தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள வடக்கு தோழப்பண்பண்ணையைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு முத்துராணி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 5 வயதில் கருப்பசாமி என்ற கதிர், 2 வயதில் உதயபாலா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த வாரம் பூல்பாண்டி முத்துராணி தம்பதியின் இரண்டு மகன்களுக்கும் அதே பகுதியில் உள்ள இசக்கியம்மன் கோயிலில் வைத்து முடி எடுக்கும் நிகழ்ச்சி நடந்துள்ளது. இதற்காக கணவன் மனைவி இருவரும் தங்கள் தரப்பு உறவினர்களை அழைத்து தடபுடலாக நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.
தற்போது பந்தல் அமைப்பு முதல் உணவு சமைத்தவர்கள் வரை அனைவருக்கும் மீதிப் பணம் கொடுக்க வேண்டும் என, பூல்பாண்டி தன்னுடைய மனைவி முத்துராணியின் நகைகளை கேட்டுள்ளார். அதற்கு அவர் தர மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் நடந்து வந்துள்ளது.
இதற்கிடையில், வடக்கு தோழப்பண்பண்ணை பகுதியில் இலவச வீட்டுமனைப்பட்டா கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் குடிசை போடுவதற்காக இருவரும் சென்றுள்ளனர். அங்கு சென்றும் பூல்பாண்டி நகைகளை கேட்டுள்ளார். அதற்கு முத்துராணி "உங்க அம்மாவிடம் கேளுங்க" எனக் கூறினாராம். இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த பூல்பாண்டி, தான் வைத்திருந்த துண்டால் மனைவி முத்துராணியின் கழுத்தில் போட்டு இறுக்கி கொலைசெய்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இதற்கிடையில் அங்கு நின்றவர்கள் பூல்பாண்டியன் ஓடுவதை பார்த்து சந்தேகத்துடன் அந்த குடிசைக்குச் சென்று பார்த்துள்ளனர். அங்கு முத்துராணி இறந்துகிடந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், உடனே ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தப்பியோடிய பூல்பாண்டியனைக் கைதுசெய்த போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
from India News https://ift.tt/jPxT31a
0 Comments