``கோபமாக இருப்பவர்களைச் சமாதானப்படுத்துங்கள்" - தேர்தல் தொடர்பான கூட்டத்தில் மோடி

மணிப்பூரில் வன்முறை வெடிக்கத் தொடங்கியபோது கர்நாடக தேர்தலில் தீவிரமாகக் கவனம் செலுத்திவந்தது பா.ஜ.க. தற்போது மணிப்பூர் வன்முறை மூன்று மாதங்களாகத் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவராத பா.ஜ.க அடுத்தகட்டமாக 2024 தேர்தலுக்கான வேலைப்பாடுகளில் தீவிரமாக இறங்கிவிட்டது. மணிப்பூர் விவகாரத்தில் நாடாளுமன்றத்துக்கு நேரில் வந்து பதில் கூறாத பிரதமர் மோடி, இன்னும் ஒருமுறை கூட மணிப்பூருக்குச் செல்லவில்லை.

மோடி, அமித் ஷா

ஆனால், வெளியில் நடைபெறும் கட்சிக் கூட்டங்கள் உட்பட பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். இந்த நிலையில் தான், பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் உத்தரப் பிரதேச எம்.பி.க்களுடன் 2024 தேர்தல் வேலைகள் தொடர்பாக நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மேற்கு உத்தரப் பிரதேசம், பிரஜ், கான்பூர் - பண்டேல்கண்ட் பகுதியைச் சேர்ந்த எம்.பி-க்கள் கலந்துகொண்டனர்.

அப்போது கூட்டத்தில் மோடி, ``2024 தேர்தலுக்கு முன்பாக ராமர் கோயிலுக்கு அப்பால் மற்ற பிரச்னைகளிலும் கவனம் செலுத்துங்கள். அந்தந்த தொகுதிகளில் உள்ள பிரச்னைகள் குறித்து மக்களிடம் நேரில் செல்லுங்கள். கோபமாக இருப்பவர்களைச் சமாதானப்படுத்துங்கள், தேர்தல் சமயத்தில் மக்களிடம் அதிக நேரம் செலவிடுங்கள்" என்று தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி-க்களுக்கு அறிவுரை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

பிரதமர் மோடி - நாடாளுமன்றம்

மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 430 எம்.பி-க்களை பா.ஜ.க 11 குழுக்களாகப் பிரித்திருக்கின்றது. அவை, ஆகஸ்ட் 10-ம் தேதி வரை மோடியை நேரில் சந்திக்கவிருக்கின்றன. இவ்வாறிருக்க அடுத்தகட்டமாகத் தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள் ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 96 எம்.பி-க்கள் பங்கேற்கும் கூட்டம் புதன்கிழமை நடைபெறவிருக்கிறது. இதில் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகிய மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட கட்சிகளின் மூத்த தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவிருக்கின்றனர்.



from India News https://ift.tt/CgBamVi

Post a Comment

0 Comments