DMK Files: ``அண்ணாமலை ஒரு காலி பானை..!" - கொதிக்கும் ஆர்.எஸ்.பாரதி

தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை 'தி.மு.க., ஃபைல்ஸ் 2' என்ற பெயரில், தி.மு.க., அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அடங்கிய புகார்களை தமிழக ஆளுநரிடம் அளித்துள்ளார். இந்நிலையில், திருச்சியில் தி.மு.க., டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர் பயிற்சிப் பாசறைக் கூட்டத்திற்கு வந்த, தி.மு.க.,அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

தமிழக ஆளுநருடன் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சந்திப்பு

அண்ணாமலை ஆளுநரிடம் கொடுத்த புகார்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, ``இரண்டு நாள்களுக்கு முன்பாக தி.மு.க., மகளிரணி சார்பாக நாடு முழுவதும் மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. 2019 தேர்தலில் தமிழ்நாட்டில் மோடிக்கு எதிரான அலை எப்படி வீசியதோ, அதைவிட அதிகமான அலை வீசுவது தேர்தல் களத்தின் தொடக்கத்திலேயே தெரிகிறது.

வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க., 40 தொகுதிகளிலும் வெற்றி பெற இருக்கின்ற சூழலில், மக்களுடைய கவனத்தை திசை திருப்ப வேண்டும் என்பதற்காகவே சிலர் சில வேலைகளைச் செய்து வருகின்றனர். தி.மு.க., அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. குறிப்பாக தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை அவர்கள் இரண்டு நாள்களாக தமிழ்நாட்டு மக்களிடையே இருக்கின்ற எழுச்சியைப் பார்த்துவிட்டு திசை திருப்புவதற்காக ஆளுநரிடம் ஏதோ ஒரு புகாரைக் கொடுத்திருக்கிறார். அவர் கொடுத்த மனுவில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. கவர்னரிடம் நாங்களும் கடந்த காலங்களில் புகார் கொடுத்திருக்கிறோம். ஆனால், புகாரில் ஒரு முகாந்திரம் இருக்க வேண்டும். 1995-ல் நாங்கள் கொடுத்த புகார் தான் நிரூபிக்கப்பட்டு, ஜெயலலிதா உள்பட நாங்கள் புகார் கொடுத்த அத்தனை அமைச்சர்களுக்கும் தண்டனை கிடைத்தது.

ஆர்.எஸ்.பாரதி

இதேபோலத் தான் ஏப்ரல் 14-ம் தேதி ஒரு பெரிய பட்டியலை வெளியிடப் போகிறேன் என்ற அண்ணாமலை, கடைசியில் சொத்து விபரங்களை வெளியிட்டார். ஆளுநரிடத்தில் அண்ணாமலை கொடுத்துள்ள புகாரை தமிழக அரசுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். தி.மு.க-வினர் மீதான அனைத்து வழக்குகளையும் சட்டரீதியாக சந்தித்து வருகிறோம். அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு வரிக்கு வரியாக பதிலளிக்க முதலமைச்சர் தயார்" என்றார்.

தொடர்ந்து பேசியவர், ``அண்ணாமலை எல்லைமீறி பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆருத்ரா நிதி நிறுவனத்தின் 2,500 கோடி ரூபாய்க்கும் அண்ணாமலை தான் பினாமி என நாங்களும் சொல்லலாம். ஆனால், அதனை நாம் நிரூபிக்க வேண்டும் அல்லவா!... எனவே நாம் சொல்லுகின்ற புகாரில் முகாந்திரம் இருக்க வேண்டும். மணிப்பூர் விவகாரம் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தாய்மார்களையும் உலுக்கியிருக்கிறது. இதை திசை திருப்புவதற்காகவும், மனிப்பூர் சம்பவத்திற்கு எதிரான தி.மு.க.,வின் போராட்டம் மற்றும் திருச்சியில் நடைபெற்ற தி.மு.க., கூட்டத்தின் எழுச்சியை திசை திருப்புவதற்காகவும் அண்ணாமலை புகார் கொடுத்திருக்கிறார்.

அண்ணாமலை - ஆர்.எஸ் பாரதி

அண்ணாமலை எந்தக் கேள்வி கேட்டாலும் அதற்கு வார்த்தைக்கு வார்த்தை பதில் சொல்ல தி.மு.க., தயாராக இருக்கிறது. அண்ணாமலை ஒரு போலீஸ் ஆபீஸராக இருந்தவர். அவருக்கு இந்த மாதிரியான விசாரணைகளில், பட்டியல்களை வெளியிடுவதில் ஆர்வம் இருக்கத்தான் செய்யும். போலீஸ் போடும் எல்லா வழக்குக்குகளும் நிரூபிக்கப்படுகிறதா? அண்ணாமலை போட்ட ஒரு வழக்கு கூட கர்நாடகாவில் நிரூபணமாகவில்லை. அவர் போட்ட ஒரு வழக்கு கூட நீதிமன்றத்தில் நிற்கவில்லை என்கிறார்கள். அ.தி.மு.க., சார்பில் 66 எம்.எல்.ஏக்களும், பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் 4 பேரும் இருக்கிறார்கள். எங்களுடைய 2 ஆண்டு தி.மு.க., ஆட்சியில் என்ன தவறு இருக்கிறதென்று இவர்கள் சட்டமன்றத்தில் பகிரங்கமாக சொல்லட்டும், பதில் சொல்வதற்கு முதலமைச்சர் தயாராக இருக்கிறார். இப்போதெல்லாம் போகிற போக்கில் ஊழல் குற்றச்சாட்டுகளை வைப்பது ஃபேஷன் ஆகிவிட்டது. அண்ணாமலை ஒரு காலி பானை. 'Empty vessels make more noise' என்று சொல்வார்களே, அதைப்போல அண்ணாமலை வெறும் சத்தங்களை மட்டும் தான் எழுப்பிக் கொண்டிருக்கிறார்" என்றார்.



from India News https://ift.tt/wTIJ35j

Post a Comment

0 Comments