கேரள மாநில லாட்டரியில் முதல் பரிசான ஒரு கோடி ரூபாய், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிர்ஷூ என்பவருக்குக் கிடைத்திருக்கிறது. திருவனந்தபுரம், தம்பானூரில் வசித்துவந்த பிர்ஷூ-வுக்கு வெளி மாநிலத் தொழிலாளர்களான அவருடைய நண்பர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து கூறியிருக்கின்றனர். ஆனால் மகிழ்ச்சியடைவதற்கு பதில் பிர்ஷூ-வுக்கு திடீரென பயம் தொற்றிவிட்டது. பரிசுத்தொகையைக் கைப்பற்றுவதற்காக தன்னை யாராவது தாக்கலாம், அல்லது வேறு ஏதாவது செய்துவிடலாம் என்ற பயத்தில் அவருக்குக் குளிர்காய்ச்சல் வந்துள்ளது. இதையடுத்து அவர் வசித்த அறையிலிருந்து லாட்டரிச் சீட்டை தூக்கிக்கொண்டு தம்பானூர் காவல் நிலையத்தை நோக்கி ஓடினார். அங்கிருந்த போலீஸாரிடம் தனக்கு பயமாக உள்ளதாகவும், தனக்குப் பாதுகாப்பு வேண்டும் எனவும் கதறியிருக்கிறார். மேலும் லாட்டரிச் சீட்டை வங்கியிலோ அல்லது லாட்டரித் துறையிலோ ஒப்படைக்க உதவ வேண்டும் எனவும் பிர்ஷூ கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து ஃபெடரல் வங்கி மேலார் காவல் நிலையத்துக்கு அழைக்கப்பட்டார். போலீஸார் முன்னிலையில் லாட்டரிச் சீட்டை வங்கி மேலாளரிடம் ஒப்படைத்தார் பிர்ஷூ. மேலும் பிர்ஷூவின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு போலீஸார் அவரை வேறு இடத்தில் தங்கவைத்துள்ளனர். பிர்ஷூ பணத்தைப் பெற்றுக்கொண்டு தனது சொந்த ஊருக்குச் செல்லும் வரை போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என கேட்டுள்ளார். பிர்ஷூ இப்போது 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பில் உள்ளார்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு லாட்டரிச்சீட்டில் பரிசு விழுந்தால், பரிசுத்தொகையைப் பெறும் நடைமுறை எளிதானது. குறுகிய காலத்தில் அந்த பரிசுத்தொகை வங்கிக் கணக்கில் வந்துவிடும். அதே சமயம் கேரளாவைத் தவிர்த்து வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றால், லாட்டரிச்சீட்டைப் பணமாக மாற்ற பல நடைமுறைகள் உள்ளன. எனவே காலதாமதம் ஆகும். ஒரு லட்சம் ரூபாய் வரையிலான பரிசுத்தொகையை மாவட்ட லாட்டரித்துறை அலுவலகத்தில் ஒப்படைத்துப் பணமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
அதே சமயம் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றால் திருவனந்தபுரம் லாட்டரி இயக்குநர் அலுவலகத்தில் நோட்டரி பப்ளிக் சான்றுடன் செல்ல வேண்டும். வெளிமாநிலங்களில் கேரளா மாநில லாட்டரியை விற்பனை செய்யக் கூடாது என்பதால், லாட்டரிச்சீட்டில் பரிசு விழுந்த நபர் கேரளாவுக்கு வந்தபோது லாட்டரி வாங்கியதை நிரூபிக்க வேண்டும். இதுபோன்ற நடைமுறைகளால் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் லாட்டரி பரிசுத்தொகையை பெற்றுக்கொள்ள சற்று காலதாமதம் ஆகும்.
from India News https://ift.tt/qf84c0y
0 Comments