அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்த காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் இணைந்து வருகின்றன. தேர்தல் குறித்து ஆலோசிக்க கர்நாடக தலைநகர் பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் 2 நாள்கள் ஆலோசனை கூட்டம் 17,18-ல் நடைபெற்றது. இதில் கூட்டணிக்கு இந்தியா என பெயரிடப்பட்டு இருக்கிறது.
இதனால், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் டெல்லியில் 18-ம் தேதி மாலையில் நடைபெற்றது. பிரதமர் மோடி பங்கேற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டில் இருந்து அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, த.மா.கா தலைவர் வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, தமிழ்நாட்டில் இருந்து சென்ற ஏ.சி.சண்முகம், கிருஷ்ணனசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களை பாஜகவின் மூன்றாம், நான்காம் கட்டத் தலைவர்கள்தான் வரவேற்றனர். ஆனால், எடப்பாடியை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் வாசலில் வந்து வரவேற்றனர்.
இதைத்தொடர்ந்து, எடப்பாடியை தென்னிந்திய பிரதிநிதியாக தென்மாநில கட்சிகள் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க-வுக்கு அடுத்த இடம் அ.தி.மு.க-வுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. அதனை பிரதிபலிக்கும் விதமாகதான், பிரதமர் மோடிக்கு அடுத்த இருக்கையை எடப்பாடிக்கு ஒதுக்கி இருக்கிறது டெல்லி.
இதுதொடர்பாக டெல்லியில் முகாமிட்டு இருக்கும் தமிழக பா.ஜ.க சீனியர்களிடம் பேசினோம். ``தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பா.ஜ.க-வுக்கு அடுத்த இடத்திலிருக்கும் பெரிய கட்சி அ.தி.மு.க- தான். சிவசேனா கட்சி பெரிதாக இருந்தாலும் ஒற்றைத் தலைமையின்கீழ் பெரும்பான்மையான நிர்வாகிகள், தொண்டர்களை வைத்திருப்பது அ.தி.மு.க-தான். எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க-வை பா.ஜ.க-விடமிருந்து கழற்றிவிட்டு, அ.ம.மு.க., பா.ம.க., த.மா.கா., தே.மு.தி.க., பன்னீர், சசிகலா ஆகியோரை பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் நீண்டகாலமாகவே ஈடுபட்டார் மயிலாப்பூர் பிரமுகர் ஒருவர். கடந்த ஓராண்டாக, ஒற்றைத் தலைமை விவகாரத்தில் டெல்லி பா.ஜ.க மேலிடம் ஒரு முடிவை எடுக்க முடியாதபடி அணை போட்டுவந்ததும் அவர்தான்.
இதற்கு மாநில தலைவரான அண்ணாமலையும் உதவினார். அதன்படிதான், அதிமுக மாஜிக்கள் மீதும், ஆட்சி மீதும், ஜெயலலிதா மீதும் தொடர்ந்து சர்ச்சை கருத்தை கூறிவந்தார். இந்நிலையில்தான், அதிமுகவின் முக்கியத்துவம் குறித்தும், பன்னீர், டிடிவி தினகரன் உள்ளிட்ட இதர கட்சிகளின் இயலாமை குறித்து டெல்லி பிரமுகரிடம், எடப்பாடி தரப்பின் முக்கிய பிரமுகர் தெளிவுப்படுத்தினார். தி.மு.க-வுக்கு நிகராக பூத் கமிட்டிகள் வைத்திருப்பதும், தேர்தல் பணியாளர்களைக் குவித்திருப்பதும் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க மட்டும்தான். எடப்பாடி இல்லாமல் தமிழ்நாட்டிலிருந்து ஒரு சீட்கூட உங்களுக்கு வராது. தவிர, தேசிய அளவில் ‘மெகா கூட்டணி’யாக உங்களை பிம்பப்படுத்திக் கொள்ளவும் முடியாது’ என விளக்கிச் சொல்லி, உறவை ஒட்டவைத்தார். டெல்லி பாஜகவுக்கும் அதிமுக என்ற கட்சித் தேவை. எனவேதான், மயிலாப்பூர் பிரமுகர் மற்றும் அண்ணாமலையின் பேச்சை புறம்தள்ளிவிட்டு, எடப்பாடியிடன் கைக்கோர்த்தது டெல்லி. குறிப்பாக, எடப்பாடிக்கு எதிராக செயல்படும், பன்னீர், தினகரன் என யாரையுமே டெல்லி அழைக்கவில்லை. டெல்லிக்கு வந்த எடப்பாடிக்கும் சகல மரியாதையையும் வழங்கப்பட்டு இருக்கிறது" என்றனர் விரிவாக...
from India News https://ift.tt/2QksjoW
0 Comments