கவயல சநதல பலஜ இடததல மததசம - சவலகள சமளதத சதபபர..?! | ஓர அலசல

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, காவேரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அமைச்சர் செந்தில் பாலாஜி அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட முடியாத நிலையில் இருப்பதால், அவர் வகித்த மின்சாரத்துறையை தங்கம் தென்னரசுவுக்கும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையை அமைச்சர் முத்துசாமிக்கும் வழங்கப்பட்டது.

தற்போது செந்தில் பாலாஜி வசமிருந்த கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் பொறுப்பும் முத்துசாமிக்கு மாற்றப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் வெற்றிடத்தை அமைச்சர் முத்துசாமி நிறைவேற்றுவாரா... சவால்களை சமாளிப்பாரா....என்ற எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன.

தங்கம் தென்னரசு - முத்துசாமி

தமிழ்நாடு அரசியலில் கோவை மாவட்டம் என்றால் அதிமுக-வின் கோட்டையாக கருதப்பட்டது. 2016 தேர்தலில் யார் வெற்றிபெறுவார் என கணிக்க முடியாமல் பரபரப்பாக போய்க்கொண்டிருந்தது வாக்கு எண்ணிக்கை. அப்போது திமுக-வுக்கு அதிமுக-வுக்கும் பெரிய இடைவெளியை ஏற்படுத்தி வெற்றிக்கு வித்திட்டது கொங்கு மண்டலம்தான். 2021-ம் தேர்தல் ஆட்சியையே அதிமுக இழந்திருந்தாலும் கொங்கு மண்டலத்தை அதிமுக தக்க வைத்துக் கொண்டது.

கோவையில் 10-இல் 9 அதிமுகவும் மற்றொரு தொகுதியும் அதிமுக கூட்டணிக்கே கிடைத்தது. இப்படியான நிலையில் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜியை நியமித்தார் ஸ்டாலின். மக்கள் சந்திப்பு, நிர்வாகிகளுடன் ஆலோசனை,  களப்பணி என கட்சி ரீதியாகவும் நலத்திட்ட உதவிகள், ஆய்வுக் கூட்டங்கள் என் ஆட்சி ரீதியாகவும் கடுமையாக செயல்பட்டதோடு, பல வகையிலும் கட்சி வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருந்தார். கொங்கு மண்டலத்தில் அடிக்கடி மாநாடு நடத்துவது, கட்சிக் கூட்டங்களை பெருந்திரள் மக்கள் கூட்டத்துடன் ஒருங்கிணைப்பதென அதிமுக கோட்டையில் முட்டிமோதினார் செந்தில் பாலாஜி. பலனாக கோவை மாநகராட்சி தேர்தலில் 100 இடங்களில் 96 இடங்களில் தி.மு.கவை வெற்றிபெற வைத்து அதிமுக பாஜகவை அதிரடித்திருந்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

முத்துசாமி

இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட, தற்போது கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக முத்துசாமியை நியமித்திருக்கிறது திமுக தலைமை. இவரின் செயல்பாடுகள் எப்படி இருக்கப் போகிறது. வலிமையான கட்டமைப்பை கொண்ட அதிமுகவை எப்படி சமாளிக்க போகிறார்... கோவை திமுக நிர்வாகிகளை அணிதிரட்ட அமைச்சர் முத்துசாமியால் முடியுமா... என்றெல்லாம் கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன.

”அமைச்சர் செந்தில் பாலாஜி இதர அமைச்சர்களோடு ஒப்பிடும்போது இளம் அமைச்சர். துருதுருவென உழைக்கக் கூடியவர். தற்போது பொறுப்பு அமைச்சரான முத்துசாமியின் கோட்டையான ஈரோட்டில் இடைத்தேர்தல் வந்தபோதுகூட, அங்கும் மும்முரமாக பணி செய்து, திமுக கூட்டணி வெற்றி பெற்றதில் ஒரு பங்கு செந்தில் பாலாஜிக்கும் உண்டு. செந்தில் பாலாஜியை போல் துருதுரு அரசியல் செய்ய சீனியர் அமைச்சரான முத்துசாமியால் முடியுமா என்பது கேள்விக்குறிதான். செந்தில் பாலாஜியால் தீவிர அரசியலில் இயங்க முடியாத சூழல் கோவை மாவட்டத்திலும் கொங்கு மண்டலத்திலும் திமுவுக்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

உதயநிதி, செந்தில் பாலாஜி

இதுகுறித்து அரசியல் விமர்சகர் ஜெகதீஸ்வரனிடம் பேசினோம், ``அமலாக்கத்துறை வழக்கு செல்வதை பார்க்கும் போது நாடாளுமன்ற தேர்தலின்போது செந்தில் பாலாஜி சிறையில்தான் இருப்பார். கோவையில் அவருக்கு அடுத்த யார் என்ற கேள்வி வரும்பொழுது அமைச்சர் முத்துசாமிதான் முதல்வரின் தேர்வாக இருக்கிறது.

அரசியல் விமர்சகர் ஜெகதீஸ்வரன்

முத்துசாமியிடமிருக்கும் தற்போதைய பொறுப்பு மிக சவாலானது. கூட்டத்தை கூட்டுவது, நிர்வாகிகளை ஒருங்கிணைப்பது, களப்பணியாளர்களை செயல்பட வைப்பது, வைட்டமின்களை இறக்குவது என செந்தில் பாலாஜி அளவுக்கு முத்துசாமியால் செயல்பட முடியாதோ என்ற கருத்து இருப்பது நிதர்சனம்தான்.

 அதேசமயம் இப்போதே அவரை குறைத்து மதிப்பிடுவதும் சரியாக இருக்காது. காரணம், அரசியலில் அவர் சீனியர். பல நேரங்களில் அனுபவம் வேலை செய்யும். இப்போது எப்படி செயல்படப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்கிறார் ஜெகதீஸ்வரன்.

சல்மா

நம்மிடம் பேசிய திமுக செய்தி தொடர்பாளர் சல்மா, “கோவையில் இன்று திமுக பலமாக இருக்கிறது என்றால், அது தனிப்பட்ட ஒருவரின் வெற்றியல்ல. தமிழ்நாடு மக்கள் நலன்சார்ந்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவரும் தமிழ்நாடு அரசிற்கான அங்கீகாரம். ஆட்சி செய்யும் கட்சியான திமுகவுக்கும் கிடைத்த வெற்றி. அதே சமயம் களத்தில் பணியாற்றுபவர்களுக்கு சம பங்கு இருக்கிறது. இரண்டும் இணைவதால்தான் வெற்றி எளிதாகிறது. அந்த வகையில் செந்தில் பாலாஜிக்கு பதில் தற்போது அமைச்சர் முத்துசாமிக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. யாரை எங்கு வைக்க வேண்டும் என்பதை தமிழ்நாடு முதல்வர் நன்கு அறிவார். அமைச்சர் முத்துசாமியும் சிறப்பான முறையில் செயல்படக் கூடியவர். சிறப்பான ஆட்சியை திமுக வெளிப்படுத்துகிறது. ஆகவே யார் பொறுப்பாளர் என்பதை தாண்டி, தமிழ்நாடு முழுக்க திமுகவுக்கு மக்கள் ஆதரவு பெருகும். அதேபோல் கோவையிலும் திமுகவின் வெற்றிமுகம் தொடரும்” என்கிறார் உறுதியாக...

கோவை மாவட்டம் மீண்டும் அதிமுக பக்கமே சாயுமா அல்லது புதிய ஃபார்முலாக்களை கொண்டு அதிமுக , பாஜகவை மிரட்டப் போகிறாரா முத்துசாமி என்பதெல்லாம் நாடாளுமன்ற தேர்தலில் தெரியும்.!



from India News https://ift.tt/7kZIj9H

Post a Comment

0 Comments