திமுக டெல்டா மண்டலத்தில் கட்சி ரீதியாக உள்ள 15 மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டம் திருச்சி மாவட்டம், ராம்ஜி நகரில் நடைபெற்றது. தி.மு.க., தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் டெல்டா மண்டத்தில் உள்ள 15 மாவட்டங்களைச் சேர்ந்த 12,645 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு தி.மு.க-வின் முன்னணி நிர்வாகிகளும், அமைச்சர்களும் தேர்தலை எப்படிக் கையாள்வது, வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் பணிகள் என்பது குறித்து விளக்கிப் பேசினர். நிகழ்ச்சியில் இறுதியாக தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு பல்வேறு கருத்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கி சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களிடம் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ``கழகம் தொடங்கி 75-வது ஆண்டில் நாம் அடியெடுத்து வைக்க இருக்கிறோம். கலைஞரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். புதியதாக ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்கும் பணியும் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. இந்த நேரத்தில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். இப்படியான நேரத்தில் நீங்கள் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பொறுப்பை பெற்றிருக்கிறீர்கள். உங்கள் வாக்குச்சாவடியில் உள்ள வாக்காளர்கள் அனைவருக்கும் நீங்கள் தான் பொறுப்பாளர். நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கும் நீங்கள் தான் பொறுப்பாளர். ‘நாடும் நமதே, நாற்பதும் நமதே’ என்ற முழக்கத்தை உங்கள் மீது நம்பிக்கை வைத்து தான் நான் முழங்கியிருக்கிறேன்.
உங்கள் வாக்குச்சாவடிகளுக்கு உரிய வாக்காளர்களின் விபரங்கள் சரியாக இருக்கின்றனவா? ஏதேனும் போலி வாக்காளர்கள் இடம் பெற்றிருக்கிறார்களா? இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறதா? ஆகியவற்றை முழுமையாக சரிபார்க்க வேண்டும். வாக்காளர்களை நம்மை நோக்கி இழுப்பது அடுத்த பணி. உங்களது வாக்குச்சாவடிக்கு நியமிக்கப்பட்டு இருக்கக்கூடிய வாக்குச்சாவடி உறுப்பினர்களை ஒருங்கிணைத்துக் கொண்டு, தினமும் வாக்காளர்களைச் சந்தித்து பரப்புரை மேற்கொள்ளுங்கள். நம்முடைய சாதனைகளை மக்களிடம் தொடர்ந்து எடுத்துச் சொல்ல வேண்டும். வாக்குப்பதிவு நாள்களில் வாக்காளர்களை வாக்குப்பதிவு மையங்களுக்கு வரவழைப்பது மூன்றாவது முக்கியப் பணி. உங்கள் வாக்குச்சாவடியில் 250 குடும்பங்கள் இருக்கிறது என்று சொன்னால், அந்தக் குடும்பங்களில் ஒருவராக நீங்கள் மாற வேண்டும்.
உங்கள் வாக்குச்சாவடியில் உள்ள ஒவ்வொரு வாக்காளர்களைப் பற்றி முதலில் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். வாக்காளரின் பெயர், அவரின் வயது, அவருடைய குடும்பத்தினர் யார்? அவர் என்ன படித்திருக்கிறார்? என்ன தொழில் செய்கிறார்? எந்த கட்சியைச் சார்ந்தவர்? என்பது உள்ளிட்ட முழு விபரமும் உங்களிடம் இருக்க வேண்டும். அடுத்ததாக அரசினுடைய திட்டங்களை முழுமையாக நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். யாருக்கு என்ன தேவையோ அதைக் கண்டறிந்து பெற்றுக் கொடுங்கள். முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல் என ஒவ்வொருவரின் தேவையையும் கண்டறிந்து அந்த பணிகளை நிறைவேற்றித் தாருங்கள்” என்றார்.
தொடர்ந்து பேசியவர், ``வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் எடுத்துவரக் கூடிய கோரிக்கைகளுக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய, நகரச் செயலாளர்கள் மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கொண்டுவரக்கூடிய தகுதி வாய்ந்த கோரிக்கைகள் கட்டாயம் நிறைவேற்றித் தரப்படும் என நான் உறுதியளிக்கிறேன். தினமும் ஒரு மணி நேரத்தை வாக்குச்சாவடி பணிகளுக்கு என்று ஒதுக்குங்கள். ஒவ்வொரு நாளும் 10 வீடுகளுக்குச் சென்று பேசுங்கள். ஒரு மாதத்தில் உங்கள் வாக்குச்சாவடியில் உள்ள அத்துனை வீடுகளுக்கும் நீங்கள் சென்று வந்துவிடலாம். சில வீடுகளில் மகிழ்ச்சியோடும், சில வீடுகளில் பட்டும் படாமலும் வரவேற்பார்கள். சில வீடுகளில் வரவேற்பே இல்லாமல் கூட இருக்கலாம். அதற்காக நாம் விட்டுவிடக் கூடாது. மீண்டும் மீண்டும் புன்னகையோடு அவர்களை அணுகுங்கள்.
என்னைப் பொறுத்தவரையில் நம்மை நிராகரிக்கக் கூடியவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன். ஏனென்றால் அனைவருக்கும் பொதுவான ஆட்சியை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். நமக்குள் குறைகள், பிரச்னைகள் இருக்கலாம். ஆனால், ஆட்சியில் எந்தக் குறையையும் எவராலும் கண்டுபிடிக்க முடியாது. எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத அளவிற்கு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
மகளிருக்கு கட்டணமில்லாத பேருந்து வசதி, ஒரு கோடிக்கு மேற்பட்ட பெண்கள் கலைஞர் பெயரிலான உரிமைத் தொகையினை பெறப் போகிறார்கள். 31 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பெற்றுவரக்கூடிய முதியோர் உதவித்தொகையை 1,000 ரூபாயிலிருந்து 1,200 ஆக நாம் உயர்த்தியிருக்கிறோம். 18 லட்சம் பள்ளி மாணவ மாணவியர் காலை உணவுத் திட்டத்தால் பயன்பெறப் போகிறார்கள். 13 லட்சம் பெண்களின் நகைக்கடன்களை ரத்து செய்துள்ளோம். டெல்டா மாவட்டங்களைப் பொறுத்தவரை மக்களும் மண்ணும் செழிக்கின்ற மாதிரியான ஏராளமான திட்டங்களை உழவர்களுக்கு நாம் செயல்படுத்தி வருகிறோம். இப்படி கோடிக்கணக்கானோர் பயன்பெறக் கூடிய திட்டங்களை நிறைவேற்றி, இன்றைக்கு வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கக் கூடிய அரசு தான் நம்முடைய திராவிட மாடல் அரசு. இந்தத் திட்டங்களையெல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்லக்கூடிய பரப்புரையாளர்களாக நீங்கள் செயல்பட வேண்டும்..
நமக்கு எதிராக அவதூறுகளையும், பொய்ச் செய்திகளையெல்லாம் பரப்பிட ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டு இருக்கிறது. பொய்களுக்கு ஆயுள் மிகக்குறைவு. அவர்கள் பொய்களையே சொல்லிக் கொண்டிருக்கட்டும். நம்முடைய அரசு கொண்டு வந்திருக்கக்கூடிய திட்டங்கள் குறித்து வாக்காளர்களிடம் விளக்கிச் சொல்லுங்கள். இதன்மூலமாக எதிரிகள் பரப்பக்கூடிய அவதூறுகள் எல்லாம் சுக்குநூறாக நொறுங்கிப் போகும்.
இன்றைக்கு பரப்புரையின் பாணியே மாறிவிட்டது. இன்றைக்கு சமூக ஊடகங்கள் தான் சிறப்பான பரப்புரைக் களங்களாக மாறியிருக்கிறது. நாம் அனுப்பக்கூடிய செய்தி ஒரே நிமிடத்தில் உலகம் முழுவதும் பரவக்கூடிய வசதி வந்துவிட்டது. இதனை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே, நீங்கள் ஒவ்வொருவரும் சமூக ஊடகங்களில் கணக்கு தொடங்குவதை கட்டாயம் செய்ய வேண்டும். அந்த கணக்குகளில் இருந்து அவதூறுகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள். நம் கொள்கைகளை பேசுங்கள். நலத்திட்டங்களை பதிவிடுங்கள். தேவையில்லாத வம்பு வாக்குவாதங்களில் எல்லாம் ஈடுபடாதீர்கள்.
அதேபோல தேவையற்ற பிரச்னைகளைக் கிளப்பி, கட்சிக்கு கெட்டப்பெயரை வாங்கிக் கொடுக்கவும் கூடாது. சமூக ஊடகங்களை நல்ல நோக்கத்தோடு, நல்ல வழியில் பயன்படுத்த வேண்டும். நம்முடைய தொண்டர் பலத்திற்கும், கட்டமைப்பிற்கும் நிகராக தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, இந்த உலகத்திலும் கூட ஒரு கட்சியும் இல்லை. ஆக, அந்த பலத்தை நாம் சமூக ஊடகங்களிலும், களத்திலும் முழுமையாகக் காட்ட வேண்டும். என் கடமையின் தூதுவர்களாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பணியாற்றக்கூடியவர்கள் நீங்கள். கழகத்தின் வெற்றிக்காக களமாடுங்கள். நாற்பதும் நமதே, நாடும் நமதே” என்றார்.
from India News https://ift.tt/VpQSUOX
0 Comments