முதல்வர் பேசும்போது அலறிய மைக் செட்... வழக்கு பதிந்து சவுண்ட்ஸ் உரிமையாளரை விசாரித்த போலீஸ்!

கேரள மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி கடந்த வாரம் காலமானார். அவருக்கு இரங்கல் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காங்கிரஸ் கட்சி சார்பில் திருவனந்தபுரம் ஐயங்காளி ஹாலில் நடந்த இரங்கல் கூட்டத்துக்கு முதல்வர் பினராயி விஜயனும் அழைக்கப்பட்டிருந்தார். இதில் கலந்து கொண்டு பினராயி விஜயன் பேசும்போது, திடீரென மைக் அலறியது. இதனால் அரங்கத்தில் சற்று பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஒரு நிமிடத்தில் மைக் சரிசெய்யப்பட்டுவிட்டது.

இந்த நிலையில் முதல்வர் நிகழ்ச்சியில் மைக் அலறிய சம்பவம் குறித்து திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் போலீஸ் வழக்கு பதிவு செய்தது. முக்கிய பிரமுகர் பேசும்போது மைக் அலறல் ஏற்படுத்தி பொது பாதுகாப்பை பாதிக்கும் வகையில் நடந்துகொண்டதாகவும், அவமானப்படுத்தும் வகையில் செயல்பட்டதாகவும் மைக் செட் ஆபரேட்டர் மீது திருவனந்தபுரம் கண்டோன்மெண்ட் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

உம்மன் சாண்டி

குற்றவாளி யார் என பெயர் குறிப்பிடாமல் வழக்கு பதிவு செய்த நிலையில் வட்டியூர்காவு எஸ்.பி சவுண்ட்ஸ் உரிமையாளர் ரஞ்சித்தை காவல் நிலையத்துக்கு வரவழைத்ததுடன், அவரின் மைக், ஆம்பிளிபயர், மைக்குக்கு பயன்படுத்தும் கேபிள்கள் உள்ளிட்டவைகளை போலீஸார் காவல் நிலையத்துக்கு கொண்டுவரும்படி கூறினர். ரஞ்சித்தும் மைக் செட்டுகளை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றார். இந்த சம்பவம் கேரள அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தலைவர்கள் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். விஷயம் சர்ச்சை ஆனதைத்தொடர்ந்து முதல்வர் பினராயி விஜயன் தலையிட்டு மைக்கை திரும்ப ஒப்படைக்கும்படி கூறியதாக தகவல் வெளியானது.

பினராயி விஜயன் பேசும்போது மக்கர் செய்த மைக்

மேலும், பொதுப்பணித்துறையின் எலக்ட்ரானிக் பிரிவு அதிகாரிகள் மைக் உள்ளிட்டவைகளை பரிசோதித்தனர். அதில் மைக் ஆபரேட்டர் வேண்டும் என்றே மனப்பூர்வமாக இதைச் செய்யவில்லை என்றும், தொழில்நுட்ப கோளாறுதான் காரணம் என கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மைக் செட் உள்ளிட்டவை அதன் உரிமையாளரான ரஞ்சித்திடம் ஒப்படைக்கப்பட்டது. முதல்வர் பினராயி விஜயன் பேசிய மேடையில் மைக் அலறியது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸ் நடவடிக்கை விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.



from India News https://ift.tt/Tkze0ah

Post a Comment

0 Comments