பரம் போடாமல் இருப்பார்களா?. அந்த நிறுவனமே அவர்களுடையதுதான். போக்குவரத்துக் கழகத்தில்கூட அவர்கள் பணம் செலுத்தி விளம்பரம் செய்வார்கள்" என்றார் காட்டமாக.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ``அரசு மற்றும் அரசாங்க நிறுவனங்களில் விளம்பர செய்ய வேண்டும் என்றால் வெளிப்படை தன்மையுடன் விதிமுறைகளின்படி தான் செய்ய வேண்டும். டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களில் யார் அதிக கட்டணம் செலுத்த தயாராக இருக்கிறார்களோ அவர்களுக்கு தான் வழங்க வேண்டும்.
அதற்கு மாறாக இருப்பது டெண்டர் ஒளிவுமறைவு சட்டத்தை மீறுவதாகத் தான் அர்த்தம். சட்டப்படி விளம்பரம் செய்து அரசுக்கு அந்த பணம் சென்றால் அதனால் ஊழியர்கள் பயனடைவார்கள். அதற்கு மாறாக அதிகாரத்தில் இருக்கும் சிலரின் ஆதாயத்துக்காக இவ்வாறு செய்கிறார்கள். நீதிமன்றத்துக்கு சென்றால், அவர்களின் முகத்திரை கிழியும்" என்றார்.
இது குறித்து தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் விளக்கம் கேட்டோம். "அரசு பேருந்துக்கு வருவாய் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதை செய்திருக்கிறோம். அனைவருக்கும் சாலையில் வருவது தமிழ்நாடு அரசு பேருந்து என்று அனைவருக்கும் தெரியும். பேருந்தின் முன்புறம் இருக்கும் கண்ணாடியில் அனைத்து தகவலும் இருக்கும்.
எனவே அதை பார்த்தாலே வருவது என்ன பேருந்து என்று மக்களுக்கு தெரிந்துவிடும். இது ஒரு புத்திசாலித்தனமான நடவடிக்கை. இதனால் ஏழை, எளிய மக்கள் யாரும் பாதிக்கப்படுவது இல்லை. அ.தி.மு.க-வினருக்கு இது ஒரு எரிச்சல். தாய்மார்களுக்கு இலவச பயணம் வழங்கியதால் பலரும் அதை வாழ்த்துகிறார்கள்.
அந்த திட்டத்தை தொடர்ந்து செய்வதற்கு வருமானம் வேண்டும். எனவே அதற்கு இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இதன் மூலமாக அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. எதையோ பேசவேண்டும் என்பதற்காக பேசுகிறார்கள். நாங்கள் எவ்வளவு தொகைக்கு விளம்பரம் கொடுத்திருக்கிறோம் என்ற விவரம் அங்கு இருக்கிறது.
அதைவிட கூடுதல் தொகைக்கு விளம்பரம் கொடுப்பவர்கள் இருந்தால், ஜெயக்குமார், விஜயபாஸ்கர் கொண்டு வரலாம். அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்போம். நமக்கு வருமானம் தேவை. மக்களுக்கானதாக இருந்தால் செய்வதற்கு திமுக அரசு தயாராக இருக்கிறது. இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை" என்றார்.
from India News https://ift.tt/hZ6YTm7
0 Comments