இந்தியாவில் 3 ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள், குழந்தைகள் மாயம்... `பகீர்' கிளப்பும் NCRB ரிப்போர்ட்!

இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள், கடத்தல் மற்றும் கொலைக் குற்றங்கள் சமீபகாலமாக அதிகரித்திருப்பது, மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு அரசு இயந்திரங்கள் பல்வேறு நடவடிக்கைகளையும், முன்னெடுப்புகளையும் மேற்கொண்டு வந்தாலும், பெண்களுக்கு எதிரான கொடுங்குற்றங்கள் சமூகத்தில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில், இந்தியா முழுவதும் 2019-ம் ஆண்டு முதல் 2021 வரையிலான மூன்று ஆண்டு காலகட்டத்தில், 13 லட்சம் குழந்தைகள் மற்றும் பெண்கள் காணவில்லை என்ற தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) அறிக்கை, தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 

NCRB

மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 10,61,648 பேரும், 18 வயதுக்குக் கீழான 2,51,430 சிறுமிகளும் 2019 முதல் 2021 வரையிலான இந்த மூன்றாண்டுக் காலகட்டத்தில் காணாமல்போயிருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறது.

அதில் அதிகப்படியான பெண்கள் மற்றும் குழந்தைகள் காணாமல்போன மாநிலங்களின் பட்டியலில் மத்தியப் பிரதேசம் முதலிடத்தில் இருக்கிறது. அந்த மாநிலத்தில் 1,60,180 பெண்களும், 38,234 சிறுமிகளும் மூன்றாண்டுகளில் காணாமல்போயிருக்கின்றனர்.

பட்டியலில் இரண்டாவது மாநிலமாக, மேற்கு வங்கத்தில் 1,56,905 பெண்களும், 36,606 சிறுமிகளும் காணாமல்போயிருப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல மகாராஸ்டிராவில் 1,78,400 பெண்களும், 13,033  சிறுமிகளும் காணாமல்போயிருக்கின்றனர் என்ற தரவுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

இவர்கள் எதற்காகக் கடத்தப்பட்டார்கள், எதற்காக காணாமல்போனார்கள், இவர்கள் காணாமல்போனதற்கான காரணங்கள் என்ன என்று, இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று என்.சி.ஆர்.பி தெரிவித்திருக்கிறது. ஆனால் தெலங்கானாவில் மட்டும் காணாமல்போன பெண்கள் மற்றும் சிறுமிகளில் 87 சதவிகிதம் பேர் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக, அந்த மாநிலக் காவல்துறை தகவல் தெரிவித்திருக்கிறது.

பெண் கடத்தல்

அந்த மாநிலக் காவல்துறையானது கடந்த மூன்று ஆண்டுகளில் காணாமல்போன பெண்கள் மற்றும் குழந்தைகளில் 87 சதவிகிதம் பேரை மீட்டிருப்பதாகக் கூறியிருக்கிறது. அப்படி மீட்கப்பட்டவர்கள் கடத்தப்பட்டு பாலியல் சுரண்டல்கள், குழந்தைத் தொழிலாளர்கள், கொத்தடிமை முறை, கட்டாயப்படுத்தி யாசகம் செய்ய வைப்பது, குழந்தைத் திருமணத்துக்குக் கட்டாயப்படுத்தப்படுவது போன்ற கடுமையான குற்றச் செயல்களுக்கு நல்வாய்ப்பாக ஆளாகவில்லை.

தெலங்கானா காவல்துறை

``காணாமல்போனவர்கள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் தெலங்கானா காவல்துறை பதிவுசெய்து, உடனடியாக அதற்கு ஏற்றவாறு விசாரணை நடத்தி, காணாமல்போனவர்களை விரைவாகக் கண்டுபிடிப்பதிலும், அவர்களை மீட்பதிலும், அதன் பிறகு அதற்கான ஆலோசனைகளையும் வழங்கி பாதுகாப்பு அளிப்பதில் தெலுங்கானா முதன்மை மாநிலமாக இருக்கிறது" என்று தெலங்கானா காவல்துறை தெரிவித்திருக்கிறது.



from India News https://ift.tt/ljkLCni

Post a Comment

0 Comments