முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், "இந்தியாவின் ஜனநாயகத்தை, அரசியல் சட்ட நெறிமுறைகளைக் காப்பாற்ற இந்தியாவே அணி திரண்டு விட்டது என்பதைத்தான் பாட்னா கூட்டம் உணர்த்துகிறது. எங்களது அரசியல் இலக்கு நிச்சயம் வெல்லும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. காங்கிரஸையும் இணைத்துக் கொண்டுதான் பா.ஜ.க-வை எதிர்க்க வேண்டும்.
3-வது அணி அமைப்பது, பா.ஜ.க-வுக்கு மறைமுகமாக உதவி செய்வதாக ஆகிவிடும். பா.ஜ.க-வுக்கு எதிரான கட்சிகள் பிரிந்து இருப்பதால் மட்டுமே அது வெற்றி பெறுகிறது. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்தால் பா.ஜ.க வீழ்ந்துவிடும். காங்கிரஸுக்கும் மற்ற சில மாநிலக் கட்சிகளுக்குமான முரண்பாடு என்பது காலப் போக்கில் மறைந்துவிடும். நாங்கள் நினைக்கும் அணி சேர்க்கை அமைந்தால் நிச்சயமாக பா.ஜ.க-வின் மக்கள் விரோத ஆட்சி வீழ்த்தப்படும்.
ராகுல் காந்தியின் பயணம், மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. அவர் இந்தியாவின் நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறார்" என தெரிவித்திருக்கிறார். இதேபோல் கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போதும் தெரிவித்திருந்தார்.. எனவே தொடர்ந்து ராகுல் காந்தியை முன்னிறுத்தி பேசிவரும் முதல்வர் ஸ்டாலினின் பார்வை எப்படியானது?.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், "மற்ற மாநிலக் கட்சிகளைவிட காங்கிரஸ் கட்சிக்கு அனைத்து மாநிலங்களிலும் நல்ல செல்வாக்கு இருக்கிறது. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஜார்கண்ட் என பல இடங்களில் இருக்கும் நல்ல செல்வாக்கை இதற்கு எடுத்துக்காட்டாக கூற முடியும். பாஜக-வுக்கு மாற்றாக காங்கிரஸ் தான் இருக்கிறது.
அதில் சக்திவாய்ந்த தலைவராக ராகுல் காந்தி இருக்கிறார். இந்தியாவில் மோடிக்கு அடுத்தபடியாக ராகுலுக்கு தான் செல்வாக்கு இருக்கிறது. மற்ற மாநில தலைவர்களுக்கு அவ்வளவு செல்வாக்கு இல்லை. எனவே அவரை முன்னிலை படுத்தும் ஸ்டாலின் முடிவு சரியானது. இதற்கு மற்ற மாநில கட்சிகள் வேண்டுமானால் எதிர்ப்பு தேர்விக்கலாமே தவிர ஸ்டாலின் தெளிவாக இருக்கிறார். 2019-ல் இருந்து சொல்லி வருகிறார். எனவே ஸ்டாலினின் முடிவு சரியானது" என்றார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், "கடந்த காலத்தில் தலைவர் சொல்லும்போது பரவலாக மக்கள் அறியாத சூழல் இருந்தது. தேசிய கட்சியின் தலைவராக இருந்தும் அவர் மக்களிடம் இறங்கி வராத சூழல் இருந்தது. ஆனால் அப்போதே ராகுல் மக்களுக்கான தலைவராக இருப்பார் என்பதை தலைவர் உணர்ந்திருந்தார்.
அப்போது காங்கிரஸ் காட்சியிலேயே பலர் அதை உணரவில்லை. ஜோடோ யாத்திரைக்கு பிறகு மக்கள் மனதில் அவர் ஈர்க்கப்பட்டிருக்கிறார். அதேநேரத்தில் ராகுல், "இந்த யாத்திரை தொடங்குவதற்கு முன்பு என்னிடம் இருந்தது வேறு. தற்போது இருக்கும் ராகுல் வேறு. நான் சொல்லி மக்கள் கேட்க வேண்டும் என்று தான் பயணத்தை தொடங்கினேன். ஆனால் மக்கள் சொல்வதை நான் கேட்க வேண்டும் என்ற மாறுதல் எனக்குள் ஏற்பட்டிருக்கிறது" என ராகுல் தெரிவித்திருக்கிறார்.
மேலும் அவர் வெளி நாடுகளில் பேசிய போது, "நான் பிரதமராக வரும் பொழுது முதலில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வது தான்" என தெரிவித்திருக்கிறார். எனவே அவருடைய பார்வைகள், செயல்கள் அனைத்தும் மெருகேறியிருக்கிறது. எனவே தலைவர் அன்று சொன்னதும், இன்று சொல்வதும் ஒன்று தான். அன்று தலைவர் புரிந்து கொண்டதை தற்போது மக்கள் புரிந்துள்ளனர். இந்தியாவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது" என்றார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "எப்போதும் குற்றவாளிகளை ஆதரிப்பதே ஸ்டாலினுக்கு வழக்கமாகிவிட்டது. ஒரு தண்டனை குற்றவாளி. இந்தியாவில் சாதியை, மதத்தை இழிவாக பேசி 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றிருக்கக்கூடியவர். தன்னுடைய சொந்த கட்சி காரர்களையே படுகொலை செய்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை மேற்கு வங்கத்தில் கண்டிக்க முடியாத ராகுல் காந்தியை, இந்தியாவின் எதிர்க்காலம் என்று ஸ்டாலின் சொல்கிறார். இது அவரது மனநிலை எப்படி பட்டது என்பதை காட்டுகிறது" என்றார்.
ஸ்டாலின் தொடர்ந்து ராகுலை முன்னிறுத்துவது குறித்து திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களின் கருத்துகளை இன்னும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. மேலும், எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைய முயற்சிகள் எடுக்கப்படுகிறதே தவிர, இன்னும் கூட்டணி உறுதியாகவில்லை. உறுதியான பின்னரே மற்ற மாநில கட்சிகளின் முடிவு இதில் வெளிப்படும். திமுக-வை பொறுத்தவரை காங்கிரஸுடனான கூட்டணி உறுதியாக இருப்பதால் அந்த கருத்தை முன்க்கூட்டியே சொல்கிறார்கள் என்கிறார்கள். ராகுலை முன்னிறுத்துவதை மற்ற கட்சிகள் ஏற்குமா என்பதெல்லாம் போக போக தான் தெரியும்..!
from India News https://ift.tt/NXHz2Ee
0 Comments