ஆகஸ்ட் 20-ம் தேதி மதுரையில் நடைபெறும் அதிமுக மாநில மாநாட்டை முன்னிட்டு, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் மரக்கன்றுகளை அதிமுகவினர் வழங்கி வருகிறார்கள்.
ரேஸ்கோர்ஸ் அருகே பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி ஆர்.பி.உதயகுமார் பேசும்போது, "பொதுச் செயலாளர் எடப்பாடி தலைமையில் வீர வரலாற்றில் பொன்விழா எழுச்சி மாநாடு ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான மக்களை பங்கேற்க செய்யவும், மதுரை நகரத்தை பசுமையாக்கும் இலக்குடன் கழக அம்மா பேரவையின் சார்பில் மரக்கன்று வழங்கி வருகிறோம்.
இதே மதுரையில்தான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பல மாநாடுகளை நடத்தினார்கள். முதலமைச்சராக பொறுப்பேற்று முதலாவதாக மதுரை உலகத்தமிழ் சங்கத்தில் நடந்த அரசு விழாவில்தான் எடப்பாடி பங்கேற்றார்.
அதனைத் தொடர்ந்து மதுரையில் ஒரு லட்சம் பேர் பங்கேற்ற இளைஞர் பெருவிழாவில் பங்கேற்றவர், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முதலில் மதுரையில் தொடங்கி பின்பு அனைத்து மாவட்டங்களிலும் நடத்தி அம்மாவின் கனவை நனவாக்கினார்.
புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்டதுபோல் கருணாநிதிக்கும் நூற்றாண்டு விழாவை கொண்டாட முயற்சி செய்தார்கள். அதில் விளம்பரத்தை தவிர வேறு ஒன்றுமில்லை. தென் தமிழகத்தின் வளர்ச்சிக்காக மதுரைக்கு 55 முறை வருகை தந்து பல திட்டங்களை எடப்பாடியார் தந்தார்.
தற்போது தமிழகத்தில் கடுமையாக விலைவாசி உயர்ந்துள்ளது. சட்டம் ஒழுங்கும் சீர்கேடாகியுள்ளது. இந்த குடும்ப ஆட்சிக்கு சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து மீண்டும் எடப்பாடியார் தலைமையில் ஆட்சி மலரும் வகையில் மதுரை மாநாடு அமைய உள்ளது. உதயநிதியை முதலில் அமைச்சர்கள் புகழ்ந்தார்கள். தற்போது முதலமைச்சரே புகழ்கிறார்.
விளையாட்டுத் துறையை எடுத்துக்கொண்டால் தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் அதிகம் பங்கேற்காத அவல நிலை ஏற்பட்டுள்ளது. உதயநிதி ரசிகர் மன்றத்தலைவராக இருக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் துறையில் கடந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 50,000 மாணவர்களும், 10-ம் வகுப்பில் 50,000 மாணவர்களும் தேர்வு எழுதவில்லை.
உதயநிதி அமைச்சராக வந்த பின்பு விளையாட்டுத்துறையில் புத்துணர்ச்சி ஏற்பட்டதாக ஸ்டாலின் கூறுகிறார். எந்த புத்துணர்ச்சியும் ஏற்படவில்லை. தமிழகத்தில் இருக்கும் விளையாட்டு மைதானங்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் முழுவதும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று கூறினார்கள் எதுவும் நடக்கவில்லை. வெறும் வார்த்தை ஜாலம்தான் அவர்களிடம் உள்ளது.
ஸ்டாலின் தன் மகனைப் புகழ்வதை பார்க்கும்போது நாடு எங்கே செல்கிறது என்று தெரியவில்லை. இதற்கு மக்கள்தான் தீர்ப்பு சொல்ல வேண்டும். மகளிர் உரிமை திட்டம் குறைப்பிரசவமாகும். இந்த திட்டத்திற்கு கருணாநிதி பெயரை சூட்டியுள்ளனர். கருணாநிதியின் சொத்தை விற்று இத்திட்டத்தை தொடங்கவில்லை. இன்றைக்கு கடன் வாங்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் கூறியுள்ளார் அந்த குற்றச்சாட்டிற்கு இதுவரை ஸ்டாலின் பதில் கூறவில்லை .
திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்காக குரல் கொடுக்கவில்லை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் கூட மக்களுக்கு நினைவில் இல்லை. இன்றைக்கு திமுக ஆட்சிக்கு கண்டம் ஏற்பட்டுள்ளது. அமலாக்கத்துறை சோதனை, வருமான வரி சோதனைகள் நடைபெறுகிறது. அதிமுக இயக்கம் வலுவாக உள்ளது. இந்த இயக்கத்துக்கு எதிராக சூழ்ச்சி செய்பவர்கள் வெறும் சருகுகள்தான்" என்றார்.
from India News https://ift.tt/C8hGnRL
0 Comments