`Innova கார் வேண்டும்..!’ - நிறுத்தி வைத்த மேயர் பிரியா... கொந்தளித்த திமுக நிலைக்குழு தலைவர்கள்

மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநகராட்சியின் நிலைக்குழு உறுப்பினர்களுக்கு சொந்தமாக அரசு கார் வழங்கவேண்டும் என்ற நிலைக்குழு பரிந்துரை தீர்மானம் மட்டும் நிறைவேற்றப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிவித்தார் மேயர் பிரியா. இதனால் தி.மு.க நிலைக்குழு தலைவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம்

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நேற்று (29-07-2023) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணை மேயர் மகேஸ் குமார், மாநகராட்சி ஆணையர் இராதாகிருஷ்ணன், நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள் மற்றும் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தின் முதல் நிகழ்வாக, மேயர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாதாந்திர மதிப்பூதியம் வழங்கும் தமிழக முதலமைச்சரின் உத்தரவுக்கு நன்றி தெரிவிப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட, அனைத்து கட்சிகளைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்களும் அதை வரவேற்று பேசினர். அதைத்தொடர்ந்து நடந்த கேள்வி நேரத்தின்போது பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகள், மண்டலங்களில் உள்ள பிரச்னைகள் மற்றும் தங்களுக்கு இருக்கும் கோரிக்கைகள் குறித்துப் பேசினர்.

இறுதியாக, மேயர் பிரியா பொருள் எண் வாரியாக தீர்மானங்களை முன்மொழிந்து நிறைவேற்றினார். எல்லா தீர்மானங்களையும் நிறைவேற்றியவர், `மாநகராட்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக கணக்கு, பொது சுகாதாரம், கல்வி, வரிவிதிப்பு மற்றும் நிதி, நகரமைப்பு மற்றும் பணிகள் ஆகிய 6 நிலைக்குழுவின் தலைவர்களுக்கு 6 இன்னோவா கிறிஸ்டா கார் வழங்குவதற்கான பரிந்துரை'யை மட்டும் நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். அடுத்த கணமே ஆறு நிலைக்குழு தலைவர்களும் கொந்தளித்தனர்.

மேயர் பிரியா

குறிப்பாக நிலைக்குழு தலைவர்கள் சார்பாகப் பேசிய கணக்கு மற்றும் தணிக்கை நிலைக்குழுத் தலைவர் தனசேகரன், ``சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள், 15 மண்டலங்கள் இருக்கின்றன. மாநகராட்சி சம்மந்தமானப் பணிகள், மக்கள் நலப் பணிகளை செய்வதற்கு வசதியாக நிலைக்குழுத் தலைவர்கள் என்ற முறையில் எங்களுக்கும் சொந்தமாக கார் வழங்கவேண்டும் என நியாயமான கோரிக்கை விடுத்தோம். அதை முதலமைச்சர், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் மேயர் உங்களுக்கும் முறைப்படி தெரிவித்திருக்கிறோம். ஆனால் இந்த தீர்மானத்தை மட்டும் மேயர் பிரியா நிறுத்தி வைப்பது தவறு.

கணக்கு மற்றும் தணிக்கை நிலைக்குழுத் தலைவர் தனசேகரன்

நிலைக்குழு கமிட்டியில் முறையாக நிறைவேற்றப்பட்டு மாமன்றக் கூட்டத்தின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் தீர்மானம் இது. முன்கூட்டியே எங்களிடம் தெரிவிக்காமல், ஏற்கெனவே நீங்கள் ஒப்புக்கொண்ட இந்த தீர்மானத்தை இப்போது திடீரென நிறுத்தி வைத்தால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும். எதிர்காலத்தில் மற்றவர்களும் தங்கள் போக்குக்கு ஒவ்வொரு தீர்மானத்தை நிறுத்தி வைக்கவேண்டும் என கொடிபிடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். எனவே மற்ற தீர்மானத்தைப் போல இந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற வேண்டும்!" என மீண்டும் கோரிக்கை வைத்தார்.

அதேநேரம் மாமன்றத்தில் அமர்ந்திருந்த 15 மண்டலக்குழு தலைவர்களும் எழுந்து, ``நிலைக்குழு தலைவர்களுக்கு கார் வழங்கினால் எங்களுக்கும் கார் வழங்கவேண்டும்! நாங்களும் மக்கள் பணிதான் செய்கிறோம். நாங்களும் காரில் செல்லவேண்டும்!" குண்டைதூக்கிப் போட்டனர். இதை சற்றும் எதிர்பாராத நிலைக்குழு தலைவர்கள் விஸ்வநாதன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் எழுந்து, ``உங்களுக்கு கார் வழங்கக்கூடாது என யாரும் தடுக்கவில்லை; உங்களுக்கும் கார் வேண்டுமானால் அடுத்த மாமன்ற கூட்டத்தில் முறைப்படி கோரிக்கை வையுங்கள். இப்போது எங்களுக்கு இடைஞ்சல் கொடுக்காதீர்கள்; இது ஏற்கெனவே எங்களால் கொடுக்கப்பட்டு, தீர்மான அச்சிலும் பதிப்பிக்கப்பட்ட (பொருள் எண்: 15) பரிந்துரை! இதை யாரும் தடுக்ககூடாது!" என முறையிட்டனர்.

சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம்

ஆனால் மேயர் பிரியாவோ, ``நிலைக்குழு உறுப்பினர்களுக்கு கார் வழங்குவது நாங்கள் எடுக்கவேண்டிய முடிவல்ல! தமிழ்நாடு அரசு எடுக்கவேண்டிய முடிவு. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரிடம் கலந்தாலோசித்த பிறகு இறுதி முடிவை எடுக்கிறோம். அதுவரை இந்த தீர்மானம் மட்டும் நிறுத்தி வைக்கப்படுகிறது. அடுத்த மாமன்ற கூட்டத்தில் இதுபற்றி பேசலாம்!" எனக்கூறி இறுதி முடிவாக தீர்மானத்தை நிறுத்திவைத்தார். இதனால் நிலைக்குழு தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இன்னோவா கிறிஸ்டா (Innova Crysta)

என்ன கார்... எவ்வளவு பட்ஜெட்..:

சென்னை மாநகராட்சியில் உள்ள 6 நிலைக்குழு தலைவர்களுக்கு 6 எண்ணிக்கையிலான இன்னோவா கிறிஸ்டா (Innova Crysta) நான்கு சக்கர வாகனம் சுமார் ரூ. 1.26 கோடி செலவில் வாங்கவேண்டும். ஒரு வாகனத்திற்கு ஒரு நாளைக்கு இரண்டு ஓட்டுநர்கள் ஊதியம் ரூ.900 என கணக்கிட்டு ஆண்டுக்கு ரூ 39.4 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என கோரப்பட்டிருக்கிறது. மேலும், ஒரு வாகனத்திற்கு ஒரு மாதத்திற்கு 200 லிட்டர் டீசல் வீதம் ஆண்டுக்கு ரூ.13.5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். அதேபோல பராமரிப்பு தொகையாக ஒரு வாகனத்துக்கு ஒரு நாளைக்கு ரூ.200 செலவு என கணக்கிட்டு ஓராண்டு பராமரிப்பு செலவாக ரூ.4.3 லட்சம் ரூபாய் வழங்கவேண்டும் என நிலைக்குழு தலைவர்களால் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. மொத்தமாக 6 கார்களுக்கும் சேர்த்து ரூ. 1.83 கோடி ரூபாய் செலவீனமாக கணக்கு விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.!



from India News https://ift.tt/8GriLxe

Post a Comment

0 Comments