டெல்லியில் பிரகதி மைதானத்தில் புதிதாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ள சர்வதேச கண்காட்சி, மாநாட்டு மைய (IECC) வளாகத்தை பிரதமர் மோடி நேற்று முன்தினம் திறந்து வைத்து பேசுகையில் "எனது தலைமையிலான முதல் ஆட்சியில் உலக அளவில் இந்தியப் பொருளாதாரம் 10-வது இடத்தில் இருந்தது. 2-வது ஆட்சியில் 5-ம் இடத்துக்கு முன்னேறியது. அடுத்து வெற்றிபெறப் போகும் 3-வது ஆட்சியில் உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும்" என்று பேசியிருக்கிறார்.
டெல்லியில் நடந்த சர்வதேச கண்காட்சி, மாநாட்டு மைய வளாகத் திறப்பு விழாவில் பேசியபோது பிரதமர் மோடி மேலும் கூறியதாவது, "மத்தியில் பாஜக தலைமையிலான அரசு அமைந்த பிறகு நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் பெருமளவு பெருகியிருக்கின்றன. தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இப்போது உலகின் உயரமான ரயில் பாலம் இந்தியாவில்தான் உள்ளது. அதேபோல் உலகிலேயே உயரமான மலைப்பகுதியில் நீளமான சுரங்கப்பாதையும் இந்தியாவில் உள்ளது. இன்னும் பல சிறப்புகளும், பெருமைகளும் உருவாகும் வகையில் அத்தனை திறன்களையும் இந்தியா கொண்டுள்ளது.
அடுத்த வருடம் நடக்க உள்ள மக்களவை பொதுத் தேர்தலில் 3-வது முறையாக பாஜக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைக்கும். எனது தலைமையிலான 3-வது ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் இன்னும் வேகமாக இருக்கும். முதல் ஆட்சியில் உலக அளவில் இந்தியப் பொருளாதாரம் 10-வது இடத்தில் இருந்தது. 2-வது ஆட்சியில் 5-ம் இடத்துக்கு முன்னேறியது. அடுத்து 3-வது ஆட்சியில் உலகின்3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும்" இவ்வாறு அவர் பேசினார்.
இவர் கூறிய இதே கருத்தை உறுதி செய்யும் வகையில் நாட்டின் பெரிய வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கி இந்தியப் பொருளாதாரம் குறித்து ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் 2027-28 ஆம் நிதி ஆண்டில் இந்தியா உலக அளவில் 3-வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் என்று கூறியுள்ளது.
எஸ்.பி.ஐ வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, "இந்தியா எதிர்பார்க்கப்பட்டதை விட வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் முன்கூட்டியே 5 டிரில்லியன் டாலர் என்ற இலக்கை எட்டுவதற்கான சாத்தியங்களுடன் இருக்கிறது. அதன்மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 3, 4 இடங்களில் இருக்கும் ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி 3-ம் இடத்தைப் பிடிப்பதற்கு தயாராக இருக்கிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த உலக ஜிடிபியில் இந்தியாவின் பங்கு 4 சதவிகிதமாக உயரும்" என்று கூறியிருக்கிறது.
மேலும் 2023-24 ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 8.1 சதவிகிதமாக இருக்கும் என்றும், மொத்தமாக இந்த நிதி ஆண்டில் 6.5 சதவிகித ஜிடிபி வளர்ச்சி இருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறது.
இந்தியா உலக அளவில் 3-வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்க நாமினல் வளர்ச்சி விகிதம் 11 - 11.5 சதவிகிதம் இருக்க வேண்டும் என்று எஸ்.பி.ஐ ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி பார்க்கும்போது பிற நாடுகள் எல்லாம் வளர்ச்சி அடைவதற்கு கஷ்டப்படும் நிலையில் இருக்கும்போது இந்தியா அவற்றை விட சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்கின்றன.
தற்போதுள்ள வளர்ச்சி விகிதத்தில் இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து பயணித்தால் நிச்சயம் மற்ற நாடுகளை விட நல்ல வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கலாம். 6.5% - 7% ஜிடிபி வளர்ச்சி இருந்தால் நிச்சயம் எதிர்பார்த்தபடி 2027-28 ஆம் நிதி ஆண்டில் இந்தியா 3 -வது பொருளாதார நாடாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை என்று கூறியிருக்கிறது.
மோடி சொல்வதும், எஸ்.பி.ஐ சொல்வதும் நடக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
from India News https://ift.tt/hzLRXP2
0 Comments