திமுக-வில் புதிதாக ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்படி தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை 5 மண்டலங்களாகப் பிரித்து, ஒவ்வொரு மண்டலம் வாரியாக வாக்குசாவடி பொறுப்பாளர்கள் பாசறைக் கூட்டத்தை திமுக நடத்த திட்டமிட்டுள்ளது. அந்தவகையில், முதல் கூட்டமான ‘டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டம்’ திருச்சி மாவட்டம், ராம்ஜி நகரில் நேற்று (ஜூலை 26) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்காக ராம்ஜி நகரில் திறந்தவெளிப் பகுதியொன்றை சீர்படுத்தி, 15 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்டமான பந்தலையும், கூட்ட மேடையையும் அமைத்திருந்தனர். மேலும், திருச்சி மாநகரிலிருந்து கூட்டம் நடைபெற்ற ராம்ஜிநகர் வரை சுமார் 10 கி.மீ தூரம் முழுக்க சாலையின் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான தி.மு.க., கொடி வரிசைகட்டி நடப்பட்டிருந்தது. மேலும், சாலைகளில் ஆங்காங்கே மு.க.ஸ்டாலினை வரவேற்று பிரமாண்டமான பிளக்ஸ் போர்டுகளும், அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு கட் அவுட்டுகளையும் வைத்திருந்தனர்.
இந்த வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டத்திற்காக, டெல்டா மண்டலத்தில் 15 மாவட்டங்களில் உள்ள 12,645 வாக்குச் சாவடிகளில் இருந்தும் தலா ஒவ்வொரு பொறுப்பாளர்கள் என 12,645 பேர் வந்திருந்தனர். மேலும், டெல்டா மண்டல அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள், நகர, ஒன்றிய, பேரூர் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் கூடினர். இதெல்லாம் போதாதென மு.க.ஸ்டாலின் தங்கியிருந்த டி.வி.எஸ் டோல்கேட் சர்க்கியூட் ஹவுஸில் இருந்து நிகழ்ச்சி நடைபெற்ற ராம்ஜி நகர் திடல் வரை, 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் வழி நெடுகிலும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களை சாலையில் ஆங்காங்கே நிறுத்தி ஒரு பெரும் கூட்டத்தை திரட்டியிருந்தார் அமைச்சர் கே.என்.நேரு.
மேலும், இந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த சுமார் 35 ஆயிரம் பேருக்கும் சுடச்சுட மட்டன் பிரியாணி, சிக்கன் 65, அவித்த முட்டை, தயிர் சாதம் என அசத்தலான விருந்துக்கும் கே.என்.நேரு ஏற்பாடு செய்திருந்தார். கட்சியினருக்கு கொடுக்கும் விருந்து சிறப்பானதாக இருக்க வேண்டுமென, திருச்சியில் பிரியாணிக்கு பெயர் பெற்ற கே.எம்.எஸ் ஹக்கீம் கல்யாண பிரியாணி நிறுவனத்தினரை இறக்கியிருந்தார் கே.என்.நேரு. திருச்சி சர்க்கியூட் ஹவுஸில் தங்கியிருந்த மு.க.ஸ்டாலின், கூட்டத்திற்கு வந்த வழி நெடுகிலும் 10 கி.மீ தூரத்திற்கு, சுமார் 15 இடங்களில் மேடை அமைத்து ஆடல், பாடல் நிகழ்ச்சி, கரகாட்டம், தாரை தப்பட்டை, டிரம்ஸ் என தடல்புடலாக ஒரு திருவிழாவைப் போன்ற ஏற்பாடுகளை கே.என்.நேரு செய்திருந்தார்.
வழக்கமாகவே போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாகக் காணப்படும் திருச்சி – திண்டுக்கல் சாலை, இந்த கூட்டத்தால் திணறிப் போனது. வாகனங்கள் எறும்பைப் போல ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டதால், திருச்சி – திண்டுக்கல் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தி.மு.க., அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லும் வகையில், கூட்டத்திற்கு வந்திருந்த வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் சுமார் 12,645 பேருக்கு ‘திராவிட மாடல் ஆட்சியின் மக்கள் நலத் திட்டங்கள்’ என்ற புத்தகம் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், “1986-ம் ஆண்டு நானும் உங்களைப் போல் மேடைக்குக் கீழே இருந்தவன் தான். தலைவர் கலைஞரும், தளபதியும் சொன்ன வேலையைக் கேட்டு தீவிரமாகப் பணியாற்றியதால் தான், இன்றைக்கு கழகத்தில் முதன்மைச் செயலாளராக இருக்கிறேன். இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் நடக்கின்ற நம்முடைய கழக ஆட்சியைப் பார்த்து சிலர் பொறாமைப்பட்டுக் கிடக்கிறார்கள். இந்தியாவின் பிரதமர் யார் என்பதை நிர்ணயிக்கக்கூடிய இடத்தில் இன்றைக்கு நம்முடைய தலைவர் இருக்கிறார். தலைவர் இருக்கின்ற அவர் அவர் தான் முதலமைச்சர். இப்போது கிடைத்திருக்கின்ற இந்த வாய்ப்பை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் அடுத்த 10 ஆண்டுகள் நாம் வெளியே தான் நிற்க வேண்டும்” என்றார்.
அடுத்ததாகப் பேசிய தி.மு.க., பொதுச்செயலாளர் துரைமுருகன், ``‘கலைஞருக்குப் பிறகு கட்சி என்ன ஆகுமோ? கலைஞரைப் போல் தளபதி இருக்க மாட்டார் என சிலர் தப்புக் கணக்கு போட்டார்கள். ஆனால், தளபதி பொறுப்பேற்ற பிறகு புதிதாக ஒரு கோடி உறுப்பினர்களை சேர்த்ததோடு, இரண்டு தேர்தல்களில் வெற்றி கண்டு, 2 ஆண்டு காலம் செம்மையாக ஆட்சி நடத்தி வருகிறார். நான் அண்ணாவுடனும், 50 ஆண்டுகாலம் கலைஞருடனும் பயணம் செய்திருக்கிறேன். ஆனால், செல்லும் இடங்களிலெல்லாம் மக்கள் கொடுக்கும் பூச்செண்டுகள், சால்வைகள், பழங்கள் வாங்கிக் கொள்வதை விட மக்கள் கொடுக்கும் மனுவைத் தேடி வாங்கும் முதலமைச்சரை இப்போது தான் பார்க்கிறேன். இவர் தான் உண்மையான மனுநீதி சோழர்” என்றார்.
இறுதியாகப் பேசிய தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின், “தி.மு.க-விற்கும் திருச்சிக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு. 1957-ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் தான், நாம் தேர்தலில் போட்டியிடலாம் என முடிவெடுத்தோம். 1971-ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் தான் தலைவர் கலைஞர் அவர்கள் நம்முடைய ஐம்பெரும் கொள்கை முழக்கங்களை நமக்கு உருவாக்கித் தந்தார்கள்.
முக்கியமான மாநாடுகளை திருச்சியில் தான் தலைவர் கலைஞர் அவர்கள் தேர்ந்தெடுத்து நடத்துவார்கள். அப்படி நடத்தக்கூடிய மாநாடுகளெல்லாம் திருப்புமுனை மாநாடுகளாக அமையும். ஏன் கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு திருச்சியில் மாநாடு போல் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டம் தான், தமிழ்நாட்டின் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளம் அமைத்த சிறப்பான பொதுக்கூட்டமாக அமைத்தது. தமிழ்நாட்டை மட்டுமல்ல இந்தியாவினுடைய கவனத்தையே ஈர்த்த அந்த மாநாட்டை முன்னின்று நடத்திக் காட்டியவர் முதன்மைச் செயலாளர் நேரு அவர்கள்.
அவரைப் பாராட்டுவது என்பது என்னை நானே பாராட்டிக் கொள்வது என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு, நேரு என்றால் மாநாடு. மாநாடு என்றால் நேரு என்று பெயர் பெற்றவர் அவர். நேருவுக்கு நிகர் நேரு தான். மிகக் குறுகிய காலத்தில் 10 நாட்களுக்குள்ளாக இந்த வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தை நாங்கள் சொன்னதை ஏற்றுக்கொண்டு மிகச் சிறப்பாகவும், பிரமாண்டமாகவும் அவர் நடத்திக் காட்டியிருக்கிறார்” eன கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்த கே.என்.நேருவை புகழ்ந்து தள்ளினார்.
from India News https://ift.tt/5UOCAF3
0 Comments