ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் தப்ரேஸ் அன்சாரி (24). 2019-ம் ஆண்டு, ஜூன் 17-ம் தேதி தாட்கிடி கிராமத்தில் ஒரு வீட்டில் திருட முயன்றதாகச் சந்தேகத்தின்பேரில், 13 பேர் சேர்ந்த கும்பலால் தாக்கப்பட்டார். கிட்டத்தட்ட 12 மணி நேரம் கிராமத்தின் பொது கம்பத்தில் கட்டிவைக்கப்பட்டு 'ஜெய் ஶ்ரீராம், ஜெய் அனுமான்' கூறுமாறு கட்டாயப்படுத்தி, தாக்கப்பட்டு, அதன் பிறகே காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்.
இதற்கிடையில், அவரது உடல்நிலை மோசமடைந்ததால், மருத்துவமனையில் அனுமதிப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜூன் 22-ம் தேதி உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து தப்ரேஸ் அன்சாரியின் மனைவி சாஹிஸ்தா, காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் அடைப்படையில் பிரகாஷ் மண்டல், அடையாளம் தெரியாத இன்னும் சிலர்மீது கொலை வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதற்கிடையே, மருத்துவர்கள் அளித்த பிரேத பரிசோதனை அறிக்கையில், 'தப்ரேஸ் அன்சாரி மாரடைப்பால் மரணமடைந்தார்' எனக் குறிப்பிட்டிருந்தது.
அதனடிப்படையில் காவல்துறை, குற்றவாளிகள்மீது பதிவுசெய்திருந்த கொலை வழக்கை, கொலை வெறித் தாக்குதல் வழக்காக மாற்றியது. ஆனால், தப்ரேஸ் அன்சாரி தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் குவியத் தொடங்கின.அதனால், 13 பேர்மீது மீண்டும் கொலை வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக ஜார்கண்ட் செராய்கேலா நீதிமன்றத்தில் நடந்துவந்தது. விசாரணைக்கு நடுவே ஒருவர் மரணமடைந்தார்.
விசாரணையின் முடிவில் போதிய சாட்சியம் இல்லாததால், இருவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில், தப்ரேஸ் அன்சாரி வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், "குற்றவாளிகள் குற்றம் செய்திருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. எனவே, குற்றவாளிகள் 10 பேருக்கும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதிக்கப்படுகிறது" என நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தப்ரேஸ் அன்சாரி திருட முயன்றதற்கான எந்த ஆதாரமும் இதுவரை சமர்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
from India News https://ift.tt/LRtv2iJ
0 Comments