பா.ஜ.க கூட்டணியில் அ.தி.மு.க இருக்கிறதா, இல்லையா என்று ஒரு பட்டிமன்றமே நடந்துகொண்டிருக்கிறது. அ.தி.மு.க-வுடன் பா.ஜ.க கூட்டணி வைக்கக்கூடாது என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாக எல்லாம் தகவல் வெளியானது. இந்தக் கூட்டணியை அண்ணாமலை விரும்பாத காரணத்தால், இந்தப் பிரச்னை தொடர்ந்து நீடிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு, பா.ஜ.க-வின் ஐ.டி பிரிவு தலைவர் நிர்மல்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் சிலர், அ.தி.மு.க-வில் இணைந்த விவகாரம், அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களை ஆத்திரமடையச் செய்தது.
சென்னையில் நடைபெற்ற பா.ஜ.க கூட்டம் ஒன்றில் பேசிய அண்ணாமலை, ‘நான் தேசிய மேனேஜர் அல்ல... நான், கட்சியின் மாநில தலைவர். தமிழ்நாட்டில் பா.ஜ.க-வை வெற்றிபெற வைப்பதற்கான உத்திகள் என்னிடம் இருக்கின்றன. என் ஸ்டைலில் செயல்பட முடியாதபோது நான் ராஜினாமா செய்து விட்டு ஒரு தொண்டனாகவே இருப்பேன்’ என்று ஆவேசப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அது, அ.தி.மு.க., பா.ஜ.க ஆகிய இரு கட்சிகளுக்கும் உள்ளேயும் சலசலப்பை ஏற்படுத்தியது.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அண்ணாமலைக்கும் இடையிலான வார்த்தைப் போரின் விளைவாக, எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை பா.ஜ.க-வினர் எரித்தனர். பதிலுக்கு அண்ணாமலையின் படத்தை அ.தி.மு.க-வினர் எரித்தனர். இரண்டு கட்சிகளின் நிர்வாகிகளும் எதிரும் புதிருமாக பேட்டியளித்தனர். அது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்தச் சூழலில், பா.ஜ.க-வுடனான கூட்டணி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “கூட்டணி பற்றி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தமிழ்நாட்டிலுள்ள மாநிலத் தலைவர்களால் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி குறித்து முடிவு எடுக்க முடியாது. அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி பற்றி முடிவெடுக்க வேண்டியவர்கள் டெல்லியிலுள்ள தேசியத் தலைவர்கள்தான். அவர்கள், அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி தொடரும் என்று ஏற்கெனவே கூறவிட்டனர்“ என்றார்.
ஆனால், அதே உறுதியுடன் பா.ஜ.க-வுடனான கூட்டணி பற்றிய கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி இப்போது பதில் அளிக்கவில்லை. சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமையகத்தில் செய்தியாளர்களுக்கு ஜூலை 5-ம் தேதி பேட்டியளித்தார் எடப்பாடி பழனிசாமி. அப்போது, அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் கூட்டணி தொடர்கிறதா என்ற கேள்விக்கு, “இப்போது தேர்தல் இல்லையே. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது” என்று அவர் பதில் அளித்திருக்கிறார்.
மேலும் அவர், “தேர்தல் வரும்போது நிச்சயமாக பத்திரிகையாளர்களை அழைத்து, எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம் என்பதைச் சொல்வோம். பா.ஜ.க-வுடன் உறவு எப்படி இருக்கிறது என்பதை ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டோம்” என்றார். பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணியில்தான் இருக்கிறது என்கிற வார்த்தை அவரிடமிருந்து வரவில்லை.
அதுபோல, பொது சிவில் சட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “இது பற்றி 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறோம்” என்றார். அ.தி.மு.க-வின் அந்த தேர்தல் அறிக்கையில், சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் ஒரே சீரான சட்டம் கொண்டுவர அரசியல் சட்டத்தில் திருத்தம் எதுவும் கொண்டுவர வேண்டாம் என்று மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று கூறப்பட்டிருக்கிறது.
இப்போது, பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவான பிரசாரத்தை பிரதமர் மோடியே தொடங்கிவைத்திருக்கிறார். பொது சிவில் சட்டம் என்பது பா.ஜ.க-வின் மிக முக்கிய அரசியல் செயல் திட்டங்களில் ஒன்று. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற பொது சிவில் சட்டம் பெரிதும் கைகொடுக்கும் என்பது பா.ஜ.க உறுதியாக நம்புகிறது. அப்படியிருக்கும்போது, பொது சிவில் சட்டத்தை எதிர்ப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதை பா.ஜ.க ரசிக்கவில்லை.
அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தால்தான் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க-வால் வெற்றிபெற முடியும் என்று நினைக்கும் பா.ஜ.க-வின் நலன்விரும்பிகள், ‘பா.ஜ.க-வை எடப்பாடி பழனிசாமி சீண்டிப்பார்க்கிறாரா...’ என்று எரிச்சலடைக்கிறார்கள். அரசியல் நோக்கர்களோ, அமலாக்கப்பிரிவு, வருமானவரித் துறை, சி.பி.ஐ போன்ற மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் ஆக்டிவ் ஆக இருக்கும்போது, பா.ஜ.க-வைவிட்டு எடப்பாடி பழனிசாமி விலகிப்போக மாட்டார் என்கிறார்கள்.
from India News https://ift.tt/K489F6W
0 Comments